கடைசி நிமிட கோல் மூலம் உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்த ஜெர்மனி

278
Image Courtesy - Getty Images

போட்டி முடியும் நேரத்தில் டோனி க்ரூஸ் போட்ட தீர்க்கமான கோல் மூலம் ஸ்விடன் அணியை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்புச் சம்பியன் ஜெர்மனி உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை மயிரிழையில் தக்கவைத்துக் கொண்டது.

F குழுவில் மூன்று புள்ளிகளை பெற்றிருக்கும் ஜெர்மனி முதல் போட்டியில் தன்னை வீழ்த்திய மெக்சிகோவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜெர்மனி அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற தனது கடைசி குழுநிலை போட்டியில் தென் கொரியாவை வீழ்த்த வேண்டும்.

ஜெர்மனி அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடனேயே ரஷ்ய நேரப்படி சனிக்கிழமை (23) சொச்சி நகரில் ஸ்வீடனை எதிர்கொண்டது. எனினும் போட்டியின் ஆரம்பம் ஜெர்மனி அணிக்கு சாதகமாக இருக்கவில்லை.

கொஸ்டாவின் அதிஷ்ட கோல் மூலம் ஈரானை வென்ற ஸ்பெயின்

ஈரானின் பாதுகாப்பு அரணை மீறி தியாகோ கொஸ்டா பெற்ற அதிஷ்ட கோல் மூலம்….

32 ஆவது நிமிடத்தில் விக்டென் கிளாசன் மைதானத்தின் நடுவில் இருந்து கடத்தி வந்த பந்தை ஜெர்மனி பெனால்டி எல்லைக்குள் ஓலா டொய்வொனனிடம் (Ola TOIVONEN) பரிமாற்றியபோது நெஞ்சால் முட்டி பந்தை கட்டுப்படுத்திய அவர் வேகமாக கடத்திச் சென்று கோல்காப்பாளருக்கு மேலால் தட்டிவிட்டு ஸ்வீடனுக்கு முதல் கோலை பெற்றுக் கொடுத்தார்.

தோற்றால் வெளியேற வேண்டிய நிலையில் இந்த கோல் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

முதல் பாதி: ஜெர்மனி 0 – 1 ஸ்வீடன்

போட்டியின் பெரும்பான்மையான நேரம் ஜெர்மனி வீரர்களின் கால்களிலேயே பந்த சுற்றிக் கொண்டிருந்தது. இதனால் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவிலேயே மார்கோ ரியுஸ் (Marco REUS) ஜெர்மனி அணிக்காக பதில் கோல் போட்டார்.

இந்நிலையில் போட்டி சமநிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் வேளை ஜேரோம் போடென்ஜ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேறியதால் ஜெர்மனி அணி கடைசி பத்து நிமிடங்களும் பத்து வீரர்களுடனேயே ஆட வேண்டி ஏற்பட்டது.

போட்டியின் மேலதிக நேரத்தில் ஆட்டம் நிறுத்தப்படுவதற்கு 3 நிமிடங்களே இருக்கும்போது கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்ட டோனி க்ரூஸ் வலது மூலையிலிருந்து வலைக்குள் உதைத்தார்.

இதன் மூலம் நான்கு முறை உலக சம்பியனான ஜெர்மனி 1962 ஆம் ஆண்டுக்கு பின் அடுத்தடுத்து உலகக் கிண்ணத்தை வென்ற அணியாக இடம்பிடிப்பதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதன்படி F குழுவின் நான்கு அணிகளுக்கும் அடுத்த சுற்றுக்கு முன்னேற தொடர்ந்து வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (27) நடைபெறவிருக்கும் இந்த குழுவின் மெக்சிகோ எதிர் ஸ்வீடன் மற்றும் ஜெர்மனி எதிர் தென் கொரியா போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் 16 அணிகள் சுற்றுக்கு தேர்வாகும் இரண்டு அணிகளும் தீர்மானிக்கப்படும்.    

முழு நேரம்: ஜெர்மனி 2 – 1 ஸ்வீடன்

கோல் பெற்றவர்கள்
ஜெர்மனி – மார்கோ ரியுஸ் 48′, டோனி க்ரூஸ் 90’+5’
ஸ்விடன் – ஓலா டொய்வொனன் 32′

உலகக் கிண்ணத்தில் தொடரும் மெக்சிகோவின் ஆதிக்கம்

Image Courtesy – Getty Images

தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி மூலம் மெக்சிகோ அணி நடப்புச் சம்பியன் ஜெர்மனி இருக்கும் F குழுவில் இருந்து முதல் அணியாக உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை நெருங்கியுள்ளது.

மெக்சிகோ அணி தனது முதல் குழுநிலை போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்ததோடு தற்போது இரண்டாவது போட்டியிலும் வென்று 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இம்முறை உலகக் கிண்ண போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முக்கிய அணிகளில் ஒன்றாக மெக்சிகோ மாறியுள்ளது.

ரொஸ்டொவ் ஒன் டொன்னில் சனிக்கிழமை (23) நடைபெற்ற இந்த போட்டியின் 26 ஆவது நிமிடத்திலேயே பெனால்டி உதை மூலம் மெக்சிகோ அணி முன்னிலை பெற்றது. பெனால்டி எல்லையில் வைத்து தென் கொரிய வீரர் ஜாங் ஹ்யுன் சூ பந்தை தடுக்க முயன்று அது அவரது கையில் பட்டதை அடுத்து வழங்கப்பட்ட பெனால்டியை கார்லோஸ் வேலா (Carlos VELA) இலகுவாக வலைக்குள் புகுத்தினார்.

90ஆவது நிமிடத்தில் கோல் பெற்று செர்பியாவை வென்ற சுவிஸ்

இம்முறை உலகக் கிண்ண போட்டியில் வழங்கப்படும் 14 ஆவது பெனால்டியாக இது இருந்தது.

முதல் பாதி: மெக்சிகோ 1 – 0 தென் கொரியா

போட்டியில் ஆதிக்கத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்ட மெக்சிகோ அணி தனது இரண்டாவது கோல் மூலம் அதனை சிறப்பாக வெளிக்காட்டியது. 66 ஆவது நிமிடத்தில் ஹிர்விங் லொசானோ, தென் கொரிய பின்கள வீரர்களை முழுமையாக முறியடித்து ஜாவியர் ஹெர்னன்டஸிடம் (Javier HERNANDEZ) பந்தை பரிமாற்ற அதனை அவர் அழகாக கோலாக மாற்றினார்.  

வெஸ்ட் ஹாம் கழகத்தின் நட்சத்திர வீரர் ஹெர்னன்டஸ் பெறும் 50 ஆவது சர்வதேச கோலாகவும் இது இருந்தது. இந்த மைல்கல்லை எட்டும் முதல் மெக்சிகோ வீரர் இவராவார்.

போட்டி முடியும் தருவாயில் டொடன்ஹாம் முன்கள வீரர் சொன் ஹியுங் மின் பொனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து உதைத்த ப்ரீ கிக் மூலம் அபார கோல் ஒன்றை புகுத்தியபோதும் தென் கொரிய அணிக்கு அது தாமதித்து கிடைத்த கோலாகவே இருந்தது.

குறிப்பாக 1986 உலகக் கிண்ணம் தொடக்கம் தென் கொரியா பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து 14 கோல்களை புகுத்தியுள்ளது. இந்த காலப்பிரிவில் அந்த அணி பிரேசில் (16) மற்றும் ஜெர்மனி (15) அணிகளிடம் மாத்திரமே பின்தங்கியுள்ளது.       

எனினும் தென் கொரியா தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றிருக்கும் நிலையில் அதிர்ஷ்டம் இருந்தால் மாத்திரமே அதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.    

முழு நேரம்: மெக்சிகோ 2 – 1 தென் கொரியா

கோல் பெற்றவர்கள்

மெக்சிகோ – கார்லோஸ் வேலா 26′ (பெனால்டி), ஜாவியர் ஹெர்னன்டஸ் 66′

தென் கொரியா – சொன் ஹியுங் மின் 90’+3


டியூனிசியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்

ரொமெலு லுகாகு (Romelu LUKAKU) மற்றும் எடன் ஹசார்ட்டின் இரட்டை கோல்கள் மூலம் டியூனிசிய அணியை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 5-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்த பெல்ஜியம் அணி G குழுவில் ஆறு புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நெருங்கியுள்ளது.

லுகாகுவின் இரட்டை கோல் மூலம் அவர் இம்முறை உலகக் கிண்ணத்தில் தங்கப் பாதணிக்கான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் முதலிடத்தில் உள்ளார். இருவரும் இதுவரை தலா நான்கு கோல்களை போட்டுள்ளனர்.

மொஸ்கோவில் இன்று (23) நடைபெற்ற போட்டியின் 6 ஆவது நிமிடத்திலேயே பெனால்டி எல்லைக்குள் ஹாவார்ட் கீழே வீழ்த்தப்பட அதனை பயன்படுத்தி பெல்ஜியம் முதல் கோலை புகுத்தியது. பின்னர் 16 ஆவது நிமிடத்தில் எதிரணி பெனால்டி எல்லையின் கீழ் வலது மூலையில் இருந்த லுகாகு பந்தை வலைக்குள் செலுத்த பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.   

கேள்விக்குறியாகியுள்ள மெஸ்சியின் உலகக் கிண்ண கனவு

எனினும் போட்டி முழுவதிலும் டியூனிசிய அணி ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு 18 ஆவது நிமிடத்தில் அந்த அணியின் டைலான் ப்ரோன், ப்ரீ கிக் உதையை தலையால் முட்டி கோல் பெற்றார். எனினும் டியூனிசிய அணியின் போராட்டம் முதல் பாதி ஆட்டத்திலேயே பலவீனப்பட்டது.  

முதல் பாதி ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் வைத்து தோமன் மியுனியர் பரிமாற்றிய பந்தை லுகாகு கோலாக மாற்றி பெல்ஜியம் அணியை வலுவான முன்னிலைக்கு இட்டுச் சென்றார்.

முதல் பாதி: பெல்ஜியம் 3 – 1 டியூனிசியா

இரண்டாவது பாதி ஆட்டத்தில் டியூனிசிய அணியின் பின்கள வரிசையில் ஏற்பட்ட முறிவை பயன்படுத்திய பெல்ஜியம் அணி மற்றொரு கோலை புகுத்த அந்த அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது. 51 ஆவது நிமிடத்தில் எடன் ஹசார்ட் அந்த கோலை பெற்றார்.

போட்டியை முழுமையாக தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்த பெல்ஜியம் அணி அடிக்கடி டியூனிசிய அணியின் கோல் கம்பத்தை ஆக்கிரமித்தது. இந்நிலையில் 90 ஆவது நிமிடத்தில் மாற்று வீரர் மிச்சி பட்சுவாயி (Michy BATSHUAYI) பெல்ஜியம் அணிக்கு மற்றொரு கோலை புகுத்தினார். மேலதிக நேரத்தில் வஹ்பி கஸ்ரி (Wahbi KHAZRI) டியூனிசியாவுக்காக மேலும் ஒரு ஆறுதல் கோலைப் பெற்றார்.  

இந்த வெற்றியுடன் பெல்ஜியம் அணி G குழுவில் முதலிடத்தை பிடித்தபோதும் அந்த அணி இன்னும் உத்தியோகபூர்வமாக நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பதோடு தனது முதல் இரு போட்டிகளிலும் தோல்வியுற்றிருக்கும் டியூனிசியா இன்னும் தொடரில் இருந்து வெளியேறவில்லை.    

முழு நேரம்: பெல்ஜியம் 5 – 2 டியூனிசியா

கோல் பெற்றவர்கள்

பெல்ஜியம் – எடன் ஹசார்ட் 6′ (பெனால்டி), 51′, ரமெலு லுகாகு 16, 45’+3, மிச்சி பட்சுவாயி 90′

டியூனிசியா – டைலான் ப்ரோன் 18′, வஹ்பி கஸ்ரி 90’+3  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<