பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த வீரர்களின் நம்பிக்கை

401
Getty

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசன், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நேற்று (17) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதமடித்து அசத்தி தமது அணியை மீண்டும் ஒருமுறை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.  

ஒருநாள் அரங்கில் அதிசிறந்த வெற்றியை பதிவுசெய்த பங்களாதேஷ்

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ……….

இம்முறை உலகக் கிண்ணத்தில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து உலகக் கிண்ணத்தில் அதிகளவு ஓட்டங்களைக் குவித்த வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற சகிப், தனது துடுப்பாட்டத்திற்கு செலவழித்த கூடுதல் நேரங்கள் இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிக பலனைக் கொடுத்திருந்ததாக தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி, இந்த இலக்கை துரத்தியடிக்க முடியும் என வீரர்கள் மீது இருந்த நம்பிக்கையினால் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த முடிந்ததாகவும் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”போட்டியின் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்காக வெற்றியொன்றைப் பெற்றுக்கொடுக்க கிடைத்தமை திருப்தியைக் கொடுத்தது. கடந்த ஒன்றரை மாதங்களாக நான் துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தேன். அதற்கான பலனை தற்போது பெற்றுக்கொண்டேன்.

மூன்றாவது இலக்கத்தில் களமிறங்கினால் எனக்கு இன்னும் துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். அதேநேரம், ஐந்தாவது இலக்கத்தில் வந்தால் எனக்கு 30 ஓவர்களுக்குப் பிறகுதான் விளையாட வேண்டிவரும். எனவே, அவ்வாறு நடுத்தர ஓவர்களில் களமிறங்கி விளையாடுவது எனக்கு பொருத்தமாக இருக்காது என கருதினேன்” என தெரிவித்தார்.

முக்கிய தருணங்களில் விக்கெட்டை இழந்ததால் தோற்றோம் – சர்பராஸ்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ………..

முதல் இன்னிங்ஸிற்குப் பிறகு சிறப்பாக துடுப்பெடுத்தாடினால் எம்மால் இந்த ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடித்து வெற்றிபெற முடியும் என நம்பிக்கை வைத்தோம். அதேபோல, மேற்கிந்திய தீவுகள் அணியினரும் நியாயமான ஓட்ட எண்ணிக்கையை வெற்றியிலக்காக நிர்ணயித்திருந்தனர். பந்துவீச்சில் என்னுடன், மெஹிடி ஹசன் மிராஸும் சிறப்பாக பந்துவீசியிருந்தார்.

இந்த ஓட்ட எண்ணிக்கை மிகவும் கடினமான இலக்காக இருக்காது என அனைவரும் உறுதியாக இருந்தனர். அந்த நம்பிக்கையை உடைமாற்றும் அறையில் எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தமை மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது.

அதுமாத்திரமின்றி எமது இன்னிங்ஸின் போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பானதொரு தொடக்கத்தைப் பெற்றுக்கொண்டமை சக வீரர்களுக்கு இன்னும் கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்தது. அதுதான் எமது வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தது என குறிப்பிட்டார்.

நானும் சிறப்பாக விளையாடியிருந்தேன். இது எனது சிறந்த இன்னிங்ஸ் என நான் கருதவில்லை. ஆனாலும், இந்த போர்மை எஞ்சிய போட்டிகளிலும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

இந்த தருணத்தில் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என நான் பங்களிப்பு செய்து வருகிறேன். இது அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய சாதகத்தைக் கொடுக்கின்றது. நாங்கள் இன்னும் நான்கு போட்டிகளில் விளையாட வேண்டும். அதேபோல, அரையிறுதியில் விளையாட வேண்டுமானால் நாங்கள் சிறந்த முறையில் விளையாட வேண்டும் என கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி குறித்து கருத்து வெளியிட்ட சகிப்,

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக எமது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ரசிகர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் உலகக் கிண்ணப் போட்டிகள் முழுவதும் அற்புதமாக இருந்தனர் என தெரிவித்தார்.  

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<