UEFA தொடரில் முதல் வெற்றியை சுவைத்த பார்சிலோனா, செல்சி, ரியல் மட்ரிட்

157
Getty

UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டியானது இவ்வாரம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் ஆரம்பமாகியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஒவ்வொரு அணியும் தமக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான கோல்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.   

ஜரோப்பாவின் சிறந்த கால்பந்து கழகங்களிற்கிடையிலான UEFA இன் சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டி இவ்வாரம் 13ஆம் திகதி ஆரம்பமாகியது. இப்பருவகாலத்திற்கான சம்பியன்ஸ் கிண்ண சுற்றுப் போட்டியில் 13ஆம் திகதி 8 போட்டிகளும், 14ஆம் திகதி 6 போட்டிகளுமாக மொத்தம் 14 போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் நாளன்று நடைபெற்ற போட்டிகளில் மாத்திரம் மொத்தமாக 24 கோல்கள் பெறப்பட்டன.

13ஆம் திகதி நடைபெற்ற போட்டிகளில் செல்சி கால்பந்து கழகம், கிரபாக் கால்பந்து கழகத்துடன் (Qarabag FC) மோதிய போட்டியிலேயே அன்றைய தினத்திற்கான அதிக எண்ணிக்கையிலான கோல்கள் பெறப்பட்டன. இப்போட்டியிலே செல்சி கழகம் 6-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியீட்டியது.

அன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த போட்டியாக, பார்சிலோனா கழகம் ஜுவன்டஸ் கழகத்துடன் மோதிய போட்டியை குறிப்பிடலாம். இப்போட்டியிலே பார்சிலோனா அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவான வெற்றியை பெற்றது. மேலும் லயனல் மெஸ்சி ஜுவன்டஸ் அணியின் கோல் காப்பாளர் பவுனிற்கு எதிராக தனது முதல் கோலை இப்போட்டியில் பெற்றார். போட்டியின் ஆரம்பம் முதலே பார்சிலோனா அணி ஜுவன்டஸ் அணிக்கு சவால் கொடுத்தது. அதன் விளைவாக போட்டியின் முதல் பாதியின் இறுதி தருணமான 45ஆவது நிமிடத்தில் மெஸ்சி  தனது அணிக்கான முதல் கோலை பெற்றுக் கொடுத்தார். அதனை தொடர்ந்து ஜுவன்டஸ் அணியின் பின்களத்திலிருந்த பலவீனத்தை பயன்படுத்தி அய்வன் ரெகடிச் (Ivan Rakitic) 56ஆவது நிமிடத்திலும் மீண்டும் மெஸ்சி 69ஆவது நிமிடத்திலும் கோல்களை பெற்றனர். ஜுவன்டஸ் அணியின் முன்கள வீரர்கள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடத் தவறியதால் அவ்வணி இப்போட்டியில் தோல்வியுற்றது.

பீ.எஸ்.ஜீ (PSG) கால்பந்து கழகம் மற்றும் செல்டிக் (Celtic) கால்பந்து கழகம் மோதிய போட்டியில் பீ.எஸ்.ஜீ அணி 5-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கெய்லன் எம்பாப்பே (Kylian Mbappe) பீ.எஸ்.ஜீ அணியுடனான தனது முதல் கோலை பெற்றார். மேலும் இப்போட்டியில் நெய்மர் மற்றும் கவானி (Cavani) ஆகியோரும் தமது அணி வெற்றிபெற வழிவகுத்தனர்.

அத்துடன் மென்சஸ்டர் யுனைடட் மற்றும் பாசல் (Basel) கழகங்கள் மோதிய போட்டியில் மென்சஸ்டர் யுனைடட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதேவேளை அட்லடிகோ மட்றிட் மற்றும் ரோமா (Roma) கழகங்கள் மோதிய போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

பலம் மிக்க ப்ரில்லியன்டை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது சனிமவுண்ட்

பலம் மிக்க ப்ரில்லியன்டை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது சனிமவுண்ட்

மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய…

அத்துடன் லெவன்டோஸ்கீ (Lewandoski) தியாகோ(Thiago) மற்றும் கீமிச்(Kimmich) ஆகியோர் பெற்ற கோல்களின் மூலம் பயர்ண் மூனிச (Bayern Munich) அணி அன்டர்ல்சட் (Anderlecht) அணிக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கோல்கள் வித்தியாசதததில் வெற்றி பெற்றது. அதேவேளை பென்பிசியா (Benficia) மற்றும் மொஸ்கோ (Moscow) அணிகள் மோதிய போட்டியில் மொஸ்கோ அணி 2-1 என்ற கோல்கள் கணக்கிலும், ஸ்போர்டிங் (Sporting) மற்றும் ஒலிம்பியாஸஸ் (Olympiacos) அணிகள் மோதிய போட்டியில் ஸ்போர்டிங் அணி 3-2 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றி பெற்றன.

14ஆம் திகதி நடைபெற்ற ஆறு போட்டிகளில் டொட்டென்ஹம் (Tottenham) கால்பந்து கழகம் மற்றும் டோர்ட்மன்ட் (Dortmund) கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் டொட்டென்ஹம் கழகம் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றது. போட்டியின் இறுதிவரை ஆட்டத்தில் கூடுதலாக ஆதிக்கம் செலுத்திய டோர்ட்மன்ட் அணியால் டொட்டென்ஹம் கழகத்திற்கு எதிராக ஒரு கோல் மாத்திரமே பெறமுடிந்தது. அதேவேளை டோர்ட்மன்ட் கழகத்திற்கு இப்போட்டியில் தனது பந்துப் பரிமாற்றம் மூலம் டொட்டென்ஹம் கழகம் சவால் கொடுக்கத் தவறினாலும் அவ்வணிக்கு கிடைத்த வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்தி மூன்று கோல்களை பெற்றது. டொட்டென்ஹம் கழகத்திற்காக கேன் (Kane) இரண்டு கோல்களையும் ஹியுங் மின் சன் (Heung Min Son) ஒரு கோலையும் பெற்றார். அதேவேளை டோர்ட்மன்ட் கழகத்திற்காக அன்ட்ரே யார்மலேன்கோ (Andre Yarmolenko) ஒரு கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

மரீபோர் (Maribor) மற்றும் ஸ்பார்டக் மொஸ்க்வா (Spartak Moskva) அணிகள் மோதிய போட்டியானது 1-1 என்ற சமநிலையில் முடிவுற்றது. அத்துடன் றியல் மட்றிட் கால்பந்து கழகம் மற்றும் அபோயில் (Apoel) கால்பந்து கழகம் மோதிய போட்டியில் றியல் மட்றிட் கழகம் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. றியல் மட்றிட் அணிக்காக ஸர்ஜீயோ ராமோஸ் (Sergio Ramos)  ஒரு கோலையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களையும் பெற்றனர். மேலும் லிப்சிக் (Leipzig) கழகம் மற்றும் மோனோகோ (Monaco) கழகம் மோதிய போட்டியானது 1-1 கோல் அடிப்படையில் வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது.

14ஆம் திகதி நடைபெற்ற விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்றாக லிவர்பூல் அணி மற்றும் செவில்லா அணி மோதிய போட்டியைக் குறிப்பிடலாம். போட்டியின் 5ஆவது நிமிடத்திலே லிவர்பூல் கழகத்தின் பின்கள வீரர்களினால் விடப்பட்ட தவறைப் பயன்படுத்தி செவில்லா அணியின் விஸ்ஸாம் பென் யெட்டர் (Wissam Ben Yedder) முதல் கோலை பெற்றார். அதனை தொடர்ந்து விரைவாக செயற்பட்ட லிவர்பூல் அணிக்கு ரொபேடோ பெர்மீனோ (Roberto Firmino) 21ஆவது நிமிடத்திலும் மொஹமட் ஸலாஹ் (Mohammed Salah) 37ஆவது நிமிடத்திலும் இரு கோல்களைப் பெற்று தமது அணியை முதல் பாதியில் முன்னிலைப்படுத்தினர்.

அத்துடன் போட்டியின் 42ஆவது நிமிடத்தில் லிவர்பூல் கழகத்திற்கு கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பை பெற்ற பெர்மீனோ அதனை கோலை நோக்கி உதைந்த போது பந்து கோல் கம்பத்தில்பட்டு வெளியே சென்றது. அதனைத் தொடர்ந்து போட்டியின் இரண்டாம் பாதியிலே லிவர்பூல் அணிக்கு சிறந்த வாய்ப்புக்கள் கிட்டியபோதும் அதனை கோலாக்கும் முயற்சியில் தோல்வியடைந்தனர். எனினும் போட்டியின் 72ஆவது நிமிடத்தில் செவில்லா அணியின் ஜோகீன் கோரேயா (Joaquin Correa) தனக்கு கிடைத்த வாய்ப்யை சிறப்பாக பயன்படுத்தி கோலாக்கினார். இதன் மூலம் போட்டி 2-2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

அன்றைய தினம் நடைபெற்ற மற்றுமொரு போட்டியான போர்டொ (Porto) அணி மற்றும் பெஸிக்டாஸ் (Besiktas) அணி மோதிய போட்டியில் பெஸிக்டாஸ் அணி 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வாரத்திற்கான 13 மற்றும் 14ஆம் திகதில்ளில் நடைபெற்ற மேற்கூறப்பட்ட 14 போட்டிகளின் அடுத்தகட்டப் போட்டிகள் இம்மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறும்.