சாமர சில்வாவுக்கு 2 வருடகால போட்டித் தடை

771
Chamara Silva

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சாமர சில்வாவுக்கு 2 வருடங்களுக்கு சகல கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு காரணமாகவே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட உள்ளூர் முதற்தர அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் B பிரிவில் பாணந்துறை மற்றும் களுத்துறை கிரிக்கெட் கழகங்களுக்கிடையில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி மக்கொன – சர்ரே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டமையைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறித்த கழகம், அதன் தலைவர்கள் மற்றும் வீரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி பாணந்துறை கிரிக்கெட் கழகத்தின் தலைவரும், இலங்கை அணியின் நட்சத்திர வீரருமான சாமர சில்வாவுக்கும், களுத்துறை கிரிக்கெட் கழகத்தின் தலைவர் மனோஜ்  தேவப்பிரியவுக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் 2 வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வீரர்களுக்கு எதிர்வரும் 2 வருடங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கும், பயிற்சிகளைப் பெறுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம், கிரிக்கெட் சம்பந்தமான எந்தவொரு நிர்வாகச் செயற்பாடுகளிலும் பங்குபற்றமுடியாதென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய களுத்துறை அணி, 103 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 390 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாணந்துறை அணி, 68.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 423 ஓட்டங்ளைப் பெற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து 24ஆம் திகதி தமது 2ஆவது இன்னிங்சுக்காக விளையாடிய பாணந்துறை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், 25ஆம் திகதி அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 423 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. எனினும் போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்ட களுத்துறை அணியின் வீரர்கள் 30 மீற்றருக்கு அப்பால் இருந்து களத்தடுப்பில் ஈடுபட்டதாகவும், பாணந்துறை அணியின் தலைவர் சாமர சில்வா சுகயீனம் காரணமாக இடைநடுவே வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

இந்நிலையில் போட்டியின் இறுதிநாளான 25ஆம் திகதி 2ஆவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய களுத்துறை அணி, சீரற்ற காலநிலைக்கு மத்தியில் விளையாடியதுடன், இதில் அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது. ஆனால் அதே தினத்தில் துடுப்பாட்ட வீரர்கள் 607 ஓட்டங்களைக் குவித்திருந்த அதேநேரம், போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்த கயான் சிறிசோம, 12 ஓவர்கள் பந்துவீசி 88 ஓட்டங்களை கொடுத்தமை இப்போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளமையை  உறுதிப்படுத்தியது. இதனையடுத்து B பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம், குறித்த போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்ததையடுத்து, அதுதொடர்பிலான விசேட விசாரணைகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேற்கொண்டதுடன், மூவரடங்கிய விசேட குழுவொன்றையும் நியமித்தது.

இந்நிலையில், சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு அப்போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றமை உறுதி செய்யப்பட்டதுடன், மூவரடங்கிய குழுவின் அறிக்கை நேற்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.

எனவே, குறித்த ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு கழகங்களின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டதுடன், அவ்வணிகளின் தலைவர்களுக்கு 2 வருட போட்டித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த போட்டியின் முடிவுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், குறித்த அணிகளுக்கு 5 இலட்சம் ரூபாவை அபாரதமாக வழங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கழகங்கள் ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக குற்றவாளிகளாக இனங்காணப்படாவிட்டாலும், கிரிக்கெட் விளையாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், அதன்படி நடந்துகொள்வதற்கும் இவ்வாறு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.