மீண்டும் பந்துவீச்சில் அபாரம் காண்பித்த மஹீஷ் தீக்ஷன!

Indian Premier League 2022

190

IPL தொடரில் நேற்று (04) நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சுபர் கிங்ஸ் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

குறித்த இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி தடுமாற்றத்துக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய போதும், மஹிபால் லொம்ரர் (42) மற்றும் தினேஷ் கார்த்திக் (26) ஆகியோரின் சிறப்பான இன்னிங்ஸ் நிறைவின் உதவியுடன் 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

>>IPL Playoffs, இறுதிப் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

இந்தப்போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணிசார்பாக விளையாடிய இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷன மீண்டுமொருமுறை அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்தகாலங்களில் பவர்-பிளே ஓவர்களில் பந்துவீசிய தீக்ஷனவை, சென்னை அணியின் தலைவர் டோனி இறுதி ஓவர்களை வீசும் வீரராக பயன்படுத்தியிருந்தார்.

முதல் இரண்டு ஓவர்களுக்கு 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்த மஹீஷ் தீக்ஷன, 17வது மற்றும் 19வது ஓவரை வீசி வெறும் 8 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்ததுடன், 19வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் லொம்ரர் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச்செய்த மஹீஷ் தீக்ஷன, பந்து ஓவரின் இறுதிப்பந்தில் சபாஸ் அஹ்மட்டின் விக்கெட்டினை வீழ்த்தினார். அதன்படி மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி டெவோன் கொன்வேவின் அற்புதமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தது. இருப்பினும், பந்துவீச்சில் ஓட்டங்களை விட்டுக்கொடுத்த வனிந்து ஹஸரங்க முக்கியமான தருணத்தில் டெவோன் கொன்வேவின் (56) விக்கெட்டை கைப்பற்ற, அதன் பின்னர் சென்னை சுபர் கிங்ஸ் அணி வேகமாக ஓட்டங்களை குவிக்க தவறியது.

எனவே தங்களுடைய 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை சுபர் கிங்ஸ் அணி 160 ஓட்டங்களை பெற்று, 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பெங்களூர் அணி சார்பாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், கிளேன் மெக்ஸ்வேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற, வனிந்து ஹஸரங்க 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

இதேவேளை இந்தப்போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக பெங்களூர் அணி 12 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், சென்னை சுபர் கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<