இம்மாதம் 28ஆம் திகதி முதல் இலங்கை அணியுடன் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடருக்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் இன்று (16) வெளியிடப்பட்டது. இக்குழாமில் அனுபவமிக்க பல முன்னணி வீரர்களுக்குப் பதிலாக 4 புதுமுக வீரர்கள் பாகிஸ்தான் டெஸ்ட் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தெரிவுக் குழுவினால் அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட குறித்த குழாமில் முதற்தடவையாக இளம் வேகப்பந்து வீச்சாளர் மீர் ஹம்சா மற்றும் சகலதுறை ஆட்டக்காரனான பிலால் ஆசிப் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சுற்றுத்தொடர் விபரம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது (PCB)…

கராச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இடது கை வேகப்பந்து வீச்சாளரான மீர் ஹம்சா, கடந்த 4 வருடங்களில் 46 முதற்தரப் போட்களில் விளையாடி 216 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தானின் அணிக்காக விளையாடி தனது அறிமுகத்தைப் பதிவுசெய்த மீர் ஹம்சா, கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வருகின்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 தொடரில் கராச்சி கிங்ஸ் அணியிலும் இடம்பெற்றிருந்தார்.  

மீர் ஹம்சா Image Source – Getty Image  
மீர் ஹம்சா
Image Source – Getty Image

இந்நிலையில், அவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராட்சியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணியுடனான 2 பயிற்சிப் போட்டிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பதினொருவர் அணியில் இடம்பெற்று சிறப்பாக பந்து வீசியிருந்தார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் மேற்கிந்திய அணிகளுடனான டெஸ்ட் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட, அண்மைக் காலமாக பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி, கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவடைந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் முதற்தடவையாக விளையாடி அதிகளவு விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்ற 18 வயதான சதாப் கான் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிலால் ஆசிப் Image Source – Getty Image  
பிலால் ஆசிப்
Image Source – Getty Image

அதேபோல சர்ச்சைக்குரிய பந்து வீச்சுக் குற்றச்சாட்டுக்குள்ளாகி மீண்டும் .சி.சியினால் அனுமதி பெற்று இம்முறை நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம்பிடித்த அவ்வணியின் அனுபவமிக்க வீரரான 36 வயதான மொஹமட் ஹபீஸுக்குப் பதிலாக வெறுமனே 15 உள்ளூர் போட்டிகளிலும், பாகிஸ்தான் அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள 31 வயதான பிலால் ஆசிப் முதற்தடவையாக டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஒரு வருட இடைவெளியின் பிறகு 21 வயதான சமி அஸ்லம் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் மற்றுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஷான் மசூத்தும் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷேசாடின் அதிரடியால் சுதந்திர கிண்ணத் தொடர் பாகிஸ்தான் வசம்

அத்துடன், அண்மையில் ஓய்வு பெற்ற மிஸ்பா உல் ஹக் மற்றும் யூனிஸ்கானின் இடத்தை நிரப்புவதற்காக மத்திய வரிசை வீரர்களான 28 வயதுடைய ஹரிஸ் சொஹைலும், 26 வயதுடைய உஸ்மான் சலாஹுத்தீனும் முதற்தடவையாக பாகிஸ்தான் டெஸ்ட் குழாமில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்காக 2013ஆம் ஆண்டு ஒருநாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட இடதுகை துடுப்பாட்ட வீரரான ஹரிஸ் சொஹைல், இதுவரை 22 ஒருநாள் போட்டிகளிலும், 4 T-20 போட்டிகளிலும் அவ்வணிக்காக விளையாடியுள்ளார். அத்துடன் 57 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 23 அரைச் சதங்கள், 11 சதங்கள் உள்ளடங்களாக 3,849 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

உஸ்மான் சலாஹுத்தீன்   Image Source – Getty Image  
உஸ்மான் சலாஹுத்தீன்  
Image Source – Getty Image

உஸ்மான் சலாஹுத்தீன், பாகிஸ்தானின் 19 மற்றும் 23 வயதுகளுக்குட்பட்ட அணிகளில் இடம்பெற்று 2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுடனான போட்டித் தொடரில் ஒருநாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டவர். வலதுகை துடுப்பாட்ட வீரரான இவர் இதுவரை 92 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 32 அரைச் சதங்கள் மற்றும் 19 சதங்கள் உள்ளடங்கலாக 5,912 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அதேபோல, பாகிஸ்தானின் பலுகிஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் அணி மற்றும் பெஷாவர் சல்மி அணிக்காக விளையாடிவருகின்ற இடதுகை சுழற்பந்து வீச்சாளரான 18 வயதுடைய மொஹமட் அஸ்கர் முதற்தடவையாக பாகிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 33 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 70 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

இதன்படி, பாகிஸ்தான் தெரிவிக்குழுவினால் அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட வீரர்கள் பங்கேற்கும் 5 நாட்களைக் கொண்ட பயிற்சி முகாம் எதிர்வரும் 19ஆம் திகதி லாகூரில் நடைபெறவுள்ளது.

மொஹமட் அஸ்கர் Image Source – Getty Image  
மொஹமட் அஸ்கர்
Image Source – Getty Image

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் தலைவராகச் செயற்பட்டு அவ்வணியை .சி.சியின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கு கொண்டு சென்ற பெருமையைப் பெற்ற மிஸ்பா உல் ஹக், அதேபோல டெஸ்ட் அரங்கில் பாகிஸ்தான் அணிக்காக 10,000 ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமையப் பெற்றுக்கொண்ட யூனிஸ்கான் ஆகிய இருவரும் ஓய்வுபெற்ற பிறகு பாகிஸ்தான் அணி களமிறங்குகின்ற முதலாவது டெஸ்ட் போட்டித் தொடர் இதுவாகும்.

இலங்கை அணியின் நம்பிக்கை தரும் 5 சமிக்ஞைகள்

அத்துடன் இம்முறை சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியை சிறப்பாக வழிநடாத்தி வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றவரும், நிறைவுக்கு வந்த உலக பதினொருவர் அணியுடனான T-20 தொடரிலும் இளம் வீரர்களைக் கொண்ட பாகிஸ்தான் அணிக்கு தலைமைதாங்கி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுக்கொடுத்த சர்பராஸ் அஹமட், டெஸ்ட் அணித் தலைவராக பாகிஸ்தான் அணியை வழிநடாத்தும் முதல் போட்டியாக இத் தொடர் அமையவுள்ளது.

எனவே, முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்டதும், டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொள்ளாத பல வீரர்கள் இலங்கை அணிக்கெதிராக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றாலும், மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக், அஹமட் ஷேசாத், மொஹமட் இர்பான் மற்றும் ஜுனைத் கான் போன்ற அனுபவமிக்க வீரர்கள் அவ்வணியின் இடம்பெறாமை எவ்வாறான மாற்றத்தை பாகிஸ்தான் அணிக்கு கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 2ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவுப் போட்டியாக நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளும், 3 T-20 போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் டெஸ்ட் குழாம்

அசார் அலி, ஷான் மசூத், சமி அஸ்லம், பாபர் அசாம், அசாத் சபீக், ஹரிஸ் சொஹைல், சர்பராஸ் அஹமட் (தலைவர்), உஸ்மான் சலாஹுத்தீன், மொஹமட் ஆமிர், ஹசன் அலி, யாசிர் ஷா, மொஹமட் அஸ்கர், மொஹமட் அப்பாஸ், பிலால் ஆசிப், மீர் ஹம்சா, வஹாப் றியாஸ்