தொண்டர் படையணி மெய்வல்லுனரில் அசாம், ஆஷிக் போட்டிச் சாதனை

255

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவுகளுக்கிடையில் வருடந்தோறும் நடத்தப்படுகின்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

கடந்த காலங்களைப் போல இம்முறை போட்டித் தொடரிலும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதன்போது, 22 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Photo Album : Army volunteer meet 2019 – Day 2

இதுஇவ்வாறிருக்க, தொண்டர் படையணி மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 10 அம்சப் போட்டியில் மொஹமட் அசாம் மற்றும் ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் மொஹமட் ஆஷிக் ஆகிய இரு வீரர்களும் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கங்களை வெற்றிகொள்ள, மலையக வீரர் குமார் சண்முகேஸ்வரன், ஆண்களுக்கான 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டிகளிலும், ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் சப்ரின் அஹமட்டும் தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டமை சிறப்பம்சமாகும்.

இளம் வீரர் அசாமுக்கு தங்கப் பதக்கம்

இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 அம்ச போட்டிகளில் (டெகல்தன்) பங்குகொண்ட நிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் அசாம், புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரின் மூலம் முதற்தடவையாக தேசிய மட்டப் போட்டிகளில் களமிறங்கிய அசாம், அறிமுகப் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் தொடர்ந்து பிரகாசித்து வந்த அவர், ஆண்களுக்கான 10 அம்சப் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தார்.

இந்த நிலையில், இவ்வருடத்தின் முதலாவது மெய்வல்லுனர் போட்டித் தொடராக இம்முறை நடைபெற்ற தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றியிருந்த மொஹமட் அசாம், 100 மீற்றர் (முதலாவது இடம்), நீளம் பாய்தல் (2ஆவது இடம்), குண்டு போடுதல் (முதலாவது இடம்), ஈட்டி எறிதல் (மூன்றாவது இடம்), 1500 மீற்றர் (இரண்டாவது இடம்), பரிதி வட்டம் (முதலாவது இடம்), கோலூன்றிப் பாய்தல் (முதலாவது இடம்), 400 மீற்றர் (இரண்டாவது இடம்), 110 மீற்றர் சட்டவேலி ஓட்டம் (இரண்டாவது இடம்), உயரம் பாய்தல் (முதலாவது இடம்) ஆகிய போட்டிகளில் பங்குபற்றி 6721 புள்ளிகளைப் பெற்று புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இராணுவ அரை மரதன் ஓட்டத்தில் சம்பியனாகிய சண்முகேஸ்வரன்

இலங்கை இராணுவத்தினால் 54ஆவது ….

இதுஇவ்வாறிருக்க, குறித்த போட்டியில் இராணுவ மின்சாரம் மற்றும் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த ஆர். லக்மால் (6262 புள்ளிகள்) வெள்ளிப் பதக்கத்தையும், இராணுவ சிங்ஹ படைப் பிரிவைச் சேர்ந்த டி. குருசிங்க (5837 புள்ளிகள்) வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.  

ஷிக் மீண்டும் அபாரம்

இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஷிக் தட்டெறிதலில் 44.27 மீற்றர் தூரத்தை எறிந்து இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டிகளில் புதிய போட்டிச் சாதனையுடன் முதற்தடவையாக தங்கப் பதக்கம் வென்றார்.  

அத்துடன், குறித்த போட்டித் தொடரில் அவர் தொடர்ச்சியாக பெற்றுக்கொண்ட 3ஆவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

இறுதியாக நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில், ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்குபற்றியிருந்த ஷிக், 45.21 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இராணுவ பீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த கே. சில்வா 42.33 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், இராணுவ பொறியியல் படைப் பிரிவைச் சேர்ந்த எஸ். பண்டார 41.93 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

சண்முகேஸ்வரனுக்கு இரட்டைத் தங்கம்

இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இராணுவ பீரங்கிப் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய 30 நிமிடங்கள் மற்றும் 58.55 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

Photo Album : Army volunteer meet 2019 – Day 3

இதேநேரம், ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றியிருந்த அவர், 14 நிமிடங்கள் 49.89 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தினை வென்றெடுத்தார்.

அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஹட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த சண்முகேஸ்வரன், கடந்த மாதம் நடைபெற்ற இராணுவ படைப்பிரிவுகளுக்கிடையிலான அரை மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தையும், ஆசிய மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு தங்கம்

ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட வெலிகமையைச் சேர்ந்த சப்ரின் அஹமட், 15.91 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரில் தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் தங்கப் பதக்கம் வென்றார்.

அண்மைக்காலமாக முப்பாய்ச்சல் போட்டியில் அதீத திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற சப்ரின், இறுதியாக கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்குபற்றி 16.02 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், 15.31 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த ராணுவ பீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த ஜி.எம் ஆரியரத்ன வெள்ளிப் பதக்கத்தையும், 14.81 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் சேர்ந்த மொஹமட் ரிம்ஸி வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

ஆசிய மெய்வல்லுனர் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

கட்டாரின் டோஹா நகரில் அடுத்த மாதம் 21ஆம் ……

நிப்ராஸுக்கு முதல் பதக்கம்

இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் பேட்டியில் முதற்தடவையாக பங்குகொண்ட மூதூரைச் சேர்ந்த ஆர்.எம் நிப்ராஸ், வெள்ளிப் பதக்கம் வென்று தனது தனிப்பட்ட சிறந்த காலத்தையும் பதிவு செய்தார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய 3 நிமிடங்கள் 49.85 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

கடந்த வருடம் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட நிப்ராஸ், இறுதியாக நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில் இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படைப் பிரிவைச் சேர்ந்த குபுன் குஷாந்த (03 நிமி. 49.06 செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், இராணுவ இலேசாயுத காலாற் படையைச் சேர்ந்த டி. பொன்சேகா (03 நிமி. 50.37 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகதரித்துக் கொண்டனர்.

பாசிலுக்கு ஆறுதல் வெற்றி

இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மற்றுமொரு கிழக்கு மாகாண வீரரான பாசில் உடையார், 21.49 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.  

100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற பாசில் உடையார், இறுதியாக கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றரில் வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தெரிவான வீர, வீராங்கனைகள்

இந்த ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் ………

இதுஇவ்வாறிருக்க, இம்முறை தொண்டர் படையணி மெய்வல்லுனரில் பாசிலுடன் ஆண்களுக்கான 200 மீற்றரில் போட்டியிட்ட, பொத்துவிலைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மொஹமட் ஷ்ரப், போட்டியை 22.82 செக்கன்களில் நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அடைந்தார்.

அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கிழக்கு மாகாணத்துக்கு பெருமை தேடிக் கொடுத்து வருகின்ற ஷ்ரப்புக்கு இவ்வருடம் எதிர்பார்த்தளவு வெற்றியைக் கொடுக்கவில்லை.

கிருஷ் குமாரி அபாரம்

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மலையகத்தைச் சேர்ந்த நீண்ட தூர வீராங்கனைகளில் ஒருவரான கிருஷ் குமாரி, வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 2 நிமிடங்கள் 33.77 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இதேநேரம், பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றியிருந்த அவர், 18 நிமிடங்கள் 59.87 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

தேசிய மட்ட மரதன் மற்றும் அரை மரதன் ஓட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுவருனகின்ற கிருஷ் குமாரி, இறுதியாக கடந்த மாதம் நடைபெற்ற இராணுவ படைப்பிரிவுகளுக்கிடையிலான அரை மரதன் ஓட்டப் போட்டியில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<