மாலிங்கவின் சாதனையை T10 லீக்கில் சமப்படுத்திய பாகிஸ்தான் வீரர்

241

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும், பாகிஸ்தான் அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ஆமிர் யமின் நான்கு பந்துகளுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் லசித் மாலிங்கவின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் T10 லீக் கிரிக்கெட் தொடரின் முதல் நாளில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹமட் சேஹ்ஷாட் 16 பந்துகளுக்கு 76 ஓட்டங்களை விளாசி ரசிகர்களின் பார்வையை T10 லீக் கிரிக்கெட் பக்கம் திருப்பியிருந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்று (22), பாகிஸ்தான் அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ஆமிர் யமின் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். T10 லீக்கின் மூன்றாவது போட்டியில் நோர்தன் வொரியர்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்கால் டைகர்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

T10 லீக் தொடரின் ஆரம்ப போட்டியில் ஆக்ரோச ஆட்டம் காண்பித்த சஹ்ஷாத்

T10 லீக் தொடரின் ஆரம்ப போட்டியில் ஆக்ரோச ஆட்டம் காண்பித்த சஹ்ஷாத்

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்கால் அணி 130 ஓட்டங்களை பெற, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நோர்தன் வொரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.  இதில் பெங்கால் அணி சார்பாக 9 ஆவது ஓவரை வீசிய ஆமிர் யமின் தனது முதல் 4 பந்துகளுக்கும் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முதல் பந்தில் 44 ஓட்டங்களை விளாசியிருந்த லெண்டல் சிம்மென்ஸ், விக்கெட் காப்பாளர் செம் பில்லிங்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரோவ்மன் பவெல்  அலி கானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக ரவி போபரா மொஹமட் நபியிடம் பிடிகொடுத்து வெளியேற, இறுதியாக ஹர்டுஸ் வில்ஜியோன் ஆமிர் யமினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நான்கு விக்கெட்டுகள் சாதனையானது, சர்வதேச கிரிக்கெட் சாதனையாக எடுத்துக் கொள்ளப்படாவிட்டாலும், T10 லீக் தொடரை பொருத்தவரை முதல் முறையாக அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றிய சாதனையாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஆமிர் யமின்  T10 லீக்கில் முதல் முறையாக ஓட்டங்கள் அற்ற ஓவரை வீசியவர் (Maiden Over) மற்றும் இரண்டாவது ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கைவசம் வைத்துள்ளார். 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக்கிண்ண லீக் போட்டியில் இவர் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<