மெய்வல்லுனர் வீராங்கனை கௌஷல்யா மதுஷானி உயிரிழப்பு

146

பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தேசிய சம்பியனான கௌஷல்யா மதுஷானி நேற்று (24) காலை மரணமடைந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 27 ஆகும்.

நேற்று காலை 11.00 மணியளவில் தும்மலசூரியவில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது ஒரு தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதனிடையே, கௌஷல்யா மதுஷானியின் பிரேதப் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அவரது உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் தும்மலசூரிய பொலிஸார் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியை 58.73 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை கௌஷல்யா மதுஷானி சுவீகரித்திருந்தார். 400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் அவரது அதிசிறந்த காலமாகவும் அது பதிவாகியது.

இதன்காரணமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதியையும் அவர் பூர்த்தி செய்திருந்தார்.

இறுதியாக 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரிலும் அவர் 400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குளியாப்பிட்டி மத்திய வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மதுஷானி, இலங்கை இராணுவத்தில் இணைந்து அண்மைக்காலமாக மெய்வல்லுனர் விளையாட்டில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறார்.

நேபாளத்தில் 2019இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் கௌஷல்யா மதுஷானி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதேபோல, 4X400 அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியின் உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார்.

அதற்குமுன் 2016 தெற்காசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், 2014இல் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெற்ற போதிலும் கடும் மழை காரணமாக பிற்போடப்பட்ட சில போட்டிகளும், இறுதி பரிசளிப்பு வைபவமும் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் சனிக்கிழமையன்று (23) நடைபெற்றது.

இந்த பரிசளிப்பு வைபவத்தில் கலந்துகொண்ட கௌஷல்யா மதுஷானி, பெண்களுக்கான தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் அதிசிறந்த வீராங்கனைக்கான விருதையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி, சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட அவர் நான்காவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

எனவே, மெய்வல்லுனர் விளையாட்டில் இலங்கைக்கு பல வெற்றிகளைப் ஈட்டிக் கொடுத்து எம்மை விட்டு பிரிந்து சென்ற கௌஷல்யா மதுஷானியின் ஆத்மா சாந்தியடைய ThePapare.com சார்பாக பிராத்தனை செய்கின்றோம்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<