அவுஸ்திரேலியா – ஜிம்பாப்வே தொடர் ஒத்திவைப்பு

17

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் திகதிகள் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  

கொவிட்-19 வைரஸ் காரணமாக தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுவந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான  தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

2011 உலகக் கிண்ணத்தில் 90% உடற்குதியுடன் இருந்தேன் – முரளிதரன்

குறித்த இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர் குறுகிய காலத்தைக் கொண்ட போட்டித் தொடராக அமைந்துள்ளமைதான் தொடரை ஒத்திவைப்பதற்கான முக்கிய காரணம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. 

குறுகிய காலத்தைக்கொண்ட தொடர் என்ற போதிலும், அரசாங்கம் விதித்துள்ள சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்த வேண்டிய நிபந்தனைகளையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மேற்கொள்ள வேண்டும். எனவே, இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இந்த மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், எதிர்வரும் ஆகஸ்ட் 9, 12 மற்றும் 15ம் திகதிகளில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இப்போது தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் மற்றுமொரு அட்டவணையின் ஊடாக போட்டியை நடத்துவதற்கு இரண்டு கிரிக்கெட் சபைகளும் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

“இந்த தொடரை ஒத்திவைப்பதனை நினைத்து ஏமாற்றம் அடைகிறோம். அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே வீரர்கள், போட்டி மத்தியஸ்தர்கள் மற்றும் ரசிகர்களின் ஆர்வத்தின் காரணமாக தொடர் ஏற்பாடு செய்யப்பட்டது. மிகவும் சாதாரணமான மற்றும் நுணுக்கமான முடிவின் காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும், நாம் மாற்று திகதிகளில் தொடரை விளையாடுவது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடி வருகின்றோம்” என ஆஸி. கிரிக்கெட் சபையின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி நிக் ஹொக்லி தெரிவித்தார்.

இதேவேளை, ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் நடப்பு முகாமைத்துவ பணிப்பாளர், கிவ்மோர் மகோணியும், இந்த தொடரை நடத்துவதற்கான மற்றுமொரு போட்டி அட்டவணையை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். 

“அவுஸ்திரேலியாவை எதிர்கொள்வது தொடர்பில் நாம் உற்சாகத்துடன் இருந்தோம். எனினும், இப்போது தொடரை ஒத்திவைப்பதுதான் சரியான முடிவாக இருக்கும். எவ்வாறாயினும், எதிர்வரும் காலப்பகுதியில் இந்த தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்” என கிவ்மோர் மகோணி குறிப்பிட்டார்.

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க