அஸ்ஹர் கல்லூரிக்காக சகலதுறைகளிலும் அசத்திய ஷயீத் நளிம்

951

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற, இந்த பருவகாலத்திற்கான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டி ஒன்றில் அக்குறனை அஸ்ஹர் கல்லூரி, நுகவல மத்திய கல்லூரி அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸ் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

இதேநேரம் இப்போட்டியில் அஸ்ஹர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்து ஆடியிருந்த 15 வயதேயான நளீம் ஷையத் சகலதுறைகளிலும் சிறப்பான ஆட்டத்தினை பதிவு செய்து அசத்தியிருந்தார்.

இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி

கலகெதர சரத் அமுணுமகம மைதானத்தில் கடந்த வாரம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று வென்று முதலில் துடுப்பாடிய நுகவெல மத்திய கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 39.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 276 ஓட்டங்களை குவித்தது. அவ்வணிக்காக விராஜ் எக்கநாயக்க சதம் ஒன்றுடன் 161 ஓட்டங்களை விளாசியதுடன், அஸ்ஹர் கல்லூரியின் வலதுகை சுழல் வீரரான ஷயீத் நளிம் 94 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு ஏற்கனவே பந்துவீச்சில் அசத்தியிருந்த ஷயீத் நளிம் துடுப்பாட்டத்தில் இம்முறை ஆட்டமிழக்காது சதம் ஒன்றை பெற்றுத்தந்தார். ஷயீத்தோடு அய்யாஷ் சியானும் பெறுமதியான அரைச்சதம் ஒன்றை பெற்றுத்தர அஸ்ஹர் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 104.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 398 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அக்குறனை அஸ்ஹர் கல்லூரியின் துடுப்பாட்டத்திற்கு சதம் ஒன்றுடன் பாரிய பங்களிப்பு ஒன்றினை வழங்கிய ஷயீத் நளீம் 104 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருந்ததோடு, அய்யாஷ் சியான் 73 ஓட்டங்களை குவித்திருந்தார். ஷயீத் நளீம் இப்போட்டியில் பெற்ற சதம் 19 வயதின் கீழ் பாடசாலை அணிகளின் கிரிக்கெட் தொடரில் அவர் பெற்ற கன்னி சதமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், தமது எதிர்த்தரப்பை விட 122 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நுகவல மத்திய கல்லூரி 25 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்த போது போட்டியின் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது. இதனால், இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி சமநிலை அடைந்ததுடன் அக்குறனை அஸ்ஹர் கல்லூரி போட்டியின் முதல் இன்னிங்ஸ் வெற்றியாளர்களாகவும் மாறியது.

இம்முறை நுகவெல மத்திய கல்லூரியின் துடுப்பாட்டத்தில் விராஜ் ஏக்கநாயக்க 36 ஓட்டங்களை குவித்ததுடன், ஷயீத் நளிம் மற்றும் யூசுப் றில்வான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன்படி அஸ்ஹர் கல்லூரி அணி போட்டியில் முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்ய ஷயீத் நளிம் மொத்தமாக 8 விக்கெட்டுக்களை கைப்பற்றி உதவியிருந்தார்.

விராஜ், அரோனின் அபார பந்துவீச்சினால் மொறட்டு கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

இதற்கு முன்னர் தனது கல்லூரியின் 13,15 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணிகளிலும் ஆடியுள்ள ஷயீத் 1,000 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை தனது அபார துடுப்பாட்டத்தின் மூலம் பெற்றுள்ளதுடன் 100 இற்கும் கிட்டவான விக்கெட்டுக்களையும் சிறிய வயதிலேயே சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அக்குறனை அஸ்ஹர் கல்லூரிக்கு நுகவெல மத்திய கல்லூரியுடனான போட்டி இந்தப் பருவகாலத்தில் முதல் போட்டி என்பதனால், அவர்கள் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகளின் டிவிஷன் – III பாடசாலை கிரிக்கெட் தொடரினை இம்முறை சிறப்பாக ஆரம்பம் செய்திருக்கின்றனர்.

போட்டியின் சுருக்கம்

நுகவெல மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 276 (39.1) – விராஜ் ஏக்கநாயக்க 161, ரவிந்து வட்டகொட 36, ஷயீத் நளிம் 6/94, அக்ரம் ஹமீட் 2/04

அக்குறனை அஸ்கர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 398 (104.1) – ஷயீத் நளிம் 104*, அய்யாஷ் ஷியான் 74, தில்மிக்க தொடம்தன்ன 4/159

நுகவெல மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 143/5 (25) – விராஜ் ஏக்கநாயக்க 36, யூசுப் றில்வான் 2/14, ஷயீத் நளிம் 2/34

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. (அக்குறனை அஸ்ஹர் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<