சத்திர சிகிச்சையினை முகம் கொடுத்த குசல் பெரேரா

1310

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா, ஐக்கிய இராச்சியத்தில் வைத்து வியாழக்கிழமை (01) தோற்பட்டை சத்திர சிகிச்சைக்கு முகம் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> இலங்கையின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கள்

கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வழிநடாத்த நியமனம் செய்யப்பட்ட குசல் ஜனித் பெரேரா மோசமான தோல்விகள் காரணமாக தனது தலைவர் பதவியினை துறந்ததோடு, இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு முன்னர் தோற்பட்டை உபாதையினையும் எதிர்கொண்டிருந்தார்.

இதன் பின்னர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கும் உள்ளான அவர்,  தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 தொடரில் தடுமாற்றத்தினை வெளிப்படுத்தியிருந்ததனை அவதானிக்க முடிந்தது. எனினும் தனது உபாதைச் சிக்கல்களுக்கு மத்தியிலும் குசல் பெரேரா கடந்த ஆண்டுக்கான (2021) T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவம் செய்ததோடு, லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார்.

தொடர்ந்து குசல் பெரேராவின் தோற்பட்டை உபாதை விகாரமானதை தொடர்ந்து அவருக்கு அது சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஒன்றினை உருவாக்கியது. இந்நிலையில் குசல் பெரேராவின் சத்திர சிகிச்சைக்கான நிதியினை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பொறுப்பெடுக்காது என்ற செய்திகள் கடந்த ஜூலை மாதம் வெளியாகின.

இந்த விடயம் சமூக வலைதளங்களில் பேசு பொருளானதைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை, தமது அறிவுரையினைத் தாண்டி குசல் பெரேரா கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருந்தார் என குற்றம் சுமத்தியிருந்ததோடு பெரேராவின் சத்திர சிகிச்சைக்கான பணத்தில் பெரும் பகுதியினை தாம் பொறுப்பெடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

>> தென்னாபிரிக்கா T20 லீக் தொடருக்கு புதிய பெயர்

பல கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து இறுதியில் குசல் ஜனித் பெரேரா ஐக்கிய இராச்சியம் சென்று தனது சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கின்றார்.

சத்திர சிகிச்சையினை நிறைவு செய்திருக்கும் குசல் பெரேரா முழுமையாக குணமடைவது எப்போது என்பது உறுதியாக தெரியாது என்ற போதும், அவர் இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகின்றது.

எனினும், மிக விரைவில் கிரிக்கெட்டுக்கு திரும்பவிருக்கும் குசல் ஜனித் பெரேரா அடுத்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்பார்ப்பு வீரர்களில் ஒருவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<