இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி என்பது அண்மைய காலங்களில் கிரிக்கெட் உலகில் விரும்பப்படாத ஒரு பொறுப்பாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஏனெனில் கடந்த 7 வருடங்களில் (அதாவது 2011 ஆம் ஆண்டிலிருந்து) இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்க வேண்டிய பயிற்சியாளர்கள் 10 பேர்கள் வரையில் மாற்றப்பட்டுள்ளனர்.
2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்
எந்தவொரு விளையாட்டிலும் தலைமைத்துவம் என்பது இலகுவான விடயமல்ல…
பயிற்சியாளர்கள் அடிக்கடி ஏன் மாற்றப்படுகின்றனர் என்கிற கேள்வியோடு இலங்கை அணியின் போராடும் தன்மையும் இப்போதைய நாட்களில் குறைந்து வருவதை பார்க்கலாம். இவ்வாறான நிலைமைகளை மாற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர பயிற்சியாளராக செயற்பட கூடிய சிறந்த அனுபவம் கொண்ட எட்டு திறமைமிக்க கிரிக்கெட் ஆளுமைகளை ThePapare.com இன் இக்கட்டுரையின் மூலம் பார்க்கப் போகின்றது.
நிக் போத்தஸ்
இலங்கையின் பிரதான பயிற்றுவிப்பாளராக இருந்த கிரஹம் போர்ட், 2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளோடு இலங்கை அணி வெளியேறிய பின்னர் தனது பதவியினை இராஜினாமா செய்த பின்னர், அவரிற்குப் பதிலாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பு தற்காலிகமாக போத்தஸிற்கு வழங்கப்பட்டது.
போத்தஸின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட இலங்கை, ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரினை 3-2 எனப் பறிகொடுத்ததுடன், அவ்வணியுடனான டெஸ்ட் போட்டியை கைப்பற்றி அதற்கு அடுத்து இந்தியாவுடன் இடம்பெற்ற மூன்று வகைப் போட்டிகள் ஒன்பதிலும் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால, நிக் போத்தாஸே தற்போது தாம் அணிக்காக தெரிவு செய்யவுள்ள பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ‘முதன்மையாக பார்க்கப்படுபவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணிக்காக கடமைகளை செய்வதற்கு முன்னதாக தென்னாபிரிக்க அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக காணப்பட்ட போத்தஸ் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மாறுவதற்கு முன்னர் இலங்கையின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராகவே காணப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹேல ஜயவர்தன
இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான மஹேல ஜயவர்தன பணம் செழிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக கடமையேற்று கடந்த ஐ.பி.எல் பருவகாலத்தில் அவ்வணியினை சம்பியனாகவும் மாற்றியிருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு ஆலோசர்களில் ஒருவராகவும் வேலை செய்திருக்கும் ஜயவர்தன, அடுத்த இரண்டு பருவகாலங்களிலும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் குல்னா டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயற்படுவதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சுற்றுத்தொடர் விபரம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது (PCB) இலங்கை கிரிக்கெட் அணியின் ஐக்கிய அரபு…
கடந்த காலங்களில் இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தினை கண்டு கவலையடைந்திருக்கும் கிரிக்கெட் இரசிகர்கள், கிரிக்கெட் ஆய்வாளர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அனைவரும் இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியினை மஹேல பொறுப்பெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
டீன் ஜோன்ஸ்
தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர்களில் ஒருவராக காணப்படும் டீன் ஜோன்ஸ், 2016ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் வெற்றியாளரான இஸ்லாமாபாத் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.
கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடர் தோல்வியின் பின்னர் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஜோன்ஸ் விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்களில் (முன்வரிசை) ஒருவரான இவர், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கும் கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மார்வன் அத்தபத்து
இலங்கை அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பலர் மில்லியன் கணக்கில் ஊதியம் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டிருந்த போதும், அவர்களால் இலங்கை அணிக்கு போதியளவான நல்ல விடயங்களை கடந்த காலங்களில் வழங்க முடியாமல் போயிருந்தது.
இவ்வாறான நிலைமையில் அணி பற்றி அதிக விடயங்களை அறிந்து வைத்திருக்கும் உள்நாட்டினை சேர்ந்த மர்வான் அத்தபத்து இலங்கையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மீண்டும் வரவேண்டும் என அனைவராலும் கூறப்பட்டு வருகின்றது.
இதற்கு முன்னர், இலங்கை அணியினை பயிற்றுவித்திருந்த அத்தபத்து 2014ஆம் ஆண்டில் 16 வருடங்களின் பின்னர் இலங்கை அணிக்கு முதல் டெஸ்ட் தொடர் வெற்றியொன்றினை (1-0 என) இங்கிலாந்து மண்ணில் பெறுவதற்கு உறுதுணையாக காணப்பட்டிருந்தார்.
இவ்வாறாக சிறப்பாக இலங்கை அணியினை கொண்டு சென்ற அத்தபத்து 2015ஆம் ஆண்டில் யாருக்கும் தெரியப்படுத்த விரும்பாத சில காரணங்களிற்காக தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியினை துறந்துவிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.
போல் நிக்ஷன்
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சங்காவின் தலைமையிலான ஜமெய்க்கா தல்லாவாஸ் அணியின் தற்போதைய பயிற்சியாளர் போல் நிக்ஷன் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிற்கு விண்ணப்பத்திருப்பதாக ThePapare.com இற்கு தெரியவந்திருக்கின்றது.
அயர்லாந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கிரஹம் போர்ட்
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளின் முன்னால் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட்…
இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான நிக்ஷன் இதுவரையில் 19 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு T-20 போட்டியிலும் ஆடியுள்ளார். அதோடு, இவர் 2011ஆம் ஆண்டிற்கு முன்பு இங்கிலாந்தின் கவுண்டி அணியான லெய்கெஸ்டர்சைர் அணியினையும் பயிற்றுவித்த அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டொம் மூடி
இலங்கை அணியினை 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரையான காலப்பகுதில் பயிற்றுவித்த மூடி, இலங்கையை 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேற்றுவதற்கு உதவி புரிந்திருந்தார். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை பயிற்றுவித்த அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றார்.
ஐ.பி.எல் தொடரில் ஆடிவரும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்றுவிப்பாளராக 2012ஆம் ஆண்டிலிருந்து நியமிக்கப்பட்டிருந்த மூடி, அவரது அணியினை 2016ஆம் ஆண்டின் ஐ.பி.எல் தொடரில் சம்பியனாக மாற்ற காரணமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பியெர்ரே டி ப்ரய்ன்
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முதல்தர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான பியெர்ரே, அண்மையில் லெய்கெஸ்டர்சைர் அணியின் தலைமைப் பொறுப்பினை இராஜினாமாச் செய்திருந்தார்.
40 வயதாகும் இவரின் ஆளுமையின் கீழிருந்த லெய்கெஸ்டர்சைர் அணி இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளான T-20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதிக்கும், ஒரு நாள் கிண்ணத்தில் (வடக்குப் பிராந்திய குழு) ஆறாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டிற்கான பருவகாலத்தில் லெய்கெஸ்டர்சைர் கழகத்திற்கு உதவி பயிற்சியாளராகவே சென்றிருந்த பியெர்ரே டி ப்ரய்ன் தனது திறமையின் கரணமாக அவ்வணியின் தலைமைப் பயிற்சியாளராக மாறியிருந்தார்.
ஸ்டீபன் பிளமிங்
நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீபன் பிளமிங் ஐ.பி.எல் தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக முன்னதாக செயற்பட்டிருந்தார்.
இவரது வழிகாட்டலுடன் காணப்பட்ட சென்னை அணி, 2010 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் சம்பியன் கிண்ணத்தினை சுவீகரித்ததுடன் 2010 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் லீக்கிலும் வெற்றியாளராக மகுடம் சூடியிருந்தது.
கடந்த இரண்டு வருடங்களாக ரைஸிங் புனே சுபர்ஜயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வரும் பிளமிங், நியூசிலாந்து அணிக்காக இதுவரையில் 111 டெஸ்ட் போட்டிகளிலும், 280 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி 15,000 இற்கு மேலான ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்ட இவர்களில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை கீழே பதிவிடுங்கள்.