கிரிக்கெட் பயிற்சிகளை மீண்டும் ஆரம்பித்துள்ள மேற்கிந்திய தீவுகள்

119
Getty Images

கொரோனா வைரஸ் ஆபத்து குறைந்து வரும் நிலையில், எதிர்கால கிரிக்கெட் போட்டிகளை கருத்திற்கொண்டு ஒவ்வொரு நாட்டு அணிகளும் கிரிக்கெட் பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதன்படி, மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணியும் தங்களது பயிற்சிகளை மீள ஆரம்பித்திருக்கின்றது.

>>தென்னாபிரிக்கா டெஸ்ட் அணி தலைமையை குறிவைக்கும் டீன் எல்கர்

மேற்கிந்திய தீவுகள் அணி, எதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கின்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சிகளும் இந்த டெஸ்ட் தொடரை மையமாகக் கொண்டே மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கும்  பயிற்சிகளில் டெஸ்ட் அணிக்குழாத்தில் உள்ள வீரர்கள் சிலர் (ஜேசன் ஹோல்டர், கிரைக் ப்ராத்வைட், ஷாய் ஹோப், கேமர் ரோச், ஷேன் டொவ்ரிச்) மாத்திரம் முதற்கட்டமாக பங்கெடுத்து வருகின்றனர். இதேவேளை, கிரிக்கெட் பயிற்சிகள் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் திங்கட்கிழமை (25) முதல் நடைபெறுகின்றது. 

அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சிகளில் வைத்திய அதிகாரிகளின் சுகாதார அறிவுறுத்தல்களுடன் சேர்த்து, அரசாங்கத்தின் விதிமுறைகளும்  பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

“வீடுகளுக்குள் முடங்கியிருந்து, உடற்தகுதி தொடர்பான பயிற்சிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செய்த பின்னர் வீரர்கள் மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை ஆரம்பிக்க வாய்ப்பு ஒன்று கிடைத்திருப்பது ஒரு நல்ல செய்தியாகும். தற்போது, நாம் (இங்கிலாந்து) அணியுடனான டெஸ்ட் தொடருக்கு வழங்கப்படும் விஸ்டன் கிண்ணத்தினை தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றோம். இதேநேரம், நாம் (இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடரினை நடாத்துவது பற்றிய) பேச்சுவார்த்தைகளில் இறுதிக் கட்டத்தில் காணப்படுவதோடு, இங்கிலாந்து கிரிக்கெட் சபை அவர்களது உயிரியல் பாதுகாப்பு விடயம் தொடர்பில் அறிவிக்கவுள்ள இறுதி வார்த்தையினையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.” என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஜோன் கிரேவ் குறிப்பிட்டிருந்தார்.  

மறுமுனையில், நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் ஆபத்து காரணமாக கிரிக்கெட் போட்டிகள் சிலவற்றை ஏற்கனவே ஒத்திவைத்திருக்கும் நிலையில், ஜூலை மாதம் 08ஆம் திகதி ஆரம்பமாக எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடரே கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட பின்னர் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக அமையவிருக்கின்றது. 

அதேநேரம், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் (குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள்) மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட கடந்த வாரம் தொடக்கம் பயிற்சிகள் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<