2021 இல் சம்பியன் கிண்ணப் போட்டிகளுக்குப் பதிலாக T20 உலகக் கிண்ணம்

711
 

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் புதிய கிரிக்கெட் தொடர்களை நடாத்த எதிர்காலத் திட்டங்களை வகுத்துள்ளதாக தமது காலாண்டுக் கூட்டத்தொடரில் தெரிவித்திருக்கின்றது.

அந்தவகையில் இந்தக் காலப்பகுதியில் (2019-2023) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரும், 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த சம்பியன் கிண்ணத் தொடருக்குப் பதிலாக மேலதிக T20 உலகக் கிண்ணம் ஒன்றும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி. இன் இந்த புதிய தொடர்களினால் கிரிக்கெட் விளையாடும் 16 அணிகளுக்கு, பூகோள ரீதியில் வலிமையாக காணப்படும் நாடுகளுடன் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதுடன் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் உருவாக்கி கொடுக்கப்படுகிறது.

ஐ.சி.சி. இன் எதிர்காலக் கிரிக்கெட் தொடர்கள் (2019-2023)

  • ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ணம் – 2019, 2023
  • ஐ.சி.சி. T20 உலகக் கிண்ணம் – 2020, 2021
  • ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிகள் – 2021, 2023
  • ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்

முதல் பருவகாலம் – 2019-2021

இரண்டாம் பருவகாலம் – 2021-2023

  • உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளுக்கு அணிகளை தெரிவு செய்யும் லீக் போட்டித் தொடர் – 2020-2020

(2019-2023 வரையிலான காலப்பகுதியில் நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் இருதரப்பு டெஸ்ட் தொடர்கள், ஒரு நாள் தொடர்கள், T20 போட்டிகள் என்பன இங்கு கருத்திற் கொள்ளப்படவில்லை.)

104 நாடுகளுக்கு சர்வதேச T20 போட்டிகளுக்கான அந்தஸ்து

ஐ.சி.சி. இன் தவிசாளரான (Chairman) சசாங்க் சங்கர் புதிய விடயங்கள் பற்றி பேசிய வேளையில்

“இந்த புதிய தொடர்களுக்கு ஒப்புதல் தந்த (ஐ.சி.சி. இன்) அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். இப்போது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கும், ஒரு நாள் லீக் போட்டிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும், இருதரப்பு T20 போட்டிகள் அனைத்தையும் சர்வதேச போட்டிகளாக மாற்றியிருப்பதும், பூகோளரீதியில் (T20) அணிகளுக்கான தரவரிசை ஒன்றினை உருவாக்குவதும், குறைந்த ஓவர்கள் (20) கொண்ட போட்டிகள் மூலம் எங்களது கிரிக்கெட் விளையாட்டை உலகம் பூராக கொண்டு செல்ல ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்திருக்கின்றது. இன்னும், கிரிக்கெட் விளையாட்டின் புனித தன்மையைப் பேண நானும் எங்களது நிர்வாகிகளும் வீரர்களுக்கான ஒழுக்க கோவைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றோம். கிரிக்கெட்டில் நேர்மைத் தன்மை பேணும் கலாச்சாரம் ஒன்றை உருவாக்க நாம் தண்டனைகள் பற்றிக் கவனத்தில் எடுத்திருக்கின்றோம்“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

ஐ.சி.சி. இன் பிரதான நிறைவேற்று அதிகாரியான டேவ் ரிச்சட்சன் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது
“இவ்வகையான கலந்துரையாடல்கள் நீண்டகால இலக்குகளை மையமாகக் கொண்ட முக்கிய தீர்மானங்களை எடுக்க உதவும். புதிய எதிர்காலக் கிரிக்கெட் தொடர்கள் அங்கத்துவ நாடுகளின் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லாமல் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இப்போது நாங்கள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரையும், ஒரு நாள் லீக் போட்டிகளையும் முறையே 2019 ஆம் ஆண்டிலும் 2020 ஆம் ஆண்டிலும் ஆரம்பிக்க எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம். குறிப்பாகக் கூறப்போனால், அனைத்து இருதரப்பு T20 தொடர்களையும் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் சர்வதேசப் போட்டிகளாக மாற்றியது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இப்போது நாங்கள் சர்வதேச T20 போட்டிகளுக்காக பூகோளரீதியில் தரவரிசை ஒன்றை உருவாக்க முயற்சித்து வருகின்றோம். நாங்கள் இந்த விளையாட்டை வளர்க்க வேண்டிய ஒரு பயணத்தில் இருக்கின்றோம். இந்தப் பயணத்தில் எங்களை முன்னேற்றும் வாகனமாக T20 போட்டிகள் இருக்கின்றது. மறுமுனையில் அனைத்து அங்கத்துவர்களுக்குமான T20 தரவரிசை முறைமை (Ranking System) எங்களது பயணத்தில் வரும் இடைஞ்சல்களை இல்லாமல் செய்கின்றது. இது ஒரு நேர்மறையான (Positive) அணுகுமுறையாகும். நாங்கள் இப்போதே, பிராந்திய ரீதியில் 2020 ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தின் தகுதிகாண் போட்டிகளை நடாத்த ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் இன்னும் எங்களது தகுதிகாண் போட்டிகளின் தரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவோம். இதன் மூலம் எங்கள் அங்கத்தவர்கள் அனைவரையும் கிரமமாக கிரிக்கெட் விளையாட வைப்பதும், இவ்விளையாட்டை வளர்ப்பதுமே நோக்கமாகும்“ என்றார்.

கார்டிப் போட்டியுடன் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை ஆரம்பிக்கும் இலங்கை

புதிய கிரிக்கெட் தொடர்கள் தவிர ஐ.சி.சி. இன் பொதுக்கூட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளின் போது தவறிழைக்கும் வீரர்களுக்கு எதிராக அபராதத்தோடு வேறு தண்டனைகள் வழங்குவது பற்றியும் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றது.