கார்டிப் போட்டியுடன் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை ஆரம்பிக்கும் இலங்கை

2032

ஐ.சி.சி. இன் 2019ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டித் தொடர், மே மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடருக்கு எப்படியான இலங்கை அணி வரும்?

இலங்கை கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மாதம்..

12 ஆவது முறையாக இடம்பெறவிருக்கும் இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் நேரடித் தகுதி பெறும் எட்டு அணிகள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஐ.சி.சி. இன் ஒரு நாள் அணி தரவரிசையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் 10 அணிகள் பங்கேற்க வேண்டும் என்பதால், மேலதிக இரண்டு அணிகளும் கடந்த மாதம் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

அந்தவகையில் 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் நேரடி தகுதிபெற்ற அணிகளாக அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகியவை அமைந்ததோடு, உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் மூலம் மேற்கிந்திய தீவுகளும், ஆப்கானிஸ்தானும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டன.

2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணம் மொத்தம் 48 போட்டிகளை கொண்டதாக அமைகின்றது. உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில், தொடரில் பங்கேற்கும் நாடுகள் யாவும் எதிரணிகளுடன் ஒரு தடவை மோதிக் கொள்ளும். முதல் சுற்றில் போட்டிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெறும் முதல் நான்கு அணிகள், அரையிறுதிப் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொள்ளும். 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகள் ஓல்ட் ட்ரபோர்ட் நகரிலும், எட்ஜ்பாஸ்டன் நகரிலும் இடம்பெறவுள்ளன.

அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் இரண்டு அணிகளும் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் 2019ஆம் ஆண்டின் வெற்றியாளர் யார்? என்பதைப் பார்ப்பதற்காக போட்டியிடும்.

உலகக் கிண்ணப் போட்டிகள் அனைத்தும் மொத்தமாக 11 மைதானங்களில் இடம்பெறவுள்ளதோடு, 46 நாட்களில் தொடரினை நடாத்தி முடிக்க ஐ.சி.சி தீர்மானித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் மைதானங்களாக லோர்ட்ஸ், ஓவல், ஓல்ட் ட்ரபோட், எட்ஜ்பாஸ்டன், ஹீடிங்லி, ட்ரென்ட் ப்ரிஜ், செளத்தம்ப்டன், கார்டிப், செஸ்டெர்-லே-ஸ்ரிட், டோன்டன் மற்றும் பிரிஸ்டல் ஆகியவை அமைகின்றன.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியன்களாகவும், 2007ஆம் மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் தொடர்களில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்ட இலங்கை அணி, 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஜூன் மாதம் முதலாம் திகதி கார்டிப் மைதானத்தில் தம்முடைய முதல் போட்டியில் நியூசிலாந்தினை எதிர்கொள்ளவுள்ளது.

இதன் பின்னர் இலங்கை, மூன்று நாட்களில் குறித்த மைதானத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தான் அணியினை எதிர் கொள்கின்றது.

தொடர்ந்து பிரிஸ்டல் மைதானத்திற்கு செல்லும் இலங்கை அணி அங்கே ஜூன் மாதம் 7ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள போட்டிகளில் முறையே ஆசிய அணிகளான பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றை எதிர்கொள்கின்றது.

இதனையடுத்து ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் 15ஆம் திகதி இலங்கை அணி அவுஸ்திரேலியாவுடன் மோதுவதுடன், ஜூன் மாதம் 21ஆம் திகதி லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தினை சந்திக்கின்றது.

முரளியின் கருத்துக்கு இலங்கை கிரிக்கெட் பதிலடி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர..

இப்போட்டிகளை அடுத்து டர்கம் நகருக்கு பயணிக்கும் இலங்கை, அங்கே செஸ்டெர்-லே-ஸ்ரிட் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளை எதிர்கொள்கின்றது.

2018 ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் இறுதியாக, இலங்கை அணி தமது அண்டை நாடான இந்தியாவுடன் மோதுகின்றது.

2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை பங்குபெறும் போட்டிகளின் அட்டவணை

ஜூன் 1 – நியூசிலாந்து – கார்டிப்
ஜூன் 4 – ஆப்கானிஸ்தான் – கார்டிப்
ஜூன் 7 – பாகிஸ்தான் – பிரிஸ்டல்
ஜூன் 11 – பங்களாதேஷ் – பிரிஸ்டல்
ஜூன் 15 – அவுஸ்திரேலியா – ஓவல்
ஜூன் 21 – இங்கிலாந்து – லீட்ஸ்
ஜூன் 28 – தென்னாபிரிக்கா – செஸ்டர்-லே-ஸ்ரிட்
ஜூலை 1 – மேற்கிந்திய தீவுகள் – செஸ்டர்-லே-ஸ்ரிட்
ஜூலை 6 – இந்தியா – லீட்ஸ்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<