ஆசிய, தெற்காசிய கயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்

205

இலங்கையில் முதல் தடவையாக நடைபெற்ற ஆசிய மற்றும் தெற்காசிய கயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கை அணி 4 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது.

இதில் இலங்கை பெண்கள் கயிறிழுத்தல் அணி ஆசிய கயிறிழுத்தலில் 2 தங்கங்களையும், தெற்காசிய கயிறிழுத்தலில் 2 தங்கங்களையும் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆசிய கயிறிழுத்தல் சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை கயிறிழுத்தல் சம்மேளனம் முதல் தடவையாக ஏற்பாடு செய்த 13 ஆவது ஆசிய கயிறிழுத்தல் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கடந்த 15 ஆம், 16 ஆம் திகதிகளில் கொழும்பு டொறிங்டன் மைதானத்தில் நடைபெற்றது.

ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெற்ற இம்முறை போட்டிகளில் ஆசிய கயிறிழுத்தல் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 17 நாடுகள் பங்குபற்றுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. எனினும், விஸா (Visa) கிடைக்காத காரணத்தினால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகள் மாத்திரமே இதில் பங்குபற்றயிருந்தன.

Photos: 13th Asian Tug of war Championship & 3rd South Asian Tug of war Championship

ஆசிய கயிறிழுத்தல் போட்டித் தொடரில் பெண்களுக்கான 540 கிலோ கிராம் எடைப் பிரிவு மற்றும் 600 கிலோ கிராம் கலப்புப் பிரிவில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இவ்விரண்டு போட்டியிலும் இந்திய அணியை 2-0 என வீழ்த்திய இலங்கை அணி தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது.

இதேநேரம், ஆண்களுக்கான 640 கிலோ கிராம் எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் பாகிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தியது.

இப்போட்டியில் இலங்கை அணிக்கு பாகிஸ்தான் வீரர்கள் பலத்த சவாலைக் கொடுத்திருந்தனர். இறுதியில், கடுமையான போட்டிக்குப் பிறகு 2 சுற்றுக்களையும் வெற்றி கொண்ட பாகிஸ்தான் அணி, தங்கப் பதக்கத்தை வென்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தெற்காசிய கயிறிழுத்தல் போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்றனர்.

பதினேழு நாடுகள் பங்குபற்றும் ஆசிய கயிறிழுத்தல் போட்டி இலங்கையில்

பெண்களுக்கான 480 கிலோ கிராம் எடைப்பிரிவு மற்றும் 560 கிலோ கிராம் கலப்புப் பிரிவுகளில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை தங்கப் பதக்கங்களை வென்றது.

இவ்வனைத்துப் பிரிவுகளிலும் பாகிஸ்தான் அணி வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன் இலங்கையில் முதல் தடவையாக நடைபெற்ற ஆசிய மற்றும் தெற்காசிய கயிறிழுத்தல் போட்டித் தொடர்களில் இலங்கை அணி 4 தங்கங்களை வெற்றிகொள்ள, பாகிஸ்தான் 2 தங்கப் பதக்கங்களையும், இந்தியா 3 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<