குசல் மெண்டிஸின் உடல் நிலை குறித்து வெளியாகிய அறிவிப்பு

ICC ODI World Cup 2023

2892
ICC ODI World Cup 2023

இலங்கை கிரிக்கெட் அணியின் உப தலைவரான குசல் மெண்டிஸிற்கு பாகிஸ்தான் அணியுடனான உலகக் கிண்ண மோதலில் ஏற்பட்ட உபாதை குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கின்றது.

>>தனித்துவமாக மாறும் மும்பையில் நடைபெறவுள்ள இலங்கை – இந்தியா போட்டி

அந்த வகையில் NewsWire செய்தி இணையதளம் வெளியிட்டிருக்கும் அறிவிப்புக்கு அமைய குசல் மெண்டிஸிற்கு பாகிஸ்தான் போட்டியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு தற்போது குணமாகியிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

எனவே மெண்டிஸ் இலங்கை உலகக் கிண்ணத் தொடரில் அடுத்ததாக அவுஸ்திரேலிய அணியுடன் விளையாடவிருக்கும் போட்டியில் பங்கேற்பார் என நம்பப்படுகின்றது.

குசல் மெண்டிஸ் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் தசைப்பிடிப்புக்கு ஆளாகியிருந்ததோடு, இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின் பின்னர் களத்தடுப்பில் ஈடுபடவும் வந்திருக்கவில்லை. இதன் காரணமாக சதீர சமரவிக்ரம இலங்கை அணியின் பந்துவீச்சு இன்னிங்ஸின் போது விக்கெட்காப்பாளராக செயற்பட்டிருந்தார்.

இதேநேரம் குசல் மெண்டிஸ் பாகிஸ்தானுக்கு எதிரான குறித்த போட்டியில் வெறும் 77 பந்துகளில் 122 ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு, ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கைக்காக அதிவேகமாக சதம் பெற்ற வீரராகவும் சாதனை செய்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அவுஸ்திரேலிய அணியுடன் விளையாடவிருக்கும் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (12) லக்னோவ் நகரில் இடம்பெறவிருப்பதோடு, இப்போட்டிக்கான பயிற்சிகளை இலங்கை வீரர்கள் சனிக்கிழமை (14) தொடக்கம் ஆரம்பிப்பார்கள் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<