புதியவகை தலைக்கவசத்துடன் பந்துவீசிய நியூஸிலாந்து வீரர்

54
Andrew Ellis
Image Courtesy : GETTY

நியூஸிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ எல்லிஸ் உள்ளூர் டி20 தொடரின் போது பிரத்தியேகமான தலைக்கவசம் ஒன்றை அணிந்து கொண்டு பந்து வீசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

நியூஸிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான 37 வயதுடைய ஆண்ட்ரூ எல்லிஸ், கடந்த 2012ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அந்த அணிக்காக 15 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், தற்போது கென்டர்பெரி அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட்

கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற நியூஸிலாந்தின் முதல்தரப் போட்டிகளில் ஒன்றானThe Ford Trophyகிண்ண உள்ளூர் டி20 போட்டியில் அக்லாந்து அணிக்கு எதிராக பந்து வீசினார். இதன்போது அக்லாந்து அணியின் ஜீத் ராவல் பந்தை வேகமாக அடிக்க, பந்து மின்னல் வேகத்தில் எல்லிஸ் தலையில் அடித்து, நேராக சிக்ஸருக்குச் சென்றது

அப்போது எல்லிஸ் உடனடியாக மருத்துவ பரிசோதனையை முடித்துக் கொண்டு தொடர்ந்து விளையாடினாலும், குறித்த போட்டியின் பிறகு அவர் பந்துவீச்சாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை சுட்டிக் காட்டி, உடனடி நடவடிக்கை தேவை என கூறினார்.

இந்த விவகாரத்தில் முன்னோடியாக இருக்க வேண்டும் என அப்போது கூறிய எல்லிஸ், தன் வார்த்தையை நிரூபிக்கும் வகையில் இந்த பருவத்தில் தனக்கென தயாரிக்கப்பட்ட பிரத்தியேக தலைக்கவசம் ஒன்றை அணிந்து கொண்டு பந்துவீசினார்

  • Image Courtesy : Getty
  • Image Courtesy : Getty
  • Image Courtesy : Getty

நியூஸிலாந்தின் தி போர்ட் கிண்ண ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் நொதர்ன் அணிக்கெதிராக நேற்றுமுன்தினம் (27) நடைபெற்ற லீக் போட்டியில் கென்டர்பெரி அணிக்காக களமிறங்கிய எல்லிஸ், பிரத்தியேக தலைக்கவசம் ஒன்றை அணிந்து கொண்டு பந்துவீசினார்.

கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் அணிந்து விளையாடும் தலைக்கவசத்தைப் போன்றே இருந்த இந்தப் புதிய தலைக்கவசம், எடை குறைவானதாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெளியில் தெளிவாக பார்க்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

குறித்த போட்டியில் ஒரு விக்கெட்டினை வீழ்த்திய எல்லிஸ், துடுப்பாட்டத்தில் 49 ஓட்டங்களையும் குவித்தார்

முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நியூஸிலாந்தின் சுப்பர் ஸ்மேஷ் டி20 தொடரில் ஒடாகோ அணியின் வேகப் பந்துவீச்சாளர் வொரன் பேர்ன்ஸ் முதன்முறையாக தலைக்கவசம் அணிந்து பந்துவீசினார். ஆனால், அது மோட்டார் சைக்கிள் ஓட்டுகின்றவர்கள் அணியும் தலைக்கவசம் போன்று காணப்பட்டது

அதேபோல, பெர்மிங்ஹம் அணிக்கு எதிரான போட்டியில் நொட்டிங்ஹம் அணிக்காக விளையாடிய லுக்கி பிளெட்சரது தலையில் பந்து தாக்கப்பட்டு நேராக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதுஇவ்வாறிருக்க, துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக பந்தை அடித்தாடும் போது பந்து தலையில் தாக்குவதை தவிர்ப்பதற்காக கள நடுவர்கள் டி20 போட்டிகளின் போது தலைக்கவசம் அணிந்தும், பந்தை தடுக்கும் உபகரணங்களை வைத்துக் கொண்டும் களத்தில் நிற்பதை அண்மைக்காலமாக காண்கிறோம்

அதேபோல, தற்போது எல்லிஸ் அணிந்து விளையாடிய தலைக்கவசம் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லாத வகையில் இருப்பதால் விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க