IPL தொடரிலிருந்து வெளியேறும் ஜஸ்ப்ரிட் பும்ரா?

IPL 2023

144

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரை தவறவிடவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ரா முதுகுப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த வருடம் நடைபெற்ற T20 உலகக் கிண்ண குழாத்திலிருந்து நீக்கப்பட்டார்.

ஊடக உரிமத்திற்கான மனுக்களை கோரியுள்ள இலங்கை கிரிக்கெட்

அதனைத்தொடர்ந்து இதுவரையில் பும்ரா எந்தவொரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. இறுதியாக இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற தொடருக்கான இந்திய குழாத்தில் ஜஸ்ப்ரிட் பும்ரா பெயரிடப்பட்டிருந்தாலும், மீண்டும் முதுகுப்பகுதியில் சிறிய உபாதை ஏற்பட்டதால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இவ்வாறான நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் தொடரிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருந்தார். ஜஸ்ப்ரிட் பும்ராவின் உபாதை முழுமையாக குணமடையும் முன்னர் அவரை அணியில் இணைப்பது சரியாக இருக்காது என இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.

ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு தொடர்ந்து முதுகுப்பகுதியில் உபாதை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதன் காரணமாக பெங்களூரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகடமியின் வைத்தியர்கள் அவருக்கு சத்திரசிகிச்சையொன்றை மேற்கொள்வதற்கான ஆலோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக, ஜஸ்ப்ரிட் பும்ராவின் உபாதையை சீக்கிரம் குணமடையச் செய்வதற்கு ஆராய்ந்த வைத்தியர்கள், அவருக்கு சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கான ஆலோசனையை இந்திய கிரிக்கெட் சபையிடம் முன்வைத்துள்ளனர். குறித்த இந்த விடயம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை மற்றும் தேசிய கிரிக்கெட் அகடமி இணைந்து விரைவில் அறிவிப்பொன்றை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக  மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள IPL தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ரா விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதென இந்திய கிரிக்கெட் சபையின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<