ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து இந்தியா வெளியேற்றமா?

342

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண T20 தொடரின் நேற்றைய சுபர் 4 போட்டியில் இலங்கை இந்திய அணியினை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருந்ததனை அடுத்து, இந்திய அணி ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியிருக்கின்றது.

இந்தியாவை வீழ்த்தி அபாரம் காண்பித்த இலங்கை!

அதாவது இந்திய அணிக்கு எதிரான வெற்றி இலங்கை அணியின் ஆசியக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டி வாய்ப்பினை பிரகாசமாக்கியிருக்கின்ற போதும் இலங்கை அணி இன்னும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது உறுதியாகவில்லை.

அதேநேரம் இந்திய அணி பாகிஸ்தான், இலங்கை என தாம் விளையாடிய இரண்டு சுபர் 4 சுற்றுப் போட்டிகளிலும் தோல்வியடைந்த போதும் அது முழுமையாக ஆசியக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறவில்லை.

இந்திய அணியினால் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாக வேண்டும் எனில் எஞ்சியிருக்கும் சுபர் 4 போட்டிகளில் பின்வரும் விடயங்கள் நடைபெற வேண்டும்.

  • இன்று (07) நடைபெறவுள்ள சுபர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியினை ஆப்கானிஸ்தான் வீழ்த்த வேண்டும்.
  • இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் – இந்திய அணிகள் இடையில் நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியினைத் தழுவ வேண்டும்.
  • அத்துடன் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதலில் இலங்கை பாகிஸ்தான் அணியினை தோற்கடிக்க வேண்டும்.

இவை அனைத்தும் நடைபெற்ற பின்னர் ஓட்டவீத (NRR) அடிப்படையில் இலங்கையுடன் சேர்த்து இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு காணப்படுகின்றது.

ஆனால் இன்றைய ஆப்கான்-பாகிஸ்தான் அணிகள் இடையிலான பலப்பரீட்சையில் பாகிஸ்தான் வெற்றி பெறும் போது இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாக, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் ஆகியவை ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும்.

மறுமுனையில் ஆப்கானிஸ்தான் இன்று இடம்பெறும் போட்டியிலும் வெற்றி பெற்று, இந்திய அணியுடனான போட்டியிலும் வெற்றி பெறும் போது NRR மூலமாக ஆப்கானிஸ்தான் அணிக்கும் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

ரிஸ்வான், தஹானியின் உபாதையின் தற்போதைய நிலை

இதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணி தாம் விளையாடிய இரண்டு சுபர் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற போதும், இலங்கை கிரிக்கெட் அணியும் தொடரில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. அதற்காக பின்வரும் விடயங்கள் இடம்பெற வேண்டும்.

  • இன்று (07) நடைபெறவுள்ள சுபர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியினை ஆப்கானிஸ்தான் வீழ்த்த வேண்டும்.
  • இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் – இந்திய அணிகள் இடையில் நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும்.
  • அத்துடன் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதலில் பாகிஸ்தான் இலங்கை அணியினை தோற்கடிக்க வேண்டும்.

இவை அனைத்தும் நடைபெற்ற பின்னர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய மூன்று அணிகளும் இரண்டு வெற்றிகளுடன் காணப்படுவதனால் ஓட்டவீத (NRR) அடிப்படையில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் இந்திய அணி ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<