Mumbai Indians Vs Kolkata Knight Riders

60 போட்டிகளைக் கொண்ட இவ்வருட ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 5ஆவது போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கவ்தம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து மோதியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார்.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.  கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி சார்பாக தலைவர் கவ்தம் கம்பீர் 52 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடங்கலாக 64 ஓட்டங்களையும், மனீஷ் பாண்டி 29 பந்துகளில் 52 ஓட்டங்களையும், என்டர் ரசல் 17 பந்துகளில் 36 ஓட்டங்களையும் பெற்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சில் மிச்சல் மெக்லனகஹன் 2 விக்கட்டுகளைக் கைப்பற்ற ஹர்திக் பாண்டியா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் கைப்பற்றினர்.

பதிலுக்கு 120 பந்துகளில் 188 என்ற வெற்றி இலக்கை நோக்கி  துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 5 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்து, 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியை தோல்வி அடையச் செய்தது.மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில்  துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைவர் என்ற பொறுப்பை சரிவர நிறைவேற்றி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர் கள் அடங்கலாக 84 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் 22 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பார்த்திவ் படேல் 20 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றனர். கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி சார்பாக சவ்லா, யதவ், ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார்.