மேற்கிந்திய தீவுகளில் முதன்முறையாக T-20 தொடரை வென்ற பங்களாதேஷ்

189
Image Courtesy - ICC

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அமெரிக்காவின் லவுடர்ஹில்லில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான தொடரை தீர்மானிக்கும் T-20 போட்டியில் பங்களாதேஷ் அணி டக்வத் லூவிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்று, தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணியும், ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணியும் கைப்பற்றியிருந்த நிலையில், T-20 தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடர் வெற்றியென்ற நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, சகலதுறையிலும் பிரகாசித்து, வெற்றி வாகைசூடியது.

>> சகீப் அல் ஹசனின் சகலதுறை ஆட்டத்தால் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் லிடன் டாஸ், அரைச்சதம் கடந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுக்க, அவருடன் தமிம் இக்பால், சகிப் அல் ஹசன் மற்றும் மொஹமதுல்லா ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு தங்களது பங்களிப்பை வழங்கினர்.

32 பந்துகளை எதிர்கொண்ட லிடன் டாஸ், 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களை குவிக்க, மொஹமதுல்லா ஆட்டமிழக்காமல் 20 பந்துகளுக்கு 32 ஓட்டங்களையும், அரிபுல் ஹக் ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இவர்களுடன் சகிப் அல் ஹசன் 24 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 21 ஓட்டங்களையும் பெற, பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. மேற்கிந்திய அணியின் சார்பில் பந்துவீச்சில் கார்லோஸ் பிராத்வைட் மற்றும் கீமோ பௌல் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

பின்னர், சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தப்பட்டதுடன், ஓட்ட வேகமும் மந்தமான நிலையில் உயர்த்தப்பட்டது. 11.3 ஓவர்களுக்கு 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, அதிரடி வீரர் அன்ரே ரஸல் சற்று நம்பிக்கை அளிக்கக் கூடிய அளவில் துடுப்பெடுத்தாடினார்.

ஒருபக்கம் அன்ரே ரஸல் சிக்ஸர்களை பறக்கவிட, மறுபக்கம் அணியின் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டது. இறுதியில் அணிக்கு நம்பிக்கை தந்த ரஸல் 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 21 பந்துகளில் 47 ஓட்டங்களை விளாச, மேற்கிந்திய தீவுகள் அணி, 17.1 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதே தருணத்தில் போட்டியில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டு, டக்வத் லூவிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி வாய்ப்பு வழங்கப்பட்டது. போட்டியில் பங்களாதேஷ் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய முஷ்தபிசூர் ரஹ்மான் 31 ஓட்டங்ளுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

>> அறிமுக வீரரின் சதத்துடன் ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா

பங்களாதேஷ் அணியின் இந்த T-20 தொடர் வெற்றியானது, மேற்கிந்திய தீவுகளின், சொந்த மண்ணில் கைப்பற்றப்பட்ட முதலாவது T-20 தொடர் வெற்றி என்பதுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பெறப்பட்ட 2 ஆவது தொடர் வெற்றியாகும். இதற்கு முன் ஒரு போட்டி கொண்ட T-20 தொடருக்காக 2014 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றிருந்த போதும், குறித்த போட்டி கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 184/5 (20) – லிடன் தாஸ் 61(32), மொஹமதுல்லா 32(20), கீமோ பௌல் 2/26

மேற்கிந்திய தீவுகள் – 135/7 (17.1) (Target – 155 ,17.1 D/L) – அன்ரே ரஸல் 47(21), முஷ்தபிசூர் ரஹ்மான் 3/31

முடிவு – பங்களாதேஷ் அணி 19 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூவிஸ் முறை)

போட்டியின் ஆட்டநாயகன் – லிடன் டாஸ்
தொடர் ஆட்டநாயகன் – சகிப் அல் ஹச