பங்களாதேஷை இன்னிங்ஸால் வென்ற மேற்கிந்திய தீவுகள்

118
west indies cricket
Image Courtesy - West indies cricket

மேற்கிந்திய தீவுகளின் மிரட்டும் வேகப்பந்து வீச்சு மூலம் பங்களாதேஷுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது. அன்டிகுவாவில் நடைபெற்ற இந்த போட்டி மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை (06) பகல் போசண இடைவேளைக்கு முன்னரே முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தனது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் மிகக் குறைந்த ஓட்டங்களாக 43 ஓட்டங்களுக்கே சுருண்டது. லிடோன் தாஸ் மாத்திரம் 25 ஓட்டங்களை பெறும்போது ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர். கெமர் ரோச் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிரேய்க் பரத்வெயிட் டெஸ்ட் போட்டிகளில் தனது 7 ஆவது சதத்தை (121) பூர்த்தி செய்தார். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 406 ஓட்டங்களை பெற்றது.   

பங்களாதேஷ் அணி சார்பில் 7 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டபோதும் எதிரணி ஓட்டங்களை அதிகரிப்பதை எந்த வீரராலும் தடுக்க முடியவில்லை. எனினும் அபூ ஜயத் 84 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் மஹிதி ஹசன் 101 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

இதன்படி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 363 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி மீண்டும் ஒருமுறை தடுமாற்றம் கண்டது.

ஷன்னொன் காப்ரியல் வீசிய 4 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 50 ஓட்டங்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கடைசி வரிசையில் வந்த விக்கெட் காப்பாளர் நூருல் ஹசன் மாத்திரம் (64) அரைச்சதம் ஒன்றை எட்டினார்.

எனினும் பங்களாதேஷ் அணி 144 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது. இதன்போது அண்மையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்துவீச்சில் மிரட்டிய ஷனோன் காப்ரியல் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

இலங்கை பதினொருவர் அணியின் தலைவராக மெதிவ்ஸ்

போட்டிக்கு பின்னர் கருத்து வெளியிட்ட மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர், ”ஒரு வாரத்திற்கு முன் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் தோற்றது எமக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது” என்றார். பார்படோசில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியை வென்ற இலங்கை அணி தொடரை சமன் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கும் மேற்கிந்திய தீவுகள் வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கிங்ஸ்டனில் பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் (முதல் இன்னிங்ஸ்) – 43 (18.4) – லிடோன் தாஸ் 25, கெமர் ரொச் 5/08, மிகுவேல் கம்மின்ஸ் 3/11, ஜேசன் ஹொல்டர் 2/10

மேற்கிந்திய தீவுகள் (முதல் இன்னிங்ஸ்) – 406 (137.3) – கிரேக் பரத்வெய்ட் 121, ஷாய் ஹோப் 67, டெவோன் ஸ்மித் 58, அபூ ஜய்த் 3/84, மஹிதி ஹசன் 3/101

பங்களாதேஷ் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 144 (40.2) – நூருல் ஹசன் 64, ஷன்னொன் காப்ரியல் 5/77, ஜேசன் ஹோல்டன் 3/30, மிகுவெல் கம்மின்ஸ் 2/16

முடிவு – மேற்கிந்திய தீவுகள் இன்னிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்களால் வெற்றி   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க