லங்கன் பிரீமியர் லீக் T-20 தொடர் ஒத்திவைப்பு

531
Photo - Ron Gaunt/SPORTZPICS/SLPL

இந்தியாவின் ஐ.பி.எல் தொடரினை ஒத்த வகையில் இந்த ஆண்டு இலங்கையிலும்  நடைபெறவிருந்த லங்கன் பிரீமியர் லீக் (எல்.பி.எல்) T20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவிருந்த எல்.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்ட செய்தியினை தொடரின் இயக்குனரான ரசல் அர்னோல்ட் தனது டுவிட்டர் கணக்கு மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.  

லங்கன் பிரீமியர் லீக் T20 தொடர் இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) தலைவர் திலங்க சுமதிபாலவின் எண்ணத்துக்கு அமைவாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த தொடர் மூலம் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு  சர்வதேச அனுபவத்தினை ஏற்படுத்தி கொடுப்பதும், வர்த்தக ரீதியில் கிரிக்கெட் சபைக்கு வருமானம் ஈட்டுவதும் எதிர்ப்பாப்புக்களாக இருந்தது. அத்துடன், தொடரின் பிரதான இயக்குனர் பொறுப்பு இலங்கையின் முன்னாள் சகலதுறை வீரரான ரசல் அர்ணொல்டிற்கு கொடுக்கப்பட்டிருந்தது.

உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஆறு அணிகள் பங்குபெறும் லங்கன் பிரீமியர் லீக் தொடரை ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வரை நடாத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதோடு, இந்த காலப்பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கு லங்கன் பிரீமியர் லீக் போட்டிகளுக்காகவே இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒதுக்கப்பட்டிருந்தது.

இத்தொடரில் இந்திய வீரர்கள் சிலரை விளையாட அனுமதிப்பதன் மூலம் வர்த்தக ரீதியில் இலாபம் கொண்டதாக மாற்ற இலங்கை கிரிக்கெட் சபை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தது.   

லங்கன் ப்ரீமியர் லீக் தொடரில் முக்கிய பொறுப்பை ஏற்கும் ஆர்னோல்ட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ஒத்தவிதத்தில்…

எனினும், இலங்கை கிரிக்கெட் சபையில் திலங்க சுமதிபால தலைமையிலான  நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்வதற்கான தேர்தல்களும் நீதிமன்ற உத்தரவினால் நடைபெறாது போயிருந்தன. இப்படியாக இலங்கை கிரிக்கெட் சபை தற்போது ஒரு ஸ்திரமற்ற நிலைக்கு சென்றதே லங்கன் பிரீமியர் லீக் தொடரினை ஒத்திவைக்க காரணமாக கருதப்படுகின்றது.

தற்போது, ஒகஸ்ட் மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில், லங்கன் பிரீமியர் லீக் தொடரின் போட்டிகள் நடைபெறாது என்பதனால் குறித்த காலப்பகுதியில் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறும் கரீபியன் பிரீமியர் லீக் T20 தொடரில் சுதந்திரமான முறையில் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கையின் வீரர்களுக்கு கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<