மைக்கல்மென் அணியின் வெற்றியுடன் ஆரம்பித்த வெபர் கிண்ண கூடைப்பந்து தொடர்

131

அருட்தந்தை வெபர் அடிகளார் மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத்துறைக்கு செய்த சேவைகளுக்கு அவரை நினைவுகூறும் முகமாக மைக்கல்மென் கழகம் நடாத்தி வரும் “வெபர் கிண்ண” கூடைப்பந்தாட்ட தொடர் இம்முறை ஐம்பதாவது ஆண்டாக இடம்பெறுகின்றது.

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (21) தொடங்கிய இம்முறைக்கான வெபர் கிண்ணத் தொடரில் விமானப்படை, பொலிஸ் விளையாட்டுக் கழகங்கள் உட்பட நாடு பூராகவும் கூடைப்பந்து விளையாட்டுக்கு பெயர்போன எட்டு கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

பொன் விழாக் கோலம் பூணும் மட்டக்களப்பின் வெபர் கிண்ண கூடைப்பந்து தொடர்

எட்டு கழகங்களும் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு தொடரின் முதல் நாளில் (21) லீக் போட்டிகள் இடம்பெற்றிருந்தது.

தொடரின் முதல் போட்டியில் அனுபவமிக்க கூடைப்பந்து வீரர்களை கொண்ட தொடரின் ஏற்பாட்டு அணியான மைக்கல்மென் விளையாட்டுக் கழகமும், புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து அணியும் மோதின.

மைக்கல்மென் விளையாட்டுக் கழகம் எதிர் புனித மைக்கல் கல்லூரி

குழு A அணிகளின் முதலாவது லீக் ஆட்டமாக அமைந்த இப்போட்டியில் முதல் கால்பகுதியை புனித மைக்கல் கல்லூரியின் இளம் அணி 19:17 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. எனினும், ஆட்டத்தின் இரண்டாம் கால்பகுதி 18:24 என்ற புள்ளிகள் அடிப்படையில் மைக்கல்மென் கழகத்தின் வசமாக முதல் பாதி நிறைவுறும் போது 41:27 என்ற புள்ளிகள் கணக்கில் மைக்கல்மென் விளையாட்டுக் கழகம் ஆட்டத்தில் முன்னிலை அடைந்தது.

தொடர்ந்து, போட்டியின் மூன்றாம் கால்பகுதியையும் மைக்கல்மென் கழகம் 15:20 என்ற புள்ளிகள் கணக்கில் தமக்கு சொந்தமாக்கியது. இதன்படி ஆட்டத்தின் மூன்றாம் கால் பகுதி நிறைவுறும் போது 61:52 என்ற புள்ளிகள் கணக்கில் மைக்கல்மென் அணியின் முன்னிலையே இருந்தது. இறுதிக் கால்பகுதியை புனித மைக்கல் கல்லூரியின் பாடசாலை வீரர்கள் 25:22 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய போதிலும் முன்னைய கால்பகுதிகளில் அவர்கள் விட்ட தவறுகள் போட்டியின் வெற்றியாளர்களாக மைக்கல்மென் அணி காரணமாக அமைந்துவிட்டது. இதன்படி, 77:83 என்ற புள்ளிகள் கணக்கில் மைக்கல்மென் விளையாட்டுக் கழகம் போட்டியில் வென்று இம்முறைக்கான வெபர் கிண்ணத் தொடரில் முதல் வெற்றியை சுவைத்த அணியாக மாறியது.


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் மொரட்டுவ கழகம்

இதேநேரம் குழு B இன் அணிகளின் முதல் லீக் போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகமும், மொரட்டுவ அணியும் மோதின. இப்போட்டியின் முதல் கால்பகுதியை மிகவும் உற்சாகமாக செயற்பட்ட பொலிஸ் விளையாட்டுக் கழகம் 19:09 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. இதற்கு, இரண்டாம் கால்பகுதியை மொரட்டுவ அணி 22:09 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி பதிலடி தந்தது. தொடர்ந்து மூன்றாம் கால்பகுதி 22:17 என்ற புள்ளிகள் கணக்கில் மீண்டும் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் வசமானது. மூன்றாம் கால்பகுதியை பொலிஸ் அணி கைப்பற்றியதால் ஆட்டத்திலும் 50:48 என்ற புள்ளிகள் கணக்கில் பொலிஸ் அணி முன்னிலை பெற்றுக் கொண்டது.

முதலாவது ஆசிய சவால் கிண்ணத்தை தம்வசமாக்கியது ஈராக்

பின்னர், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிக் கால்பகுதியில் பொலிஸ் விளையாட்டுக் கழகம் 12 புள்ளிகளையே பெற்ற வேளையில், இக்கால்பகுதியில் 19 புள்ளிகளை எடுத்த மொரட்டுவ அணி 67:62 என்ற புள்ளிகள் கணக்கில் பொலிஸ் அணியை வீழ்த்தி தொடரில் தமது முதல் வெற்றியை பதிவு செய்தது.


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக் கழகம்

இப்போட்டியை அடுத்து இடம்பெற்ற குழு B இன் அடுத்த போட்டியில் பலம் கொண்ட விமானப்படை விளையாட்டுக் கழகமும், மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக் கழகமும் தம்மிடையே மோதின.  ஆட்டத்தின் முதல் கால்பகுதியை விமானப்படை அணி தமது வீர்ரகளின் துரிதகதியிலான செயற்பாடுகள் மூலம் 23:11 என்ற புள்ளிகள் கணக்கில் தமக்கு சொந்தமாக்கிய போதிலும், இரண்டாம் கால்பகுதியை அவர்கள் 09:19 என்ற புள்ளிகள் கணக்கில் பறிகொடுத்தனர். இதனால், ஆட்டத்தின் இரண்டாம் கால்பகுதி நிறைவுறும் போது 33:30 என்ற புள்ளிகள் கணக்கில் சிறிய புள்ளிகள் இடைவெளி ஒன்றுடனேயே விமானப்படை விளையாட்டுக் கழகத்தினால் முன்னிலை பெற முடிந்தது.

எனினும், ஆட்டத்தின் இறுதி இரண்டு கால்பகுதிகளிலும் திறமையை வெளிக்காட்டிய பொலிஸ் விளையாட்டுக் கழக அணியினர் இறுதி இரண்டு கால்பகுதிகளையும் 17:20, 07:12 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் 64:54 என்ற புள்ளிகள் கணக்கில் லக்கி விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து வெபர் கிண்ணத் தொடரின் முதல் நாளில் தமக்காகவும் ஒரு வெற்றியை பதிவு செய்தனர்.


ஓல்ட் பென்ஸ் கழகம் எதிர் நீர்கொழும்பு மாகிஸ் கழகம்

இதன் பின்னர், முதல் நாளின் இறுதி ஆட்டமாக இடம்பெற்ற போட்டியில் கொழும்பைச் சேர்ந்த ஓல்ட் பென்ஸ் கழகமும், நீர்கொழும்பு மாகிஸ் கழகமும்  பங்குபற்றியிருந்தன. இப்போட்டியின் முதல் கால்பகுதியை 16:12 என்ற புள்ளிகள் கணக்கில் மாகிஸ் அணி கைப்பற்றியது. எனினும், ஆட்டத்தின் இரண்டாம் கால்பகுதியில் திறமையை வெளிப்படுத்திய ஓல்ட் பென்ஸ் அணி இரண்டாம் கால்பகுதியை 26:09 என்ற புள்ளிகள் கணக்கில் தமக்கு சொந்தமாக்கியது. அந்த வகையில் இரண்டாம் கால் பகுதியில் வெற்றி பெற்றதால் 38:25 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியிலும் ஓல்ட் பென்ஸ் அணி முன்னிலை அடைந்தது.

ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கைக்கு மூன்றாம் இடம்

ஆட்டத்தின் மூன்றாம் கால் பகுதி 16:13 என்கிற புள்ளிகள் கணக்கில் மாகிஸ் அணியின் ஆதிக்கத்தோடு நிறைவுற்ற போதிலும், போட்டியின் இறுதிக் கால்பகுதியை 21:15 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றி ஓல்ட் பென்ஸ் அணி போட்டியில் 72:54 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியை சுவைத்தது.

வெபர் கிண்ணத் தொடரின் முதல் நாள் போட்டிகளில் மைக்கல்மென் விளையாட்டுக் கழகம், மொரட்டுவ அணி, விமானப்படை விளையாட்டுக் கழகம் மற்றும் ஓல்ட் பென்ஸ் அணி ஆகியவை வெற்றி பெற்ற நிலையில் தொடரின் இரண்டாம் நாள் போட்டிகள் சனிக்கிழமை (22) இடம்பெறவுள்ளது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<