“மஹானாமவை தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கவேண்டும்” – முரளி

Sri Lanka Cricket

1012

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படுவதற்கான சரியான நபர், முன்னாள் இலங்கை அணி வீரரும், தற்போதைய தொழிநுட்ப குழு உறுப்பினருமான ரொஷான் மஹானாம என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், ஹிரு டீவிக்கு வழங்கிய செவ்வியில், புதிய பயிற்றுவிப்பாளராக யார் செயற்படவேண்டும் என்ற தனிப்பட்ட கருத்தினை, முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக தம்மிக்க சுதர்ஸன

தற்போது கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதால், பயிற்றுவிப்பாளர்கள் உயிரியல் பாதுகாப்பு வளையத்தில் அதிகமான நாட்கள் இருக்கவேண்டும். எனவே, குடும்பத்துடன், இருக்கும் வாய்ப்புகள் அவர்களுக்கு குறைவு. எனவே, இலங்கையில் உள்ள பயிற்றுவிப்பாளர் ஒருவர் அணியில் இருக்கவேண்டும்.

குறிப்பாக வீரர்களிடன் தற்போது  ஒழுக்கம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. இந்த விடயத்தை சரிசெய்யக்கூடிய ஒருவரை எனக்கு தெரியும். அவர்தான், ரொஷான் மஹானாம. அவரை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் இல்லையென்றால், வேறு ஒரு பதவி இல்லாமல், பயிற்றுவிப்பாளராக நியமிக்க வேண்டும் என்றார்.

இதேநேரம், அவருக்கு கீழ் செயற்படுவதற்கு இலங்கையின் சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் உள்ளனர் எனவும், இந்த விடயங்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவருக்கு கீழ், ருவான் கல்பகே உட்பட பல முன்னணி உள்ளூர் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளனர். எனவே, அவர்களை இணைக்கவேண்டும். குறிப்பாக இந்த கருத்து எனது தனிப்பட்ட கருத்தாகும். இது கிரிக்கெட் சபையின் முடிவல்ல, இலங்கையின் முடிவல்ல. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இந்த கருத்தினை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கூறியுள்ளேன். ரொஷான் மஹானாம அவர்களிடம் கூறியுள்ளேன். ஆனால், ரொஷான் மஹானாம இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரிடம் கூறியபோது, அவருக்கு இததொடர்பில் சிந்திக்க காலம் வேண்டும் என கூறினார்

இதேவேளை, ரொஷான் மஹானாம இலங்கை கிரிக்கெட்டின் ஒழுக்கமான வீரர்களில் ஒருவர் எனவும், அவரால் இலங்கை கிரிக்கெட் அணியில் நிலவும் ஒழுக்க குறைபாடுகளை நீக்க முடியும் எனவும், அதன்மூலம் அணி வளர்ச்சியடையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரொஷான் மஹானாம என்ற வீரர் ஒழுக்கம் உடைய ஒரு வீரர். அவரிடம் நான் அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன். குறிப்பாக அவர் ஒழுக்கத்துக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடியவர். எனவே, தேசிய அணிக்கு வந்ததும், ஒழுக்கத்தை சரிசெய்யும் பட்சத்தில் ஏனைய விடயங்கள் அனைத்தும் சரியாகும். 

பின்னர், ரொஷான் மஹானாமவால், U19 பயிற்றுவிப்பாளர்களில் இருந்து, ஒரு இணைப்பினை பேணமுடியும். இதன்மூலம் ஒன்றரை வருடங்களுக்குள் எமக்கான சரியான பாதையை அடையமுடியும்

இதேவேளை, முன்னாள் பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹதுருசிங்க தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை எனவும் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

மிக்கி ஆர்தர் மற்றும் கிரேண்ட் பிளவர் போன்றோரின் பயிற்சி முறை இலங்கைக்கு பொருந்தும் என நான் நினைக்கவில்லை. வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களால், எமக்கேற்ற பயிற்சிகளை வழங்க முடியாது என நினைக்கிறேன். குறிப்பாக சந்திக்க ஹதுருசிங்கவுக்கு சிறந்த வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும், அதனை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. எனவே தான் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்கள் அழைக்கப்பட்டனர். எனினும், இப்போது உள்ளூர் பயிற்றுவிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு சரியான தருணம் என நினைக்கிறேன் என முரளிதரன் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…