இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை எதிர்பார்த்திருக்கும் இலங்கை அணி

2288
Image Courtesy - AFP

இன்றைய கிரிக்கெட் மைதானங்கள் பொதுவாக துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதமகமான ஒன்றாகவே இருக்கின்றது. எனவே, கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடுகளினதும் அணிகள் தமக்கு மூன்று வகைப் போட்டிகளிலும் திறமையான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கின்றன.

கிரிக்கெட் உலகின் அண்மைய நாட்களில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களினாலேயே அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதை அவதானிக்கின்றோம். எனினும், சமிந்த வாஸிற்குப் பின்னர் இலங்கை அணியினால் சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை உருவாக்க முடியாமல் போனது கவலைக்குரிய விடயமாகும்.  

அர்ஜுனவின் மன உறுதி தேவை

T20 போட்டிகளின் வருகைக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டிகள் துடுப்பாட்ட வீரர்களுக்குரிய விளையாட்டாகவே மாறியிருக்கின்றது. அதாவது, கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை பந்துவீச்சாளர்களை விட துடுப்பாட்ட வீரர்கள் வெளிப்படுத்துவதையே அடிக்கடி காணக்கூடியதாக உள்ளது. இதனாலேயே கிரிக்கெட் அணியொன்றுக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் தேவை இன்றியமையாததாக இருக்கின்றது. கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயற்படுபவர்கள் பெரும்பாலாக வலதுகை துடுப்பாட்ட வீரர்களாகவே இருக்கின்ற காரணத்தினால் அவர்களை சிறப்பாக எதிர்கொள்ள இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களின் ஸ்வீங் பந்துகள் முக்கியமாக இருக்கின்றன.

முக்கிய தருணங்களில் வீசப்படும் ஓட்டமற்ற ஓவர்களை (Death Overs) வீசுவதிலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் பெரிய பங்கினை எடுத்துக் கொள்வதோடு துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டங்கள் அதிகமாக சேர்க்க வழங்கப்படும் பவர் பிளே (Power Play) ஓவர்களிலும் முக்கிய பங்கினை அவர்கள் எடுக்கின்றனர். இவை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்களின் தேவை எந்தளவுக்கு இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இதேவேளை, கிரிக்கெட்டின் நீண்ட வடிவமான டெஸ்ட் போட்டிகளில் பந்து பழையதாக மாறும் போது அதனை சிறப்பாக கையாள்வதற்கும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இன்றியமையாதவர்களாக இருக்கின்றனர்.

முன்னைய நாட்களில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் சிறப்பானவர்களாக வசீம் அக்ரம், அலன் டேவிட்சன், கார்பீல்ட் சோபர்ஸ் மற்றும் சமிந்த வாஸ் போன்றோர் இருந்தனர். இவர்களின் பாத்திரத்தை இன்றைய நாட்களில் மொஹமட் ஆமீர், மிச்செல் ஸ்டார்க், ட்ரென்ட் போல்ட் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் எடுத்திருக்கின்றனர். இவர்களில் 2014 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களாக ட்ரென்ட் போல்ட் மற்றும் மிச்செல் ஸ்டார்க் ஜோடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் உலகக் கிண்ணப் போட்டிகளில் காட்டிய பதிவுகளையும் மறக்க முடியாது. 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் வசீம் அக்ரம் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவராக இருந்ததோடு, 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் சமிந்த வாஸ் அபாரமாக செயற்பட்டிருந்தார். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் இந்திய அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஸஹீர் கானினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, இறுதியாக நடைபெற்று முடிந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களினால் மொத்தமாக 100 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றப்பட்டிருந்தன.

இலங்கை அணியைப் பொறுத்தவரை மூன்றுவகைப் போட்டிகளிலும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கான தேவை அதிக சதவீதத்தில் இருப்பதோடு, அப்படி ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் கிடைத்தால், அது இலங்கை அணியின் பந்துவீச்சினை அடுத்த பரிமாணத்திற்கும் எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூரண உடல் தகுதியை நிரூபித்துள்ள மெதிவ்ஸ், லக்மால்

இவ்வாறு இலங்கை அணியில் இணைவதன் மூலம் இலங்கையின் பந்துவீச்சுத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் சிலரைப் பார்ப்போம்.

விஷ்வ பெர்னாந்து

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட காரணத்தினால், 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கையின் டெஸ்ட் குழாமில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான விஷ்வ பெர்னாந்து உள்வாங்கப்பட்டிருந்தார்.

எனினும் நுவன் பிரதீப், தம்மிக்க பிரசாத் போன்ற அனுபவ வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்த காரணத்தினால் பெர்னாந்துவுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தது.

பின்னர், சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர்கள் சிலரின் உபாதை காரணமாக தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு 2016 ஆம் ஆண்டு பெர்னாந்துவுக்கு இலங்கையில் இடம்பெற்றிருந்த அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மூலம் கிடைத்திருந்தது.  

26 வயதாகும் பெர்னாந்து துரிதகதியில் பெளன்சர் (Bouncer) பந்துகளையும், துல்லியமான யோக்கர் பந்துகளையும் வீசக்கூடிய ஆற்றல் கொண்டவராவார்.  சிறப்பான ஆற்றல்களை கொண்டிருந்த போதிலும் பெர்னாந்துவினால் அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரில் பங்குபற்றி 3 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்ற முடிந்தது. இதனாலேயே என்னவோ? இலங்கை அணியின் தேர்வாளர்கள் விஷ்வ பெர்னாந்து மீது தற்போது கவனம் செலுத்த தவறியிருக்கின்றனர். ஒரு நாள் போட்டிகள் தவிர இலங்கை அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விஷ்வ பெர்னாந்து விளையாடியிருக்கின்றார்.  

சர்வதேச கிரிக்கெட் தவிர 49 உள்ளூர் முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள பெர்னாந்து அதில் 134 விக்கெட்டுக்களையும், 32 உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருக்கின்றார்.

இசுரு உதான

இலங்கை அணி T20 போட்டிகளுக்கென விசேடமாக வைத்திருக்கும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இசுரு உதான 2009 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமாயிருந்தார். 30 வயதாகும் உதான முக்கிய தருணங்களில் ஓட்டமற்ற ஓவர்கள் (Maiden Over) வீசக்கூடிய நிபுணத்துவம் கொண்ட ஒருவராக இருக்கின்றார். அத்தோடு பின்கையினால் வீசப்படும் ஒருவகை வேகப்பந்து, யோக்கர்கள், மெதுவான பந்துகள் என்பவற்றினையும் உதானவினால் திருத்தமாக போட முடியும்.

வேகப்பந்துவீச்சாளர்களின் தொடர் உபாதையும், ஹத்துருசிங்கவின் புதிய வியூகமும்

2012 ஆம் ஆண்டு இந்திய அணியுடன் இடம்பெற்ற தொடரில் விக்கெட்டுக்கள் எதனையும் கைப்பற்றாத காரணத்தினால் இசுரு உதான தேசிய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும், உதான தற்போது T20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார்.  

இலங்கை அணிக்காக இதுவரையில் 12 T20 போட்டிகளில் ஆடியிருக்கும் உதான அவற்றில் 14 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இசுரு உதான தன் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வாராயின் இலங்கை அணிக்காக மூன்று வகைப் போட்டிகளிலும் சிறப்பாக செயற்படும் ஒரு வீரரினை எம்மால் வரும் காலங்களில் பார்க்க முடியும்.

பினுர பெர்னாந்து

இலங்கை அணியில் T20 போட்டிகளுக்காக அறிமுகமாகிய வீரர்களில் ஒருவரான பினுர பெர்னாந்து தனது அறிமுகப் போட்டியில், பாகிஸ்தானின் அதிரடி வீரரான சஹிட் அப்ரிடியின் விக்கெட்டைக் கைப்பற்றி மிகச் சிறந்த ஆரம்பத்தினைக் காட்டியிருந்தார்.

ஆறு அடி ஆறு அங்குல உயரம் கொண்ட பினுர பெர்னாந்து எதிரணி துடுப்பாட்ட வீரர்களை  குழப்பத்துக்கு உள்ளாக்கும்படி வேகத்தினை மாற்றி பந்துவீசும் உத்தியினை தன்னகத்தே வைத்திருக்கின்றார். இயற்கையிலேயே அவர் உயரமானவர் என்பதனால் அவருக்கு ஏனைய பந்து வீச்சாளர்களை விட சிறந்த வகையிலான பெளன்சர் பந்துகளையும் வீச முடியும். இன்னும், பந்தை இரண்டு முறையிலும் ஸ்வீங் செய்யும் ஆற்றலும் அவருக்கு உண்டு. இந்த ஆற்றல் ஏனைய இலங்கை வீரர்களில் இருப்பது மிகக் குறைவாகும்.

2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20 குழாமில் உள்ளக்கப்பட்டிருந்த பினுர பெர்னாந்து டெஸ்ட் குழாமில் வாய்ப்பினைப் பெற்ற போதிலும், அப்போதைய இலங்கையின் வேகப்பந்துவீச்சுத்துறை அனுபவம் கொண்ட பந்துவீச்சாளர்களினால் நிரப்பப்பட்டிருந்த காரணத்தினால் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட சந்தர்ப்பம் இல்லாமல் போயிருந்தது.

இலங்கை கிரிக்கெட் சபை வரலாற்றில் மிகப்பெரிய இலாப பதிவு

இலங்கை அணிக்காக 2 T20 போட்டிகளில் ஆடி தற்போது உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக செயற்பட்டுவருகின்ற பெர்னாந்துவுக்கு தேசிய அணியில் மீண்டும் வாய்ப்புக்கிடைத்தால் எதிர்காலத்தில் பல்வகைத் திறமைகள் கொண்ட வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை எம்மால் பார்க்க முடியும்.

அனுக் பெர்னாந்து

22 வயதுடைய அனுக் பெர்னாந்து, 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற 19 வயதின் கீழ்ப்பட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கையின் முக்கிய பந்துவீச்சாளராக மாறியிருந்தார். இதற்கு காரணம் குறித்த உலக கிண்ணத்தில் அனுக் பெர்னாந்து 15 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, 2014 ஆம் ஆண்டுக்கான 19 வயதின் கீழ்ப்பட்ட உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராக இருந்தமையாகும். இந்த உலகக் கிண்ணத்தில் அனுக் பெர்னாந்துவோடு தற்போதைய நாட்களில் வெற்றிகரமாக திகழும் முஸ்தபிசுர் ரஹ்மான், ககிஸோ றபடா ஆகியோரும் பங்குபற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனுக் பெர்னாந்து ஒரு சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பது ஒருபுறமிக்க அவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரரும் ஆவார். இதுவரையில் 26 உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 2 சதங்கள், 3 அரைச்சதங்கள் அடங்கலாக மொத்தமாக 35 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றார்.

இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட அணி, தவிர அனுக் பெர்னாந்து இலங்கை A அணி, இலங்கையின் 23 வயதின் கீழ்ப்பட்ட அணி, இலங்கை கிரிக்கெட் தலைவர் பதினொருவர் அணி ஆகியவற்றுக்காகவும் கிரிக்கெட் போட்டிகளில ஆடியிருக்கின்றார். இன்னும் பெர்னாந்து சிறப்பாக செயற்படுவார் எனில், அவரினால் தேசிய அணியிலும் இணைந்து நல்ல பதிவுகளைக் காட்ட முடியும்.

விமுக்தி பெரேரா

2013 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை A அணியில் சிறப்பாக செயற்பட்டிருந்த காரணத்தினால் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான விமுக்தி பெரேராவுக்கு அதே ஆண்டிலேயே தென்னாபிரிக்க அணியுடனான போட்டி ஒன்றில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருந்தது. எனினும், துரதிஷ்டவசமாக குறித்த போட்டியில் பெரேரா விளையாடியிருக்கவில்லை. பின்னர், இலங்கை அணியில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டுக்கு திரும்பிய விமுக்தி பெரேரா இதுவரையில் 70 முதல்தரப் போட்டிகளிலும், 38 உள்ளூர் ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி 200 இற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றார். இதேவேளை இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்காகவும், இலங்கை A அணிக்காகவும் பெரேரா தொடர்ந்து விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.

மொஹமட் டில்சாத்

26 வயதான இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் டில்சாத் அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாண முதல்தரக் கிரிக்கெட் தொடரில், இரண்டு அட்டகசமான இன்-ஸ்விங்கர் பந்துகளின் மூலம் தனஞ்சய டி சில்வா, கெளஷால் சில்வா ஆகியோரின் விக்கெட்டுக்களை கைப்பற்றியதற்காக அனைவராலும் பேசப்பட்டிருந்தார்.  இன்-ஸ்விங் பந்துகள் தவிர டில்சாத்தினால் யோக்கர் பந்துகளையும், பெளண்சர் பந்துகளையும் சிறப்பாக வீச முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் 27 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள டில்சாத் 68 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். இதில் டில்சாத்தினால் இரண்டு தடவைகள் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வியக்கத்தக்க வகையில் பந்துவீசும் ஆற்றலைக் கொண்ட மொஹமட் டில்சாத்தும் தேசிய அணிக்கு வரவேற்கப்படக்கூடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருக்கின்றார்.