மேலும் ஒரு இடம் முன்னேறிய வனிந்து ஹஸரங்க

225

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டிருக்கும் புதிய T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரரான வனிந்து ஹஸரங்க நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

“மஹானாமவை தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கவேண்டும்” – முரளி

அதன்படி முன்னதாக ஐந்தாம் இடத்தில் காணப்பட்டிருந்த வனிந்து ஹஸரங்க தற்போது நான்காம் இடத்திற்கு முன்னேறி, 693 தரநிலைப் புள்ளிகளினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. வனிந்து ஹஸரங்க இங்கிலாந்து அணிக்கு எதிரான T20 தொடரில் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை அவரின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைகின்றது. 

இதேநேரம், தென்னாபரிக்காவின் மணிக்கட்டு சுழல்வீரரான தப்ரைஸ் சம்ஷி T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 821 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்க, ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் நட்சத்திரமான ரஷீட் கான் 719 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஏற்கனவே நான்காம் இடத்தில் காணப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மணிக்கட்டு சுழல்வீரராான ஆதில் ரஷீட் 695 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தினை பெற்றிருக்கின்றார். 

அதேநேரம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சாளர்களில் ஒருவரான முஜிபுர் ரஹ்மான்  ஐந்தாம் இடத்தில் 687 புள்ளிகளுடன் காணப்பட, ஏற்கனவே மூன்றாம் இடத்தில் காணப்பட்டிருந்த அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளரான அஷ்டன் ஏகார் 676 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக தம்மிக்க சுதர்ஸன

இதேவேளை நியூசிலாந்தின் டிம் சௌத்தி 7ஆம் இடத்திலும், அவுஸ்திரேலிய அணியின் அடம் ஷம்பா 8ஆம் இடத்திலும், நியூசிலாந்தின் ஏனைய வீரரான இஷ் சோதி 9ஆம் இடத்திலும் காணப்படுகின்றனர். 

இவர்கள் ஒருபக்கமிருக்க தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் மூன்று விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழல்பந்துவீச்சாளரான பெபியன் அலன் 16 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<