10ஆவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் (சனிக்கிழமை) இரண்டு முக்கிய போட்டிகள் இடம்பெற்றன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர் ரைசிங் பூனே சூபர்ஜயண்ட்

PRGvSRH

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் மற்றும்  சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணியின் தொடக்க வீரர்களாக ரகானேவும், திரிபதியும் களம் இறங்கினர்.

அதிரடி துடுப்பாட்ட வீரர் திரிபதி 1 ஓட்டம் எடுத்த நிலையில் ரன்அவுட் முறை மூலம் ஆட்டம் இழந்தார். அத்துடன் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணியின் ஓட்ட வேட்டையில் தொய்வு ஏற்பட்டது.

பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

ஸ்டீவ் ஸ்மித் 34 ஓட்டங்களும், ரகானே 22 ஓட்டங்களும் சேர்த்தனர். 5ஆவது விக்கெட்டுக்காக களம் இறங்கிய தோனி 21 பந்துகளில் 31 ஓட்டங்கள் சேர்க்க ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பின்னர் 149 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களம் இறங்கியது.

புனே அணியின் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசினர். இதனால் தொடக்க வீரர்களான சிகர் தவான் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. தவான் 12 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ் ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

அடுத்து டேவிட் வோர்னர் உடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். 34 பந்துகளில் 40 ஓட்டங்கள் சேர்த்திருந்த நிலையில் வோர்னர் ஆட்டம் இழந்தார். அத்துடன் ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி மூன்று ஓவர்களில் 32 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் யுவராஜ் சிங், நமன் ஓஜா ஆகியோரை வெளியேற்றினார். 43 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் வெற்றிக்காக கடைசி இரண்டு ஓவர்களில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய 19ஆவது ஓவரில் ஹைதராபாத் அணி 9 ஓட்டங்களை சேர்த்தது.

இதனால் கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது, இந்த ஓவரை உனத்கட் வீசினார். 2வது, 3ஆவது மற்றும் 4ஆவது என தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இதனால் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புனே 8 வெற்றிகளுடன் பிளேஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் – 148/8 (20) – பென் ஸ்டோக்ஸ் 39(25), ஸ்டீவ் ஸ்மித் 34(39), மஹேந்திர சிங் தோனி 31(21)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 136/9 (20) – யுவராஜ் சிங் 47(43), டேவிட் வோர்னர் 40(34), உனத்கட் 30/5(4)

முடிவு – ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் 12 ஓட்டங்களால் வெற்றி


மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி டேர்டெவில்ஸ்

MIvDDநேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டி டெல்லியில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் இதில் பலப்பரீட்சை நடாத்தின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ், பார்தீவ் பட்டேல் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்.

பார்தீவ் பட்டேல் நிதானமாக விளையாட சிம்மன்ஸ் அதிரடி காட்டினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவரில் 79 ஓட்டங்களைக் குவித்தது.

பார்தீவ் பட்டேல் 25 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரோன் பொல்லார்ட் களம் இறங்கினார். சிம்மன்ஸ் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 66 ஓட்டங்களை குவித்து ஆட்டம் இழந்தார்.

பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடி ஆட்டம் காட்ட மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ஓட்டங்களை குவித்தது.

பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 63 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 213 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடக் களம் இறங்கிய டெல்லி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து திணறியது.

டெல்லி அணி சார்பில் கே.கே. நாயர் 21 ஓட்டங்களை குவித்தார், மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 146 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

லசித் மலிங்க இந்த விக்கெட்டுக்களின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் 150 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ஒரு வீரராக புதிய தடம் பத்தித்தார்.

போட்டியின் சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் – 212/3 (20) – லெண்டல் சிமன்ஸ் 66(43), கிரோன் பொலார்ட் 63(35), ஹர்திக் பாண்டயா 29(14)

டெல்லி டேர்டெவில்ஸ் – 66 (13.4) – ஹர்பஜன் சிங் 22/3(4), கே.வி. ஷர்மா 11/3(3.4), லசித் மலிங்க 5/2(2)

முடிவு – மும்பை இந்தியன்ஸ் அணி 146 ஓட்டங்களால் வெற்றி