இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், நட்சத்திர வீராங்கனையுமான சமரி அத்தபத்து, ஐசிசி இன் 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் மற்றும் T20 மகளிர் கிரிக்கெட் அணிகளில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், T20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் ஒருநாள் மற்றும் T20 அணிகளை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் ஐசிசி ஒருநாள் மகளிர் அணி மற்றும் ஐசிசி T20 மகளிர் அணி ஆகியவற்றின் தலைவியாக தென்னாப்பிரிக்காவின் லோரா வுல்வார்ட் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சிறந்த ஒருநாள் மற்றும் T20 அணிகளில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து பெயரிடப்பட்டுள்ளார்.
இதில் கடந்த ஆண்டு 9 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய சமரி அத்தபத்து, ஒரு சதம், 2 அரைச் சதங்கள் உட்பட 458 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
- 2024 ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து மெண்டிஸ்
- ஐசிசி ஒருநாள் அணியின் தலைவராக சரித் அசலங்க நியமனம்
- 2024 ஐசிசி சிறந்த T20 அணியில் வனிந்து ஹஸரங்க
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரைச் சதம் அடித்து, இறுதி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்று, தமது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த ஓட்டங்களைப் பதிவு செய்தார். பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
அதேபோல, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் அவரது தலைமையிலான இலங்கை மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியைப் பெற்றது. இதன்போது இறுதிப்போட்டியில் சமரி அத்தபத்து ஒரு அற்புதமான 91 ஓட்டங்களைக் குவித்து இலங்கையில் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
இதனிடையே, ஐசிசி இன் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சமரி அத்தபத்து, 2024ஆம் ஆண்டின் ஐசிசி இன் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, ஐசிசி இனால் வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச T20 அணியிலும் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து பெயரிடப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு 21 மகளிர் T20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர், 720 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதம், 4 அரைச் சதங்கள் அடங்கும். அதேபோல, பந்துவீச்சில் 21 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
2024ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் ஒருநாள் அணி விபரம்
லோரா வுல்வார்ட் (தலைவி – தென்னாப்பிரிக்கா), சமரி அத்தபத்து (இலங்கை), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), ஹேலி மெத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), மாரிஸ்ஆன் கெப் (தென்னாப்பிரிக்கா), ஏஷ்லி கார்ட்னர் (அவுஸ்திரேலியா), அனாபெல் சதர்லண்ட் (அவுஸ்திரேலியா), அமி ஜோன்ஸ் (விக்கெட் காப்பாளர் – இங்கிலாந்து), தீப்தி ஷர்மா (இந்தியா), சொபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து), கேட் க்ரொஸ் (இங்கிலாந்து)
2024ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் T20 அணி விபரம்
லோரா வுல்வாட் (தலைவி – தென்னாப்பிரிக்கா), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), சமரி அத்தபத்து (இலங்கை), ஹேலி மெத்யூஸ் (மேற்கிந்தித் தீவுகள்), நெட் சிவர்-ப்ரன்ட் (இங்கிலாந்து), அமேலியா கேர் (நியூசிலாந்து), ரிச்சா கோஷ் (விக்கெட் காப்பாளர் – இந்தியா), மாரிஸ்ஆன் கெப் (தென்னாப்பிரிக்கா), ஓலா ப்ரெண்டகாஸ்ட் (அயர்லாந்து), தீப்தி ஷர்மா (இந்தியா), சாதியா இக்பால் (பாகிஸ்தான்)
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<