“நோ போல்” பந்துகளை அவதானிக்கவுள்ள தொலைக்காட்சி நடுவர்!

493

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான தொடருடன் ஆரம்பமாகும், ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக்கில் பந்துவீச்சாளர்களின் நோ போல் பந்துகள் (Front-foot no-balls) தொலைக்காட்சி நடுவர் மூலமாக கண்காணிக்கப்படவுள்ளது.

நோ போல் பந்துகள் கண்காணிக்கப்படுவது மாத்திரமின்றி, பந்துவீசும் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஓவர்களை வீசி முடிக்க தவறுமாயின், ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக்கில் இருந்து புள்ளிகள் குறைக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான குழாத்தை அறிவித்த இங்கிலாந்து

சர்வதேச ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட்டில் அதிகமான விமர்சனங்களை, நோ போல் பந்துகள் எழுப்பியிருந்தன. காரணம், அதிகமான நோ போல் பந்துகளை கணிப்பதற்கு கள நடுவர்கள் தடுமாறுவதன் காரணமாக, போட்டியின் முடிவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அதன் காரணமாக இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான தொடர் மற்றும் மகளிர் உலகக் கிண்ணத் தொடர்களில், நோ போல் பந்துகளை மூன்றாவது நடுவர் அவதானிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த திட்டமானது, சாதகமாகவும் அமைந்திருந்தது.

குறித்த இந்த திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐசிசியின் பொது முகாமையாளர் ஜெப் எல்லர்டைஸ், “அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரில் இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், நோ போல் பந்துகளுக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. ப்ரீ-இட் பந்துகள் வழங்கப்படுவதால், நோ போல் பந்துகள் சரியாக கணிக்கப்பட வேண்டும்.

எனவே எதிர்காலத்தில் சிறந்த முறையில் இதனை நடைமுறைப்படுத்துவதற்காக, ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக்கில் இந்த முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐசிசி கிரிக்கெட் குழு ஆலோசனை வழங்கியுள்ளது” என்றார்.

உயரத்துக்கான நோ போல் பந்துகள் வழமைப் போன்று கள நடுவர்களால் அவதானிக்கப்படவுள்ளது. எனினும், கள நடுவர்கள் பந்துவீச்சாளர்களின் கால்களை அவதானித்து சரியான நோ போல்களை வழங்க தடுமாறி வருகின்றனர். உயர்மட்ட கிரிக்கெட் போட்டிகளில் இவ்வாறான தவறுகள் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 2018ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டி

முதலில் 2016ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரில் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல்களை அவதானிக்கும் செயற்பாடு பரிசோதிக்கப்பட்டது. ஆனால், அதன்போது அதிக நேரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. குறிப்பாக 2018ம் ஆண்டு இங்கிலாந்து அணி, இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, நடுவர்களால் 12  நோ போல் பந்துகள் தவறவிடப்பட்டதை, போட்டி ஒளிபரப்பாளர்கள் கண்டறிந்தனர்.

அதேபோன்று 2019ம் ஆண்டு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான முக்கியமான ஐ.பி.எல். போட்டி ஒன்றின் இறுதிப் பந்தில், நடுவர் எஸ்.ரவி நோ போல் பந்தினை கணிக்க தவறியிருந்தார். 

அதுமாத்திரமின்றி, கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், க்ரிஸ் கெயில் ஆட்டமிழந்திருந்தார். ஆனால், குறித்த பந்துக்கு முதல் பந்து, நோ போல் பந்தாக இருந்த போதும், நடுவர் அதனை கணிக்க தவறினார். அதனால், ப்ரீ-இட் பந்தாக இருக்க வேண்டிய பந்தில் கெயில் ஆட்டமிழந்திருந்தார்.

இதனால் நோ போல் பந்துகள் மூன்றாவது நடுவர் மூலமாக கண்காணிக்கப்படுவது மிகச்சிறந்த விடயம் என்பதை ஐசிசி ஏற்றுக்கொண்டுள்ளது. 

அதேநேரம், நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரில் வெற்றித் தோல்விகளுக்கு புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. இதில், வெற்றிக்கு 10 புள்ளிகளும், சமனிலை, கைவிடப்பட்ட போட்டி என்பவற்றுக்கு 5 புள்ளிகளும் வழங்கப்படும். அதேநேரம், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்து ஓவர்கள் வீசிமுடிக்கப்படாத பட்சத்தில், ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு புள்ளி வீதம் குறைக்கப்படும் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஐசிசி கடந்த ஜூன் மாதம் கொவிட்-19 வைரஸ் காரணமாக அறிவித்ததன் படி, ஒருநாள் மற்றும் T20  போட்டிகளுக்கு தற்காலிக அடிப்படையில் 2 DRS வாய்ப்புகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க