அனைத்து வகை போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார் ராயுடு

957
ICC

இந்திய கிரிக்கெட் அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் அம்பத்தி ராயுடு அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அவர் ஓய்வுபெறுவதனை மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக இந்திய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ராஹூல் ஜொஹ்ரி உறுதிப்படுத்தியுள்ளார். 

சதங்களில் சங்கக்காரவின் சாதனையை சமப்படுத்திய ரோஹித் சர்மா

ஒரே உலகக் கிண்ணத் தொடரில் நான்கு சதங்கள் அடித்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். இதன்படி, ஒரே உலகக்…

அம்பத்தி ராயுடு இந்திய கிரிக்கெட் சபைக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், “நான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதற்கு முடிவெடுத்துள்ளேன் என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன்.  எனக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பளித்த இந்திய கிரிக்கெட் சபைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்திய அணி உலகக் கிண்ண குழாத்தை அறிவித்திருந்த நிலையில், அதிகம் பேசுபொருளாக மாறியிருந்தவர் அம்பத்தி ராயுடு. இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையின் நான்காவது இடத்துக்கு ராயுடு அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், தமிழ்நாடு வீரர் விஜய் சங்கர் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்ததுடன், மேலதிக வீரர்கள் பட்டியலில் அம்பத்தி ராயுடு இடம்பெற்றார். 

குறித்த அணித் தேர்வில் விஜய் சங்கர் இணைக்கப்பட்டமை மற்றும் தனது வெளியேற்றம் குறித்து அதிருப்தியடைந்த ராயுடு, அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் விமர்சனங்களுக்குறிய பதிவுகளை வெளியிட்டிருந்தமை, சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது.

இதன் பின்னர், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவான் மற்றும் சகலதுறை வீரர் விஜய் சங்கர் ஆகியோர் உபாதை காரணமாக உலகக் கிண்ணத் தொடரின் பாதியில் அணியிலிருந்து வெளியேறிய நிலையில், அவர்களுக்கு பதிலாக ரிஷாப் பண்ட் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அணிக்குள் அழைக்கப்பட்டிருந்தனர். 

எவ்வாறாயினும், மேலதிக வீரர்கள் பட்டியலில் இருந்த அம்பத்தி ராயுடு உலகக் கிண்ண குழாத்தில் இணைக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ராயுடு இன்று (03) அறிவித்துள்ளார்.

மத்தியவரிசை துடுப்பாட்ட வீரராக செயற்பட்டு வந்த 33 வயதான அம்பத்தி ராயுடு, இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 47.05 என்ற சராசரியில் 1,964 ஓட்டங்களை குவித்துள்ளார். அதுமாத்திரமின்றி, இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 6 T20I போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<