ஐ.பி.எல் தொடர் அனுசரணையிலிருந்து விலகும் விவோ நிறுவனம்

193
vivo ipl
BCCI

இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரின் பிரதான அனுசரணையில் இருந்து விவோ (Vivo)  நிறுவனம் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிரதான அனுசரணையாளராக சீனாவின் கையடக்கத் தொலைபேசி நிறுவனமான விவோ 5 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டில் பெற்றது. 

IPL நேரத்தில் மாற்றம்: மாற்று வீரர்களை களமிறக்கவும் அனுமதி

இதன்படி ஒவ்வொரு ஐ.பி.எல். பருவகாலத்துக்கும் விளம்பர ஒப்பந்த தொகையாக ரூ.440 கோடியை இந்திய கிரிக்கெட் சபைக்கு விவோ வழங்குகிறது.

இதனிடையே, இந்தியா மற்றும் சீன இராணுவங்களுக்கு இடையே லடாக் பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் எல்லை விவகாரம் காரணமாக தாக்குதல் நடைபெற்றது. இதில் பல இந்திய இராணுவ வீரர்கள் பலியாகினர். 

இதன் காரணமாகவும் இந்திய மக்களின் தரவுகளை பாதுகாக்கும் வண்ணமும் இந்திய மத்திய அரசு அதிரடி முடிவு ஒன்றை மேற்கொண்டது.

அதில் உலகம் முழுவதும் பிரபல செயலியான டிக்டொக் உட்பட 59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அண்மையில், இரண்டாம் கட்டமாக மேலும் 44 செயலிகள் தடை செய்யப்பட்டன. இதற்கிடையில் மக்களிடையே சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற வாதமும் நிலவி வந்தது.

இந்த நிலையில், ஐ.பி.எல் தொடரின் பிரதான அனுசரணையாளரான விவோ நிறுவனம் தலைமையிடமாக சீனாவை கொண்டுள்ளது. இதனால் விவோ நிறுவனத்துடனான ஒப்பந்தம் நீக்கப்பட வேண்டுமென BCCI மற்றும் ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதற்கு BCCI – ஐ.பி.எல் தரப்பு செவிசாய்க்காமல், ஒப்பந்தம் தொடர்ந்து நடைபெறும் எனவும், 2023 முடியும் வரை இது தொடரும் எனவும் ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்து விட்டது. 

Video – இனியாவது தொடர்ந்து நடக்குமா LPL?? | Cricket Galatta Epi 31

BCCI இன் இந்த முடிவை தொடர்ந்து #BoycottIPL என்ற ஹேஷ்டேக் மூலம் வலதுசாரி சிந்தனை கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்வதாக விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவன பிரதிநிதிகள், இந்திய கிரிக்கெட் சபை நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டால் 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று இந்திய கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (06) வெளியாகும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

IPL வீரர்களுக்கு வாரத்தில் இருமுறை கொரோனா பரிசோதனை

எனவே, ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், விவோ நிறுவனத்தின் இந்த முடிவு ஐ.பி.எல் தொடருக்கும் BCCI இற்கும் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. 

அத்துடன், விவோ அனுசரணை மூலம் ஒவ்வொரு ஐ.பி.எல் அணிகளும் இந்திய கிரிக்கெட் சபையின் வருவாய் பகிர்வு அடிப்படையில் ஆண்டுக்கு ஏறக்குறையை இந்திய பணப்பெறுமதியில் ரூ.20 கோடி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வருடத்திற்கு மட்டும் புதிய அனுசரணையாளரை தேர்வு செய்தாக வேண்டிய நிலையும் BCCI இற்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க