உலகில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக கோஹ்லி இடம்பெறல்

99
virat kohli

உலக அளவில் அதிகம் பணம் சம்பாதித்த முதல் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கால்பந்து ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லயனல் மெஸ்ஸியைப் பின்னுக்குத்தள்ளி டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரர் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.  

இதேநேரம், கிரிக்கெட் விளையாட்டில் அதிகம் சம்பாதித்த ஒரேயொரு வீரராக இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி மாறியிருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

>> கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயர் பரிந்துரை

கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை (29) வெளியிடப்பட்டுள்ளது. 

2019 ஜூன் 1 முதல் 2020 ஜூன் 1 வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிட்டு வருகின்றது. 

கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் முழுப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வீரர்கள், வீராங்கனைகள் என இரு தரப்பிலும் உள்ளவர்களைக் கொண்டு இந்த 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

வழமைபோல கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கோல்ப், குத்துச்சண்டை, கார்பந்தய வீரர்களே இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

இந்த வீரர்கள் பட்டியலில் முதல் முறையாக டென்னிஸ் பிரபலம் ரோஜர் பெடரர் முதலிடம் பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி 106.3 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டி இந்தப் பெருமையை பெடரர் பெற்றுக் கொண்டுள்ளார். 

38 வயதான பெடரர் கடந்த 2 ஆண்டுகளாக எந்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்லவில்லை. ஆனாலும் விளம்பர ஒப்பந்தம் மூலம் அவருக்கு பணமழை கொட்டுகிறது. 

போர்ப்ஸ் பத்திரிகை கடந்த 30 வருடங்களாக இந்தப் பட்டியலை வெளியிடுகிறது. இதில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஒருவர் முதலிடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

2ஆவது இடத்தில் போர்த்துக்கல் கால்பந்து வீரரும், இத்தாலியின் ஜூவன்டஸ் கால்பந்து கழகத்திற்காக விளையாடுபவருமான கிறிஸ்டியானா ரொனால்டோ உள்ளார். அவரது ஓராண்டு வருமானம் 105 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 

>> இந்திய – தென்னாபிரிக்க T20 தொடர் ஒகஸ்டிலா??

கால்பந்து வீரர் லியொனல் மெஸ்ஸி 104 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் 3ஆவது இடத்திலும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் 95.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் 4ஆவது இடத்திலும், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லிப்ரோன் ஜேம்ஸ் 88.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் 5ஆவது இடத்திலும் உள்ளனர். 

அத்துடன், கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் எட்டாம் இடத்தையும், மோட்டார் கார் பந்தய வீரர் லூயிஸ் ஹெமில்டன் 13ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலில், கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஒரே ஒரு வீரர் மட்டுமே இடம் பிடித்துள்ளார். உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக திகழும் விராட் கோஹ்லி 66ஆவது இடம் வகிக்கிறார். 

‘போர்ப்ஸ்’ இதழ் கணக்கீட்டின்படி ஒரு ஆண்டில் அவர் ஈட்டிய வருமானம் 484 (26 மில்லியன்) கோடி ரூபாயாகும். இதில் பரிசு மற்றும் சம்பளம் மூலம் 37 கோடி ரூபாயும், விளம்பர ஒப்பந்த வாயிலாக 447 கோடி ரூபாயும் குவித்து இருக்கிறார்.

31 வயதான விராட் கோஹ்லி இந்த பட்டியலில் 2018ஆம் ஆண்டில் 83ஆவது இடத்திலும், 2019ஆம் ஆண்டில் 100ஆவது இடத்திலும் இருந்தார். இப்போது மேலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, இந்த பட்டியலில் வீராங்கனைகளில் 2 பேர் மட்டுமே இடம்பிடித்துள்ளார்கள்.

100 பேர் கொண்ட பட்டியலில் வீராங்கனைகளில் முதலிடத்தை ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாகா பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் 37.4 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளார் 22 வயதுடைய ஒசாகா. ஒட்டுமொத்தப் பட்டியலில் அவருக்கு 29-வது இடமே கிடைத்துள்ளது. 

இந்தப் பட்டியலில் இடம்பிடித்த மற்றொரு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். அவருக்கு (36 மில்லியன்) 33ஆவது இடம் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2016ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸும் மரியா ஷரபோவாவும் 100 பேர் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.

>> உலகின் பணக்கார வீராங்கனையாக ஜப்பானின் நயோமி ஒசாகா சாதனை

1990 முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் 37.4 மில்லியன் வருமானம் ஈட்டியதில்லை. இதன் மூலம் நயோமி ஒசாகா புதிய சாதனை படைத்துள்ளார். 

இதன்படி, போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகில் அதிகம் சம்பாதிக்கும் 100 வீரர்களில் 35 கூடைப்பந்தாட்ட வீரர்கள், 31 அமெரிக்க கால்பந்தாட்ட விளையாட்டு வீர்ர்கள், 14 கால்பந்தாட்ட வீரர்கள், 6 டென்னிஸ் வீரர்கள், குத்துச்சண்டை மற்றும் தற்காப்புக்கலை விளையாட்டு வீரர்கள் ஐவர், நான்கு கோல்ப் வீரர்கள், 3 மோட்டார் கார் பந்தய வீரர்கள் மற்றும் தலா ஒவ்வொரு கிரிக்கெட் மற்றும் பேஸ்போல் வீரர்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<