பிராட்மேனுக்கு பிறகு கோஹ்லி தான் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் – சங்கக்கார

161
Virat Kohli Can Be the Greatest

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டொன் பிராட்மேனுக்கு பிறகு, கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக மாறுவதற்கு அனைத்து தகுதிகளும் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லிக்கு இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார புகழாரம் சூட்டியுள்ளார். 

சமகால கிரிக்கெட் உலகில் மிக சிறந்த துடுப்பாட்ட வீரராக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி விளங்குகிறார்

>> IPL தொடரை இலங்கையில் நடத்தலாம் – கவாஸ்கர்

ஒருநாள் அரங்கில் அதிவேக 8,000, 9,000, 10,000 ஓட்டங்கள் மற்றும் ஒருநாள் அரங்கில் 12,000 ஓட்டங்களைக் கடந்துள்ள இவர், இதுவரை 43 சதங்களை விளாசி அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்

அதேபோல, டெஸ்ட் அரங்கில் 27 சதங்கள் அடித்துள்ள இவர், மொத்தம் 70 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். 

கிரிக்கெட் உலகில் துடுப்பாட்டத்தில் தனக்கென தனி வரலாறே படைத்து வரும் கோஹ்லியை, அவுஸ்திரேலியாவின் ஜாம்பவனான டொன் பிராட்மேன் உடன் குமார் சங்கக்கார ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.

விராட் கோஹ்லி குறித்து பிரபல ஊடகவியலாளர் ராதா கிருஷ்ணன் ஸ்ரீனிவாசன் தொகுத்து வழங்கும் தி ஆர் கே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சங்கக்கார,  

”விராட் கோஹ்லி மிகச்சிறந்த உடல்தகுதி கொண்ட வீரர். போட்டிக்காக அவரின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. திறமை ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் சிறந்த ஒருவராக இருக்கிறார்.

கிரிக்கெட் உலகில் டொன் பிராட்மேனுக்கு பிறகு, மிகசிறந்த வீரராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இவருக்கு மட்டுமே உண்டு” என தெரிவித்தார்

இதனிடையே, விராட் கோஹ்லியை உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் இயென் செப்பல் புகழ்ந்துள்ளார். இதுதொடர்பில் அவர் கூறியதாவது,

”மூன்று வடிவிலான போட்டிகளிலும் விராட் கோஹ்லி ஓட்டங்களைக் குவித்து வரும் விதம் வியப்பூட்டுகிறது. தற்போது உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் அவர் தான். இவ்வருட இறுதியில் அவுஸ்திரேலிய வரும் இந்திய அணியில் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இவர் மிகப்பெரிய சவாலாக இருப்பார்.

இவரை கட்டுப்படுத்தினால், தொடரை கடினமில்லாமல் முடிக்க ஏதுவாக இருக்கும். கடந்த முறை டேவிட் வோர்னர் மற்றும் ஸ்மித் இருவரும் அணியில் இல்லை. இம்முறை இருவரும் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலம் அளிக்கும்என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<