கோலிக்கு எதிராக ஐசிசி இடம் புகார் அளிக்கவுள்ள பங்களாதேஷ்

ICC T20 World Cup 2022

653

பங்களாதேஷ் அணியுடனான போட்டியின்போது விராட் கோலி போலியான முறையில் களத்தடுப்பு (Fake Field) செய்ததாகவும், கோலி செய்த தவறுக்கு தமது அணிக்கு 5 ஓட்டங்களை ஐசிசி வழங்கியிருக்க வேண்டும் என பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளர் நூருல் ஹசன் பரபரப்பு குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

T20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று (02) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குழு 2இல் 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி, அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

இந்த நிலையில், குறித்த போட்டியில் விராட் கோலி களத்தடுப்பில் ஈடுபடும் போது பந்தை எறிவது போல் ஏமாற்றியதாகவும், இதனால் ஓட்டத்தை எடுக்க ஓடும் போது தடுமாறினோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணி குற்றஞ்சாட்டி உள்ளது.

அத்துடன், இது ஐசிசி விதிப்படி தவறு என்பதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ஓட்டங்களை நடுவர்கள் கொடுக்கவில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் அணி புகார் அளித்துள்ளது.

மழையின் குறுக்கீடின் பிறகு பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது, 7ஆவது ஓவரில் பௌண்டரி நோக்கி சென்ற பந்தை அர்ஷ்தீப் சிங் பிடிக்கச் சென்றார். அப்போது, இரண்டு ஓட்டங்களை ஒரு ஓட்டமாக மாற்ற, விராட் கோலி பந்தை பிடித்தது, ஸ்டெம்பை நோக்கி எறிவதுபோல் பாவனை செய்தார். ஐசிசி விதிமுறைப்படி, துடுப்பாட்ட வீரர்களை ஓடவிடாமல் இப்படி திசை திருப்புவது தண்டனைக்குறிய குற்றமாகும். மேலும், 5 ஓட்டங்களை மேலதிகமாக எதிரணிக்கு போனஸாக வழங்குவார்கள். ஆனால் களத்தில் இருந்த கிறிஸ் பிரவுன் மற்றும் மரைஸ் எராஸ்மஸ் ஆகிய இரண்டு நடுவர்களும் அதனை கவனிக்கவில்லை.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசியுள்ள பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளர் நூருல் ஹசன்,

நாங்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம், கோலி செய்த இந்த செயல் நிச்சயம் எங்களுக்கு இடையூறாகத்தான் இருந்தது. ஐசிசி விதிமுறைப்படி 5 ஓட்டங்களை கூடுதலாக வழங்கியிருக்க வேண்டும். அப்படி நடுவர்கள் வழங்கவில்லை. இது அநீதிதான். இந்த விடயத்தில் நடுவர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதால் எங்களுக்கு தோல்வி கிடைத்துள்ளது. இதனை ஐசிசியிடம் முறையிடுவோம். அவர்கள் பார்த்து என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு கட்டுப்படுவோம். எங்களுக்கு சாதகமாக முடிவு வர வாய்ப்புகள் இருக்கிறது எனக் கூறினார்.

ஐசிசி 41.5 விதியின் படி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்ற வீரர்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்துவது, ஏமாற்றுவது அல்லது தடுப்பது போன்ற வேலைகளை செய்வது தவறு. அதனை நடுவர்கள் கவனித்தால் அந்த பந்தை டெட் போலாக அறிவித்து, துடுப்பெடுத்தாடுகின்ற அணிக்கு 5 ஓட்டங்கள் பெனால்டியாக கொடுக்க முடியும்.

இதனிடையே, போட்டி முடிந்ததுமே ஐசிசியிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இதுகுறித்து முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 5 ஓட்டங்களை வழங்கி ஆட்டத்தின் முடிவிலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு வாய்ப்பே இல்லை, நடுவருக்கு வேண்டுமானால் தண்டனை வழங்கப்படலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இது இவ்வாறிருக்க, இந்தப் போட்டியின்போது No-Ball சர்ச்சையும் வெடித்தது. இந்தியா துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில், ஹசன் மஹ்மூத் வீசிய 16ஆவது ஓவரின் கடைசி பந்தை விராட் கோலி எதிர்கொண்டார். அப்போது பந்து Short Ball ஆக வர, லெக் திசையில் இருந்த நடுவரிடம் அதை No-Ball ஆக அறிவிக்கும்படி கோலி முறையிட்டார். உடனடியாக பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் ஓடி வந்து, நடுவரை நோக்கி அதை நோ-பாலாக அறிவிக்கக்கூடாது என்று முறையிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது கோலியும், சகிப் அல் ஹசனும் சிரித்துக்கொண்டே இருவரும் கட்டித்தழுவினர். இந்தக் காட்சிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<