மேற்கிந்திய தீவுகளிலிருந்து நாடு திரும்பும் ஜெப்ரி வன்டர்செய்

330

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் மணிக்கட்டு சுழல் வீரரான ஜெப்ரி வன்டர்செயை பார்படோஸில் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நாடு திரும்புமாறு பணித்திருக்கின்றது.

ஜெப்ரி வன்டர்செய் இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒழுக்கம் தொடர்பான ஒப்பந்தத்தை மீறி செயற்பட்டதே அவரை நாட்டுக்கு அழைக்க காரணம் என கூறப்படுகின்றது.

“இலங்கை கிரிக்கெட் சபை அறியத்தருவது யாதெனில், தேசிய அணியின் முகாமைத்துவம் குறிப்பிடதன்படி, தேசிய அணியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெப்ரி வன்டர்செய் இலங்கை கிரிக்கெட் சபையுடன் செய்து கொண்ட (ஒழுக்கம் தொடர்பான) ஒப்பந்தத்தை மீறி செயற்பட்டிருப்பதால், இலங்கைக்கு திருப்ப அழைக்கப்பட்டிருக்கின்றார்“ என இலங்கை கிரிக்கெட் சபையின் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.

சந்திமாலின் மேன்முறையீடு நிராகரிப்பு; அணித்தலைவராக சுரங்க லக்மால்

இந்தியாவின் கிரிக்பஸ் இணையத்தளம் இந்த விடயம் தொடர்பில் கூறியதன்படி பின்வருவனற்றை அறியக்கூடியதாக இருக்கின்றது.

“சமநிலை அடைந்த இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், வன்டர்செய் மேற்கிந்திய தீவுகளில் இருக்கும் இரவு நேர களியாட்ட விடுதியொன்றுக்கு இலங்கை அணியின் ஏனைய மூன்று வீரர்களுடன் சென்றிருக்கின்றார். தொடர்ந்து மறுநாள் காலையில் இலங்கை வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஜெப்ரி வன்டர்செய் அவரது அறையில் இருந்து காணாமல் போயிருக்கின்றார். தமது வீரர் ஒருவரை காணவில்லை என்பதால் இலங்கை அணியின் முகாமைத்துவம் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றது.  எனினும், சில மணிநேரங்களின் பின்னர் ஹோட்டலுக்கு வந்த வன்டர்செய் இரவு நேர களியாட்ட விடுதியில் தன்னுடன் வந்த ஏனைய இலங்கை வீரர்கள் தன்னை தனியாக விட்டுவிட்டு சென்று விட்டனர் என்றும், இதனாலேயே ஹோட்டலுக்கு வருவதற்கான வழி தெரியாமல் இருந்ததாகவும் கூறியுள்ளார்“

ஒழுக்க விடயங்களை வழமையாக கடைப்பிடிக்கத் தவறும் வன்டர்செய் கடந்த ஆண்டு இந்திய அணியுடனான தொடருக்கு முன்னர் உள்ளூர் போட்டிகளில் சிலவற்றில் விளையாடாது போனமைக்காக எச்சரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் சென்றிருக்கும் இலங்கை அணி இதற்கு முன்னதாக அஞ்செலோ மெதிவ்ஸ் (சொந்த விடயம்), லஹிரு கமகே (காயம்) ஆகியோரை நாட்டுக்கு அழைத்திருந்த நிலையிலேயே மூன்றாவது வீரராக ஜெப்ரி வன்டர்செயை அழைத்திருக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<