வடக்கின் கில்லாடியாக முடிசூடியது பாடும்மீன்

729
Vadakkin Killadi finals

Thepapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட “வடக்கின் கில்லாடி யார்?” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி  இன்றைய தினம் (11) அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த மோதலில், நடப்புச் சம்பியன்கள் குருநகர் பாடும் மீன்கள் அணியினை எதிர்த்து தேசிய ரீதியில் அனுபவம் வாய்ந்த வீரர்களை உள்ளடக்கிய இளவாலை யங் ஹென்றிசியன்ஸ் அணி மோதியிருந்தது.

வடக்கின் கில்லாடி யார்? பெனால்டியில் றோயலை வென்ற பாடும்மீன் இறுதிப்போட்டிக்கு

Thepapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை..

மைதானம் நிறைந்த இரசிகர்களிற்கு மத்தியில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் யாழின் கில்லாடி யார்? உதைப்பந்தாட்ட தொடரில் தொடர்ச்சியாக இரு முறைகளிலும் கிண்ணம் வென்று நடப்புச் சம்பியன்களாக ஜொலித்துக்கொண்டிருந்த பாடும் மீன் அணியினர், இம்முறை வட மாகாண ரீதியில் இடம்பெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் அணியினை 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று வடக்கின் கில்லாடி பட்டத்தினையும் தமதாக்கியுள்ளனர்.

நடப்பு வருட பிரிவு 2 கால்பந்து சுற்றின் இறுதிப் போட்டியாளர்களான பலமான பாடும் மீன் அணியும் மறுபக்கம், ஹென்றீசியன்ஸ் அணி தேசிய அணி வீரன் யூட் சுமன் மற்றும் மற்றொரு மத்திய கள வீரரான மதுசன் ஆகியோரின்றியே இந்த மொதலில் களம் நுழைந்திருந்தது.

போட்டியின் முதலாவது நிமிடத்தில் பாடும் மீனின் மத்திய களத்திலிருந்து கோல் பரப்பினை நோக்கி உதைந்த பந்தினை ஹென்றீசியன்ஸ் வீரர் கிறிஷாந்த் தடுப்பதற்கு தவற, பந்தினை பெற்றுக்கொண்ட பாடும் மீனின் ஹேய்ன்ஸ் ஹெடர் மூலம் பந்தை கோலாக்க தவறினார்.

மத்திய கோட்டிற்கு அருகில் கிடைத்த ப்ரீ கிக்கினை பிராங்கோ கோலை நோக்கி உதைய பாடும் மீனின் முன்கள வீரர்கள் அதனை கோலாக்கத் தவறினர்.

பாடும் மீன் அணி பந்தினை தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மறு பக்கம் ஹென்றீசியன்ஸ் அணி தமக்கிடையில் சீரான பிணைப்பு இல்லாது மிகவும் மந்தமான ஆட்டத்தினையே வெளிப்படுத்திக்  கொண்டிருந்தது.

ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்து ஹென்றீசியன்ஸ் வீரர் தனேஸ் உள்ளுதைந்த பந்து கோல் கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.

மலேசிய – இலங்கை நட்புறவு போட்டிக்கான அணிக் குழாம் அறிவிப்பு

இலங்கை – மலேசிய அணிகளுக்கு இடையில்…

பாடும் மீன் அணியின் விசோத் கோலினை நோக்கி பந்தினை உதைந்த போதும், பந்து கம்பத்திற்கு சற்று அகலமாக வெளியேறியது.

30ஆவது நிமிடத்தில்  ஹென்றீசியன்ஸ் அணியின் முன்கள வீரர் மற்றொரு கோல் முயற்சியாக பந்தினை எடுத்துச்செல்ல பாடும் மீனின் கப்டன் அதைத் தடுத்தார்.

ஹென்றீசியன்ஸின் அனுபவ வீரர் ஞானரூபன் வினோத் பாடும் மீனின் கோல் பரப்பினை நோக்கி வேகமாக எடுத்துச் சென்ற பந்தினை, பின் கள வீரர்கள் வெளியேற்றினர். கோணர் கிக்கினை மின்றோன் கோலை நோக்கி உதைய தனேஸ் ஹெடர் செய்த பந்து கோலிற்கு வெளியே சென்றது.

43ஆவது நிமிடத்தில் பாடும் மீனின் ஜெரிங்சன் உதைந்த பந்து நேரடியாக கோல்காப்பாளரின் கைகளில் சரணடைந்தது.

முதல் பாதியாட்டத்தின் மேலதிக நேரத்தில் பாடும்மீனிற்கு கிடைத்த கோணர் கிக்கினை இளம் வீரர் சாந்தன், கோலின் இரண்டாவது கம்பத்தினை நோக்கி உதைய விவேகமாக செயற்பட்ட விசோத் பந்தினை தலையால் கோலிற்குள் செலுத்தி தமது அணியினை முன்னிலைப்படுத்தினார்.

முதலாவது பாதி : பாடும் மீன் வி.க 1 – 0 யங் ஹென்றீசியன்ஸ் வி.க

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் சற்று வேகமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஹென்றீசியன்சிற்கு, இரண்டாவது பாதியின் 3ஆவது நிமிடத்தில் மின்றோன் உதைந்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

சில நிமிடங்களில் ஹென்றீசியன்ஸ்  அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை ஞானரூபன் உதைய, பந்து கோல் கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.

“வடக்கின் கில்லாடி யார்?” இறுதிப் போட்டியில் இளவாலை யங் ஹென்றீசியன்ஸ்

Thepapare.comஇன் ஊடக அனுசரணையில் அரியாலை…

போட்டியின் 55ஆவது நிமிடத்தில் பாடும் மீனிற்கு மைதானத்தின் இடது பக்கத்தில் கிடைத்த ப்ரீ கிக்கினை சாந்தன் கோலாக்குவதற்காக மற்றொரு முயற்சியாக வலது பக்கத்தினை நோக்கி உதைய, பந்து துரதிஷ்ட வசமாக வெளியேறியது.

ஆட்டத்தின் 62ஆவது நிமிடத்தில் மைதானத்தில் வலது பக்கத்திலிருந்து ஹென்றீசியன்சின் கோல்  கம்பந்தினை நோக்கி அனுப்பிய பந்தினை, விரைந்து செயற்பட்ட சாந்தன் பந்து கிடைக்கப்பெற்ற அதே பக்க மூலைக்கு உதைய, கோல்காப்பாளர் அமல்ராஜ் அதனை பாய்ந்து தடுத்தார்.

66ஆவது நிமிடத்தில் மைதானத்தின் வலது பக்கத்தில் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே இருந்து, கோலினை நோக்கி உதைந்த பந்து மயிரிழையில் கம்பத்திற்குமேலால் சென்றது.

போட்டியின் 76ஆவது நிமிடத்தில் மைதானத்தின் வலது பக்கத்திலிருந்து சாந்தனிற்கு சிறந்த பந்துப்பரிமாற்றம் கிடைக்கப்பெற சாந்தன் அதனை நேர்த்தியாக கோலாக மாற்றினார்.

போட்டி நிறைவை நெருங்கும் தருணமான 89ஆவது நிமிடத்தில் மின்றோன் கோலை நோக்கி பந்தினை இடது பக்கத்தினால் மிக வேகமாக எடுத்துச் செல்ல, பாடும் மீனின் கோல் காப்பாளர் பந்தினை நோக்கி முன் நகர்ந்தார். கோல் காப்பாளரினை ஏமாற்றி பந்தினை கட்டுப்படுத்திய மின்றோன் கம்பத்தின் மற்றைய மூலையினை நோக்கி தட்டி விட பந்து கம்பத்திற்கு அருகாமையினால் வெளியேறியது.

ஹென்றீசியன்சிற்கு கிடைத்த இறுதி வாய்ப்பும் நழுவிப்போக, போட்டி முழுவதிலும் ஆதிக்கம் செலுத்திய குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் தொடரில் கோல்கள் எதனையும் விட்டுக்கொடுக்காது, தமக்கான 2 கோல்களை செலுத்தி தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக அரியாலை சரஸ்வதியின் கிண்ணத்தினை தமதாக்கியுள்ளதோடு, இவ்வருடம் “வடக்கின் கில்லாடி” என்ற நாமத்தினையும் தம்வசப்படுத்தியுள்ளனர்.

>> புகைப்படங்களைப் பார்வையிட <<

தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் முதற் பதினொருவருள் பல மாற்றங்கள், வீரர்களின் நிலைகளில் மாற்றங்கள் என ஒழுங்கு படுத்தப்படாத அணியாக போட்டிகளில் மோதியிருந்த யங் ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகம் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை கோலாக்கி இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாவது இடத்தினை பெற்றுள்ளனர்.

முழு நேரம் : பாடும் மீன் வி.க 2 – 0 யங் ஹென்றீசியன்ஸ் வி.க

ஆட்டநாயகன் – ரெஜிக்குமார் சாந்தன் (பாடும் மீன் வி.க)

கோல் பெற்றவர்கள்

பாடும் மீன் வி.க – விசோத் 39’, சாந்தன் 76

விருதுகள்

  • மக்கள் மனங்கவர்ந்த வீரன் – கஜகோபன் (றோயல் வி.க)
  • தொடரின் சிறப்பாட்டக்கார் – கீதன் (பாடும் மீன் வி.க)
  • சிறந்த கோல் காப்பாளர் – பிரதீபன் (பாடும் மீன் வி.க)

மூன்றாவது இடத்திற்கான போட்டி

கிளிநொச்சி உருத்திரபுரம் வி.க எதிர் ஊரெளு றோயல் வி.க

கிளிநொச்சி உருத்திரபுரம் அணியினை 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஊரெளு றோயல் அணி மூன்றாவது இடத்தினை தமதாக்கியிருந்து.

கோல் பெற்றவர்கள்

ஊரெளு றோயல் வி.க – எடிசன் பிகுராடோ 41’ P, கபில் 80’, பிரசண்ணா 88’

கிளிநொச்சி உருத்திரபுரம் – ஹரீஸ் 62’ P

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<