ஆகஸ்டில் நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர்

161

இந்த ஆண்டுக்கான (2020) கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் (CPL), எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அதன்படி, கொரோனாா வைரஸ் தாக்கத்திற்குப் பின்னர் நடைபெறவுள்ள முதல் T20 தொடராக கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் மாறுகின்றது. 

CPL வீரர்கள் வரைவில் விலைபோகாத இலங்கை வீரர்கள்

அதேநேரம், கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் போட்டிகள் அனைத்தையும் ட்ரினிடாட் மற்றும் டொபாக்கோ என அழைக்கப்படும் தீவுகளில் நடாத்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாகவும், கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதேநேரம், கரிபியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கெடுக்கின்ற வீரர்கள், போட்டி உத்தியோகத்தர்கள் அனைவரும் ட்ரினிடாட் மற்றும் டொபாக்கோ தீவுக்கு தொடர் நடைபெறும் முன்னரே வரவழைக்கப்பட்டு 14 நாட்கள் கொண்ட சுயதனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

”எல்லா அணிகளும், போட்டி உத்தியோகத்தர்களும் ஒரே ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு அவர்கள் நாட்டில் இருக்கும் முதல் 14 நாட்களுக்கும் சுயதனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்டுத்தப்படுவர். அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது நாட்டில் இருந்து வெளியேற முன்னரும், ட்ரினிடாட் தீவுக்கு வந்த பின்னரும் (கொரோனா) பரிசோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.”

”அதேவேளை அணிகளும், போட்டி உத்தியோகத்தர்களும் சமூக இடைவெளியினைப் பேணும் வகையில் தங்கவைக்கப்படுவர். பின்னர், பாதுகாப்பு நடைமுறைகள் குறைந்த பின்னர் சிறிய ஒன்றுகூடல்களுக்கு அனுமதிக்கப்படும். ஆனால், குறித்த ஒன்றுகூடல்களில் பங்குபெறும் ஒருவருக்கு வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அதனை தொடர்ந்து குறித்த நபர் பங்குபற்றியிருந்த ஒன்றுகூடல் குழுவில் இருந்த அனைவரும் தங்களை சுயதனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்க வேண்டும்” என கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன், கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் இந்த ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்கள் இன்றிய கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, போட்டிகள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் கொரோனா வைரஸ் தொற்ற முடியாதவாறு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஒத்திவைப்பு

இந்த ஆண்டுக்கான கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ரஷீட் கான், ரொஸ் டெய்லர், மார்கஸ் ஸ்டொய்னிஸ் போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கவுள்ளதோடு, இந்தியாவைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளரான ப்ரவின் தாம்பேவும் முதல் முறையாக விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<