இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

261

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டி இன்று (10) நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-1 என தொடரை கைப்பற்றி டி20 கிண்ணத்தை சவீகரித்துக்கொண்டது.  

   

இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தார். நியூசிலாந்து அணி சார்பாக பிளைர் திக்னேர் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கியிருந்தது போட்டியின் சிறப்பம்சமாகும்.  

தமது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கொலின் மன்ரோ மற்றும் டிம் சைபேர்ட் ஆகியோரின் சிறப்பான ஆரம்பம் பாரிய ஓட்ட எண்ணிக்கையை பெற உதவியது. இருவரும் இணைந்து 80 ஓட்டங்கள் பெற்றிருந்த போது சைபேர்ட் 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்களாக 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுகாக இணைந்த மன்ரோ மற்றும் அணித்தலைவர் வில்லியம்சன் ஜோடி மேலதிகமாக 75 ஓட்டங்களை சேர்த்து அணியை மேலும் வலுப்படுத்தினர்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மன்ரோ 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளுடன் 72 ஓட்டங்களை விளாசியிருந்தார். அது தவிர கிரன்ட்ஹோம் (30) வில்லியம்சன் (27) என முக்கிய வீரர்கள் ஓட்டங்களை பெற இறுதியில் நியூசிலாந்து  அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றிய இந்திய அணி டி20 தொடரையும் கைப்பற்றும் நோக்கில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அவ்வணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்று முதலாவது ஓவரிலே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். எனினும், தொடர்ந்து களமிறங்கிய விஜய் சன்கர் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தார். இருவரும் 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது சன்கர் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பங்களாதேஷுடனான ஒருநாள் குழாமில் மார்டின் கப்டிலுக்கு அழைப்பு

அதன் பின்னர் களமிறங்கி பந்துகளை பார்வையாளர் அரங்கிற்கு பறக்க விட்ட ரிஷாஃப் பாண்ட் அதிரடியாக விளையாடி 3 சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி அடங்களாக 12 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட் போட்டியின் திருப்புமுனையாக அமைந்திருந்தது. தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா சிக்ஸருடன் தனது இன்னிங்ஸை ஆரம்பித்த போதும் அவரால் 21 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இந்திய ரசிகர்களால் மட்டுமன்றி பலராலும் எதிர்பார்க்கப்பட்ட டோனி 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, நியூசிலாந்து அணியின வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. தமது அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக் மற்றும் குருனால் பாண்டியா ஆகியோர் தம்மாலான முயற்சியை செய்திருந்த போதும் அவர்களால் வெற்றியிலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்று வெறும் 4 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

 போட்டியில் 72 ஓட்டங்களை பெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் கொலின் மன்ரோ போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானதுடன் அதே அணியின் மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான டிம் சைபேர்ட் தொடர் நாயகனாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.  

போட்டியின் சுருக்கம்

நியூசிலாந்து அணி – 212/4 (20) – மன்ரோ 72, சைபேர்ட் 43, கிரன்ட்ஹோம் 30, வில்லியம்சன் 27, குல்தீப் யாதவ் 26/2

இந்தியா அணி – 208/6 (20) – சன்கர் 43, ரோஹித் ஷர்மா 38, கார்த்திக் 33*, மிட்செல் 27/2, ஸான்ட்னர் 32/2

முடிவு : நியூசிலாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றி

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<