டெக்ஸாஸ் மெய்வல்லுனரில் உஷான், தனுஷ்கவுக்கு அதிசிறந்த பெறுபேறு

103

இலங்கையின் உயரம் பாய்தல் சம்பியனான உஷான் திவங்க பெரேரா மற்றும் நீளம் பாய்தல் சம்பயினான தனுஷ்க சந்தருவன் ஆகிய இருவரும் அமெரிக்காவில் நடைபெற்ற 94ஆவது Clyde Littlefield Texas சம்பின்ஷிப் தொடரில் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளனர்.

அத்துடன், தத்தமது பிரிவுகளில் அதிசிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய குறித்த இரண்டு வீரர்களும் உயரம் பாய்தல் மற்றும் நீளம் பாய்தல் நிகழ்ச்சிகளில் இந்த ஆண்டில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய உலகின் முதல் 10 வீரர்களுக்குள் இடம்பிடித்தனர்.

டெக்ஸாஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரானது அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய மட்டத்தில் முன்னணி மெய்வல்லுனர்கள் பங்குபற்றுகின்ற போட்டித் தொடராகும். அத்துடன், இந்தப் போட்டித்தொடரானது A மற்றும் B பிரவு என இரண்டு பிரிவுகளாக இடம்பெறும்.

இந்த நிலையில், ஆண்களுக்கான A பிரிவு உயரம் பாய்தலில் பங்குகொண்ட உஷான் பெரேரா, 2.27 மீட்டர் உயரத்தைத் தாவி 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அத்துடன், இந்த ஆண்டின் 2ஆவது அதிசிறந்த உயரத்தையும் அவர் பதிவுசெய்தார்.

எவ்வறாயினும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய மற்றும் ஆசிய விளையாட்டு விழாவுக்கான அடைவு மட்டத்தை (2.25 மீட்டர்) உஷான் பெரேரா ஏற்கனவே பூர்த்தி செய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, குறித்த போட்டியில் 2.30 மீட்டர் உயரத்தைத் தாவிய அமெரிக்க வீரர் வெர்னன் டர்னர்ட் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, ஆண்களுக்கான A பிரிவு நீளம் பாய்தலில் பங்குகொண்ட தனுஷ்க சந்தருவன், 8.10 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்து இந்த ஆண்டின் 7ஆவது அதிசிறந்த தூரத்தை நிலைநாட்டிய வீரராக இடம்பிடித்தார்.

எனினும், குறித்த போட்டியில் காற்றின் வேகம் 2.0 இனால் அதிகரித்ததாக பதிவாகியதன் காரணமாக தனுஷ்க சந்தருவனின் தூரம் இலங்கை சாதனைiயாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக, இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கான அடைவுமட்டத்தைப் பூர்த்தி செய்த தூரமாக அது இடம்பிடித்தது.

எவ்வாறாயினும், குறித்த போட்டியில் தனுஷ்க 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, 8.45 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்த பிரித்தானிய வீரர் ஜேகாப் டுக்ஸ் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

28 வயதான தனுஷ்க சந்தருவன், 2019ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<