உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக கருதப்படுபவர் உசைன் போல்ட். 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 தொடர் ஓட்டம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் இந்த மூன்று பிரிவுகளில் தங்கம் வென்றார்.

அடுத்த மாதம் ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் இதே பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைக்கும் நோக்கத்தில் உசைன் போல்ட் இருக்கிறார். 29 வயதாகும் இவரது நோக்கத்தை தவிடுபொடியாக்கும் நிலையில் காயம் அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்த ஒலிம்பிக்தான் தன்னுடைய கடைசி தொடராக இருக்கும் என்ற வகையில் போல்ட் கூறி வருகிறார்.

இந்நிலையில்தான் கடந்த வாரம் ஜமைக்கா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உசைன் போல்ட் தொடைப்பகுதியில் ஏற்பட்ட சவ்வு கிழிவின் காரணமாக தன்னால் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினார். இதனால் அவரை மருத்துவ உதவி எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

அவரும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வரும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த வார தொடக்கத்தில் பிரான்ஸ் சென்று ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். அப்போது லேசான உடற்பயிற்சி எடுத்துக்கொண்டாக தெரிகிறது.

நான் காயத்தில் இருந்து மீண்டு 22ஆம் திகதி  நடைபெற இருக்கும் லண்டன் ஆண்டு விழா போட்டியில் என்னுடைய உடற்தகுதியை  நிரூபிப்பேன் என்றார்.

இந்நிலையில்தான் ஜமைக்கா தடகள நிர்வாக அசோசியேசன் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் நான்கு பேர் கொண்ட பட்டியலை ஜமைக்கா ஒலிம்பிக் சங்கத்திற்கு அளித்தது. இதில் உசைன் போல்ட் பெயர் இடம்பெற்றிருப்பதாக ஜமைக்கா ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஜமைக்கா சார்பில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு மூன்று பேர்தான் கலந்து கொள்ள முடியும். இந்த மூன்று பேர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அணி நிர்வாகத்தின் முடிவுக்கு விடப்பட்டுள்ளது.

ஒருவேளை லண்டன் சாம்பியன்ஷிப்பில் போல்ட் தனது உடற்தகுதியை நிரூபிக்க தவறினால் ஜமைக்கா சாம்பியன்ஷிப் போட்டியில் 3-வது இடம் பிடித்த நபர் ரியோவிற்கு தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கிடையே லண்டன் ஆண்டுவிழா போட்டியில் கலந்து கொள்வது குறித்து யூடியூபில் போல்ட் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் உசைன் போல்ட். அதில் ‘‘நான் உசைன் போல்ட். நான் எல்லோருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எல்லோரும் வந்து லண்டன் போட்டியில் நான் ஒடுவதை கவனியுங்கள். நான் அங்கே இருப்பேன். லண்டன் வர நான் ஆவலாக உள்ளேன். ரசிகர்கள் அங்கு வந்து எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்