2026 பிஃபா உலகக் கிண்ணம் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில்

158

எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை முதற்தடவையாக அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.

ரஷ்யாவில் 32 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி வரை மொஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் சொச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடைபெற உள்ளன. இந்த உலகக் கிண்ணத்தை தொடர்ந்து, 22ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் கட்டாரில் 2022இல் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணத்தின் வரலாற்றுக் கதை

பிஃபா என்ற வார்த்தையைத் தெரியாத விளையாட்டு…

இந்நிலையில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் 68ஆவது வருடாந்த காங்கிரஸ் மாநாடு மொஸ்கோ நகரில் நேற்று (13) நடைபெற்றது. பிஃபாவில் அங்கம் வகிக்கும் 211 உறுப்பினர் நாடுகளில் 200 நாடுகளின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். அப்போது 23ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நடைபெறும் இடத்தை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய ஒருங்கிணைந்த நாடுகளுக்கு எதிராக மொரோக்கோ போட்டியிட்டது. இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் வட அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவாக 134 வாக்குகளும், மொரோக்கோவுக்கு ஆதரவாக 65 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.

இதன்படி, எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, 32 வருடங்களுக்குப் பிறகு வட அமெரிக்காவில் பிஃபா உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

முதன்முறையாக 3 நாடுகள் இணைந்து உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்தவுள்ளன. முன்னதாக 2002இல் ஜப்பானும், வட கொரியாவும் இணைந்து உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தியிருந்தன. அத்துடன், முதன்முறையாக இந்தப் போட்டிகளில் 48 அணிகள் கலந்துகொள்ள உள்ளன.

2018 உலகக் கிண்ணம்: ஜெர்மனி அணியின் முன்னோட்டம்

கடைசியாக 1962 ஆம் ஆண்டு பிரேசில் அணியாலேயே..

அத்துடன், 16 நகரங்களில் நடைபெறவுள்ள 2026 உலகக் கிண்ணத்தில் 80 போட்டிகளில் 60 போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறும். இதில் காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளும் அங்கு நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி நியூயோர்க்கில் உள்ள மெட் லைப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கனடாவில் 10 போட்டிகளும் மெக்சிகோவில் 10 போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 1970 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிஃபா உலகக் கிண்ணப் போட்டிகள் மெக்சிகோவிலும், 1994ஆம்ஆண்டு நடைபெற்ற 15ஆவது பிஃபா உலகக் கிண்ணப் போட்டிகள் அமெரிக்காவிலும் நடைபெற்றன. இதில் கனடா முதற்தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். எனினும், 2015இல் மகளிருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளை கனடா நடத்தியிருந்தது.   

அத்துடன், இந்த மூன்று நாடுகளும் உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய தேவையிருக்காது. நேரடியாகவே உலகக் கிண்ணத்தில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<