இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரில் (WPL) விளையாடும் வாய்ப்பை இலங்கை மகளிர் அணியின் தலைவியும், நட்சத்திர வீராங்கனையுமான சமரி அத்தபத்து பெற்றுக்கொண்டுள்ளார்.
இதன்படி, இம்முறை மகளிர் பிரீமியர் லீக்கில் யுபி வொரியர்ஸ் (Up Warriorz) அணிக்காக விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக்கில் ஆடும் முதல் இலங்கை கிரிக்கெட் வீராங்கனையாக அவர் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லோரன் பெல் இம்முறை மகளிர் பிரீமியர் லீக்கில் யுபி வொரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எனினும், குறித்த காலப்பகுதியில் நியூசிலாந்து மகளிர் அணியுடன் நடைபெறவுள்ள சர்வதேச போட்டித் தொடரில் விளையாடுவதற்கு அவர் கவனம் செலுத்தவுள்ளதால் இம்முறை மகளிர் பிரீமியர் லீக்கில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அவருக்குப் பதிலாக மாற்றீடு வீராங்கனையாக சமரி அத்தபத்துவை ஒப்பந்தம் செய்ய யுபி வொரியர்ஸ் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக, இம்முறை மகளிர் பிரீமியர் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சமரி அத்தபத்து 30 இலட்சம் ரூபா அடிப்படை விலைக்கு தனது பெயரை பதிவு செய்திருந்தார். எனினும், அவரை எந்தவொரு அணியும் ஏலத்தில் வாங்கவி;ல்லை.
2023இல் சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் சமரி அத்தபத்து அதீத திறமைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் அவரை எந்தவொரு அணியும் வாங்க முன்வரவில்லை. இதற்கு பலரும் எதிர்ப்பினை தெரிவித்திருந்ததுடன், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.
- ஐசிசியின் 2023ம் ஆண்டுக்கான சிறந்த T20I அணியின் தலைவியாகிய சமரி அதபத்து
- ஐசிசியின் சிறந்த வீரராக மகுடம் சூடிய பெட் கம்மின்ஸ்!
- WBBL தொடரில் ஒப்பந்தமாகிய முதல் இலங்கை வீராங்கணையாக சாமரி
இவ்வாறானதொரு பின்னணியில் சமரி அத்தபத்துவை அடிப்படை விலையான 30 இலட்சம் ரூபாவிற்கு யுபி வொரியர்ஸ் அணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இது இலங்கை பணப்பெறுமதியில் சுமார் 11.5 மில்லியன் ரூபாவாகும்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வருடாந்தம் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து தட்டிச்சென்றார்.
ஐசிசி இன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணி மற்றும் ஐசிசி இன் மகளிர் T20 கிரிக்கெட் அணி ஆகியவற்றின் தலைவியாக ஐசிசியினால் பெயரிடப்பட்டிருந்த அத்தபத்துவின் திறமைக்கு இந்த விருது சான்று பகர்கின்றது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 13 ஆண்டுகளாக ஆடிவரும் 33 வயதான சமரி அத்தபத்து வென்றெடுத்த முதலாவது அதி உயரிய ஐசிசி விருது இதுவாகும்.
2024ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் பெப்ரவரி 23ஆம் திகதி முதல் மார்ச் 17ஆம் திகதி வரை டெல்லி மற்றும் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் டெல்லி கெபிடல்ஸ், குஜராத் ஜயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யுபி வொரியர்ஸ் என்று 5 அணிகள் இடம்பெற்று விளையாடுகின்றன.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<