சகீபின் இடத்தை நஸ்முல் எவ்வாறு நிரப்புவார்?

291
Uncapped Nazmul

இலங்கை அணிக்கு எதிராக நாளை(15) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட T-20 தொடரில் இருந்து பங்களாதேஷ் அணியின் தலைவரும், சகலதுறை ஆட்டக்காரருமான சகிப் அல் ஹசன் உபாதை காரணமாக விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக இளம் வீரர் நஸ்முல் இஸ்லாம் அபு அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் பலரது எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

[rev_slider LOLC]

இலங்கையுடனான T-20 தொடரில் இருந்து விலகும் சகிப் அல் ஹசன்

இலங்கை மற்றும் பங்களாதேஷ்…

குறித்த T-20 தொடருக்கான பங்களாதேஷ் குழாம் கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இக்குழாமில் ஐந்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது. அதில் கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த அபூ ஜயெத் ராஹி, ஆரிபுல் ஹக், மெஹெதி ஹஸன், சாகிர் ஹசன் மற்றும் அபிப் ஹொஸைன் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.    

அதேவேளை, இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாத சகீப் அல் ஹஸனையும் இக்குழாத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் பின்னர், சகீபின் உபாதை முழுமையாக குணமாகவில்லை என்பதால் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ள T-20 தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை அணிக்கெதிரான T-20 தொடரிலும் பங்களாதேஷ் அணியை மஹ்முதுல்லாஹ் ரியாத் வழிநடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் T-20 அணியின் அபாரமாக விளையாடி வருகின்ற வீரர்களில் ஒருவராக கருதப்படுகின்ற மஹ்முதுல்லாஹ், 2013ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர்களில் இறுதிப் போட்டிவரை வந்த சிட்டகொங் கிங்கஸ், பரிசால் புல்ஸ் அணிகளை வழிநடாத்தியிருந்தார். அத்துடன், கடந்த முறை தொடரில் புதிதாக இணைந்துகொண்ட குல்னா டைடன்ஸ் அணியையும் அவர் வழிநடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கையின் வெற்றியோட்டம் பங்களாதேஷுடனான T-20 போட்டிகளிலும் தொடருமா?

தாகத்தில் இருந்த ஒருவருக்கு நீர் ஊற்று ஒன்றினைக்…

அதேபோன்று, சகீபிற்குப் பதிலாக இளம் வீரரான நஸ்முல் இஸ்லாம் அபுவை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று(13) அறிவித்தது. இதனால் நஸ்முல் சர்வதேச T-20யில் பங்களாதேஷ் அணியில் முதல் முறை இணைகின்றார்.

26 வயதுடைய இடதுகை சுழற்பந்துவீச்சாளரான நஸ்முல் இஸ்லாம், கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியிருந்ததுடன், 10 இன்னிங்ஸ்களில் 12 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

அதுமாத்திரமின்றி, இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்காக கடந்த டிசம்பர் மாதம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்ட 32 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம்பெற்றிருந்த அவர், பங்களாதேஷ் உள்ளூர் முதல்தர T-20 போட்டிளில் இதுவரை 50 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.  

நீண்ட கால அனுபவமும், சகலதுறையில் சர்வதேச மட்டத்தில் பிரகாசித்த வீரருமான சகீபிற்குப் பிரதியீடாக உள்ளூர் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் என்பவற்றில் பிரகாசித்த இந்த இளம் வீரர் உள்வாங்கப்பட்டுள்ளமை பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்ட பலருக்கு பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம் வீரர்கள் படையைக் கொண்டுள்ள பங்களாதேஷ் அணியில் புதிதாக இணையும் நஸ்முல் இஸ்லாம் இத்தொடரில் பிரகாசிக்கும் பட்சத்தில் அவர் மற்றொரு வீரரின் இடத்திற்கு நிரந்தரமாக்கப்படுவாரா? அல்லது இந்த தொடரின் பின்னர் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவாரா என்ற விடயமும் பலரது கேள்வியாக உள்ளது.  

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது T-20 போட்டி பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி டாக்காவில் நடைபெறவுள்ளதோடு இரண்டாவது போட்டி சில்ஹெட்டில் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.    

பங்களாதேஷ் குழாம்

மஹ்முதுல்லாஹ் ரியாத் (தலைவர்), தமீம் இக்பால், சௌம்யா சாகர், முஷ்பிகுர் ரஹீம், சபிர் ரஹ்மான், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபெல் ஹொஸைன், மொஹமது சைபுத்தீன், அபூ ஹைதர், அபூ ஜயெத், ஆரிபுல் ஹக், மெஹெதி ஹசன், சகிர் ஹசன், ஹபீப் ஹொஸைன், நஸ்முல் இஸ்லாம் அபு