இலங்கையுடனான T-20 தொடரில் இருந்து விலகும் சகிப் அல் ஹசன்

746
BCB official website

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட T-20 தொடரிலும் பங்களாதேஷ் அணியின் தலைவரும், சகலதுறை ஆட்டக்காரருமான சகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று(11) அறிவித்தது.  

[rev_slider LOLC]

இலங்கைக்கு எதிரான T20 தொடரில் 7 மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள பங்களாதேஷ்

இலங்கைக்கு எதிரான எதிர்வரும் T20 கிரிக்கெட் தொடருக்கு பங்களாதேஷ் புதிய குழாம் …

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட T-20 தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாம் கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் ஐந்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த அந்நாட்டு கிரிக்கெட் சபை, இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாத சகிப் அல் ஹஸனையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், சகிபின் உபாதை முழுமையாக குணமாகவில்லை என்பதால் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ள T-20 தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் மின்ஹாஜுல் ஆப்டீன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், T-20 குழாமில் சகிப் இணைக்கப்பட்டுள்ள போதிலும், அவர் தொடரில் விளையாடுவது இதுவரையில் உறுதியாகவில்லை. சகிப் அல் ஹசனின் உபாதை குறித்து கருத்து தெரிவித்துள்ள வைத்தியர்கள் சகிப் அல் ஹசன் இன்னும் இரு வாரங்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர். அதுமாத்திரமின்றி தற்போது அவருடைய கைவிரலில் போடப்பட்ட கட்டுக்கள் அகற்றப்பட்டாலும், அது குணமடைவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படுகின்றது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடரை கருத்திற்கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”  எனத் தெரிவித்தார்.   

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரரும், இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் முதல் புதிய அணித்தலைவராக நியமிக்கப்பட்டவருமான 30 வயதுடைய சகிப் அல் ஹசன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இறுதியாக இடம்பெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியின் போது இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலின் பிடியெடுப்பொன்றை மேற்கொள்ள முற்பட்ட வேளையிலேயே மைதானத்தில் விழுந்து உபாதைக்குள்ளானார்.  

இலங்கை டெஸ்ட் அணியின் புதிய பயணம் ஒன்று ஆரம்பம் – ஹேரத்

பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை அணி 215 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இரண்டாவது …

இதன்போது வலது கைவிரலில் ஏற்பட்ட திடீர் உபாதை காரணமாக அவருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 3 வாரங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து சகிப் அல் ஹசன் விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக அணியை மஹ்மதுல்லாஹ் ரியாத் வழிநடத்தினார். எனவே எஞ்சியுள்ள 2 போட்டிகளைக் கொண்ட T-20 தொடரிலும் பங்களாதேஷ் அணியை மஹ்மதுல்லாஹ் வழிநடாத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்தவருட முற்பகுதியில் இலங்கை அணிக்கெதிரான சுற்றுப்பயணத்தின் போது பங்களாதேஷ் T-20 அணியின் தவைராகச் செயற்பட்ட மஷ்ரபி முர்தஷா, சர்வதேச T-20 அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து சகிப் அல் ஹசனை T-20 அணித் தலைவராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது T-20 போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (15) டாக்காவில் நடைபெறவுள்ளதோடு இரண்டாவது போட்டி சில்லெட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.