ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கை இலகுவாக எடுத்துக்கொண்டதா இலங்கை?

ICC T20 World Cup 2022

1322

ஆப்கானிஸ்தான் தொடரில் மூன்று வெற்றிகளை பெற்றால் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத்துக்கு நேரடி தகுதியை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்த இலங்கை அணிக்கு பேரதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

முதல் போட்டியில் தோல்வி. இரண்டாவது போட்டியில் மழை என இருந்த போதும், மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்தியிருக்கின்றது.

>> பங்களாதேஷ் ஒருநாள் அணிக்கு புதிய தலைவர்!

போராடி தொடரை சமப்படுத்திய இலங்கை அணிக்கு 30 புள்ளிகள் என்ற நம்பிக்கையிலிருந்து 15 புள்ளிகள் மாத்திரமே கிடைத்திருக்கின்றன. இந்த 15 புள்ளிகள் 77 புள்ளிகளுக்கு இலங்கை அணியை அழைத்துச்சென்றுள்ள போதும், 8வது இடத்தை இலங்கை அணியால் பிடிக்கமுடியவில்லை.

இலங்கை 77 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் சுபர் லீக் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளதுடன் மேற்கிந்திய தீவுகள் 88 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கைக்கு இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்த மூன்று போட்டிகளும் நியூசிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்தில் நடைபெறவுள்ளன.

ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கில் ஆப்கானிஸ்தான் அணியுடன் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள ஒரு இடத்துக்காக இலங்கை, அயர்லாந்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் போட்டியிடுகின்றன.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறிய முன்னேற்றத்தை இலங்கை அணி கண்டிருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கிற்கான தங்களுடைய 21 போட்டிகளில் 7 வெற்றிகளை மாத்திரே இலங்கை இதுவரையிலும் பெற்றிருக்கிறது. இதில் 2 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளதுடன், 12 போட்டிகளில் தோல்வி.

ஐசிசியின் ஒருநாள் சுபர் லீக்கின் ஆரம்பம் இலங்கைக்கு மிக மோசமாக அமைந்திருந்தது. முதல் தொடரில் திமுத் கருணாரத்ன தலைமையில் மேற்கிந்திய தீவுகளை அவர்களுடைய சொந்த மண்ணில் சந்தித்த இலங்கை அணி 3-0 என வைட்வொஷ் முறையில் தொடரை இழந்தது.

>> “தசுன் ஷானகதான் எனக்கு வாய்ப்பை பெற்றுத்தந்தார்” – சரித் அசலங்க!

திமுத் கருணாரத்னவின் பிரகாசிப்பு அவருடைய இடத்தை கேள்விக்குறியாக்கிய நிலையில், அடுத்து நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் குசல் பெரேராவின் தலைமையில் இலங்கை களமிறங்கியது. குறித்த இந்த தொடரை 2-1 என இழந்தது. இலங்கையின் துடுப்பாட்டம் மிகப்பெரிய கேள்விகளை இந்த தொடரில் ஏற்படுத்தியிருந்தது. மூன்று போட்டிகளிலும் குசல் பெரேரா ஒரு சதத்தை பெற, தனன்ஜய டி சில்வா மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் மாத்திரமே அரைச்சதங்களை பெற்றிருந்தனர்.

இரண்டு தொடர் தோல்விகளை சந்தித்திருந்த இலங்கை மீண்டும் குசல் பெரேராவின் தலைமையில் உலகக்கிண்ண நடப்பு சம்பியன் இங்கிலாந்தை அவர்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. இதில் மூன்றாவது போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட, 2-0 என இலங்கை தோல்வியடைந்து நாடு திரும்பியது.

மூன்று தொடர் தோல்விகளை அடுத்து இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக தசுன் ஷானக நியமிக்கப்பட்டார். தசுன் ஷானகவின் தலைமைத்துவத்தில் இந்தியாவை தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்ட இலங்கை அணி 1-2 என தொடரை இழந்தது. எனவே தொடர்ச்சியாக நான்கு தொடர்களை இலங்கை அணி இழக்க ஐசிசியின் சுபர் லீக்கில் மேலும் பின்னடைவை சந்தித்தது.

இவ்வாறான தோல்விகளுக்கு மத்தியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளைாடிய இலங்கை அணி 2-1 என வெற்றிபெற்று, ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கில் முதல் தொடரை வெற்றிக்கொண்டது. இந்த தொடர் வெற்றிக்கு பின்னர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடியதுடன், இதில் ஒரு போட்டியில் தோல்வியடைந்து 2-1 என தொடர் வெற்றியை பெற்றுக்கொண்டது.

குறிப்பிட்ட இந்த இரண்டு தொடர்களை மாத்திரமே இலங்கை ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கில் வெற்றிபெற்றிருக்கிறது. இந்த தொடருக்கு அடுத்து தற்போது நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை 1-1 என சமப்படுத்தியிருந்தது.

இலங்கை அணியின் மோசமான ஆரம்ப போட்டிகள் இலங்கை அணியின் தற்போதைய நிலைக்கு வித்திட்டிருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை தவிர்த்து பங்களதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்களை வெற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தன.

>> மூன்றாவது ஒருநாள் போட்டியின் வெற்றிக்கான காரணத்தை கூறும் தசுன் ஷானக!

ஏற்கனவே நாம் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியிருப்பதுடன், மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் இதற்கு முதல் சந்திப்பில் 3-0 என வீழ்த்தியிருந்தோம். அதுமாத்திரமின்றி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு தோல்வி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி தொடர் என்பன இலங்கை அணியின் நேரடி தகுதி வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன.

இந்த தோல்விகளுக்கு முக்கியமான காரணமாக அணித்தலைமைத்துவத்தில் தொடர்ந்து மாற்றங்கள், வீரர்களின் உபாதை, அணித் தேர்வில் குழப்பங்கள் மற்றும் வீரர்களின் பிரகாசிப்புகள் என பல விடயங்களை சுட்டிக்காட்டலாம். எனினும், இந்திய தொடரிலிருந்து ஒரு கட்டமைப்பை உருவாக்கிய நிலையில், அணி தொடர்களை வெற்றிக்கொள்ள தவறினாலும், தொடர் தோல்விகளின் எண்ணிக்கையும், போட்டிகளின் தோல்விகளும் குறைந்துள்ளன.

ஆனால் இலங்கை அணியின் பயணம் நிறைவுக்குவரவில்லை. அடுத்த உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறுவதற்கு இலங்கை அணி மிஞ்சியிருக்கும் 3 போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்றே ஆகவேண்டும். அப்படி வெற்றிபெற்றாலும் தகுதிபெறமுடியுமா? என்ற கேள்வி இருக்கிறது.

இந்த ஒரு இடத்துக்கான போட்டியில் இலங்கை, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் போட்டியிடுகின்றன. எனவே எஞ்சியிருக்கின்றன போட்டிகளின் படி, அணிகளிக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?

இலங்கை அணிக்கான வாய்ப்புகள்

இலங்கை அணிக்கு மீதம் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளன. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த 3 போட்டிகளில் குறைந்தது 2 போட்டிகளில் இலங்கை வெற்றிபெறவேண்டும்.

அப்படி இலங்கை அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றாலும், தென்னாபிரிக்க அணி எஞ்சியுள்ள தங்களுடைய 5 போட்டிகளில் 3 போட்டிகளுக்கு அதிகமாக வெற்றிபெறக்கூடாது. அதேநேரம் இலங்கை அணி தங்களுடைய மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றால், தென்னாபிரிக்க அணி குறைந்தது ஒரு போட்டியில் தோல்வியடைய வேண்டும். அதேநேரம் மீதமுள்ள 3 போட்டிகளில் அயர்லாந்து அணி ஒரு தோல்வியினை சந்திக்கவேண்டும்.

இலங்கை அணியை பொருத்தவரை இது இலகுவான விடயமாக அமையாது. 2001ம் ஆண்டுக்கு பின்னர் நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை வென்றதில்லை. அதேநேரம் தற்போது ஐசிசி சுபர் லீக்கின் இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி 2019ம் ஆண்டுக்கு பின்னர் தங்களுடைய சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியொன்றில் தோல்வியடைந்ததில்லை. எனவே இதுவொரு மிகப்பெரிய சவாலாக மாறும்.

>> 2023 World Cup: இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதக நிலை! | Sports RoundUp – Epi 227

தென்னாபிரிக்க அணிக்கான வாய்ப்புகள்

தென்னாபிரிக்க அணிக்கு மீதம் 5 போட்டிகள் உள்ளன. தென்னாரிக்க அணி தகுதிபெறுவதற்கு குறைந்தது மூன்று போட்டிகளில் வெற்றிபெறவேண்டும். எனினும் இலங்கை மேலும் இரண்டு வெற்றிகளையும், அயர்லாந்து அணி மேலும் மூன்று வெற்றிகளையும் பெற்றால் தென்னாபிரிக்க அணி நான்கு வெற்றிகளை பெறவேண்டும்.

தென்னாரிக்க அணி தங்களுடைய அடுத்த 5 போட்டிகளையும் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் அடங்குகின்றன.

அயர்லாந்து அணிக்கான வாய்ப்பு

அயர்லாந்து அணியானது மிகுதி உள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும். அயர்லாந்து அணி இந்த மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றாலும், இலங்கை அணி தங்களுடைய அடுத்த 2 வெற்றிகளுக்கும், தென்னாபிரிக்க அணி 3 வெற்றிகளுக்கும்  அதிகமாக வெற்றிபெறாமல் இருக்கவேண்டும்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கான வாய்ப்பு

ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி தங்களுடைய அனைத்து போட்டிகளிலும் விளையாடி 88 புள்ளிகளை பெற்றுள்ளது. எனவே அயர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் 2 போட்டிகளுக்கு அதிகமாகவும், இலங்கை அணி ஒரு போட்டிக்கு அதிகமாகவும் வெற்றிபெறக்கூடாது. இப்படி போட்டிகள் நிறைவடைந்தால் மாத்திரமே மே.தீவுகள் அணி தகுதிபெறும்.

அயர்லாந்து அணி இன்னும் 2 வெற்றிகளுடன் 88 புள்ளிகளை பெற்றாலும், வெற்றிகளின் அடிப்படையில் மே.தீவுகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும்.

எனவே இவ்வாறான போட்டி முடிவுகளை கருத்திற்கொண்டே ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கிற்கு எந்த அணி நேரடியாக தகுதிபெறும் என்பதை உறுதிசெய்ய முடியும். இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மார்ச் மாதத்தில் விளையாடவுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் இலங்கை அணியின் இறுதி வாய்ப்பு. நியூசிலாந்து அணி அவர்களுடைய சொந்த மண்ணில் பலமான பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் 2023ம் IPL தொடர் மார்ச் இறுதி பகுதியில் ஆரம்பமாகின்றது. இதனால் முன்னணி வீரர்கள் பலர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.

எனவே, இதனை பயன்படுத்திக்கொண்டு இலங்கை அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றால் உலகக்கிண்ணத்துக்கான நேரடி தகுதியை பெற்றுக்கொள்ள முடியும். எனவே கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு நியூசிலாந்து தொடரில் இலங்கை வெற்றிபெறவேண்டும் என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு.

>> கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<