ஒலிம்பிக் முதல் நாள் போட்டிகளில் களமிறங்கும் இலங்கை வீரர்கள்

Tokyo Olympic - 2020

316

32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் எளிமையான ஆரம்ப விழாவுடன் நாளை (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

எனினும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான இரண்டு விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் டோக்கியோவிலும், சப்போரோ, மியாகி மற்றும் புக்குஷிமா ஆகிய இடங்களிலும் நேற்று ஆரம்பமாகின. 

இதில் பெண்களுக்கான முதல்சுற்று மென்பந்து (Softball) போட்டிகளும்,   பெண்களுக்கான முதல்சுற்று கால்பந்தாட்டப் போட்டிகளும் நடைபெற்றன. 

இலங்கை ஒலிம்பிக் குழு இன்று டோக்கியோ புறப்படுகிறது

இந்த நிலையில், ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்கள் கடந்த 17ஆம் திகதி முதல் டோக்கியோவை சென்றடைந்த வண்ணம் உள்ளதுடன், பெரும்பாலான வீரர்கள் தங்களது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். 

இதனிடையே, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளான 24ஆம் திகதி சனிக்கிழமை பெரும்பாலான இலங்கை வீரர்கள் தமது முதல் சுற்றுப் போட்டிகளில் களமிறங்கவுள்ளனர். இதற்கான போட்டி அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது. 

இதில் இலங்கையின் நட்சத்திர பெட்மிண்டன் வீரரான நிலூக கருணாரத்ன, நீச்சல் வீராங்கனை அனிக்கா கபூர் மற்றும் துப்பாகி சுடுதல் வீராங்கனை டெஹானி எகொடவெல ஆகிய மூவரும் தமது முதல் சுற்று போட்டிகளில் களமிறங்கவுள்ளனர்.

டெஹானி எகொடவெல

பெண்களுக்கான 10 மீற்றர் எயார் ரைபல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் முறையாக ஒலிம்பிக் வரத்தைப் பெற்றுக்கொண்டுள்ள டெஹானி எகொடவெல, இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக போட்டிகளில் களமிறங்கும் முதலாவது வீரர் ஆவார். இவரது போட்டி 24ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அனிக்கா கபூர்

இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள மிகவும் வயது குறைந்த (17 வயது) வீராங்கனையான அனிக்கா கபூர், போட்டிகளின் முதல் நாளில் பெண்களுக்கான வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

ஒலிம்பிக் கிராமத்தில் 2 கால்பந்து வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று

முதல் முறையாக ஒலிம்பிக்குக்கு தெரிவாகியுள்ள அனிக்கா கபூரின் போட்டியானது இலங்கை நேரப்படி 24ஆம் திகதி மாலை 3.55 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இறுதியாக 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 2 பதக்கங்களை அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நிலூக கருணாரத்ன 

3ஆவது தடவையாக ஒலிம்பிக்கில் பங்குபற்றியுள்ள 36 வயதான நிலூக கருணாரத்ன, முதல் போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய வேன்ங் வேயை சந்திக்கவுள்ளார். 

நிலூக கருணாரத்னவின் அனுபவம் அவருக்கு இந்தப் போட்டியில் வெற்றியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Video – ஜிம்னாஸ்டிக்கில் கலக்கப் போகும் சிங்கப் பெண் Milka De Silva..!| Tokyo Olympics 2020

எனினும், உலக பெட்மிண்டன் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள குறித்த சீன நாட்டு வீரர் இறுதியாக 2018இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பெட்மிண்டன் குழு நிலைப் போட்டியில் பங்குபற்றி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, நிலூக கருணாரத்ன பங்குபற்றவுள்ள 24ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு (இலங்கை நேரம்) ஆரம்பமாகவுள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக் தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை உடனுடக்குடன் அறிந்துகொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள்.

மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…