இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் உமேஷ் யாதவ்

198
Umesh yadav

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து அணி  நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  

>> IPL வீரர்கள் ஏலத்தில் இடம்பிடித்துள்ள வியாஸ்காந்த்

சென்னையில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினைப் பெற்ற நிலையில் தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. 

இதனிடையே கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டில் இடம்பெற்ற வீரர்கள் பெரும்பாலும் அப்படியே இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளனர்

எனினும், வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் மட்டும் விஜய் ஹசாரே கிண்ணத்தில் விளையாட விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக உடற்தகுதியை நிரூபித்த பிறகு, உமேஷ் யாதவ் அணியில் இணைவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசித்தத் தவறிய சுழல்பந்து வீச்சாளர் பாஸ் நதீம், மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதில் ஸ்ரீகர் பரத், ராகுல் சஹார் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்

அத்துடன், சென்னை டெஸ்ட்டில் வலைப்பயிற்சியில் பந்து வீசிய அவேஷ் கான், சந்தீப் வாரியர், கிருஷ்ணப்பா கவுதம், சவுரப் குமார், ராஜ்புத் என ஐந்து வீரர்களும் அஹமதாபாத்துக்கும் செல்கின்றனர்.  

>> பெயர் மாற்றம் மேற்கொள்ளும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இதுஇவ்வாறிருக்க, இறுதியாக நடைபெற்ற அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் காயமடைந்த மொஹமட் ஷமி மற்றும் ஜடோஜா ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு உடற்தகுதி பெறவில்லை என்பதால் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணி விபரம்:

ரோஹித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விராத் கோஹ்லி (தலைவர்), அஜிங்கியே ரஹானே, ரிஷாப் பண்ட், விருத்திமன் சஹா, ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, மொஹமட் சிராஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் 

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<